பிலிப்பீன்சில் உரிமைகள் காக்கப்பட போராட்டம் பிலிப்பீன்சில் உரிமைகள் காக்கப்பட போராட்டம் 

பசுமைபுரட்சி ஆர்வலர்களுக்கு ஆபத்தான நாடு பிலிப்பீன்ஸ்

2018ம் ஆண்டில், நில உரிமைகள் தொடர்பாக, பிலிப்பீன்சில் 30, கொலம்பியாவில் 24, இந்தியாவில் 23, பிரேசிலில் 20 என, மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்சில், அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்தே அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அந்நாட்டில் 113 சூழலியல் ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளவேளை, பிலிப்பீன்ஸ், உலகில் சூழலியல் ஆர்வலர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்று, Global Witness எனப்படும் மனித உரிமை கண்காணிப்பாளர் அமைப்பு கூறியுள்ளது.

இச்செவ்வாயன்று இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பிலிப்பீன்ஸ் நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில், 113, சூழலியல் மற்றும், மனித உரிமை ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில் துத்தர்தே அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 65 ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர், ஆனால் அவரது ஆட்சியில், அவ்வெண்ணிக்கை, ஏறக்குறைய இருமடங்காகியுள்ளது எனவும், அந்த அறிக்கை கூறுகிறது.

இக்கொலைகளில் 46 விழுக்காடு அரசுப் படைகளாலும், 44 விழுக்காடு, மின்டனாவோ தென்பகுதி மாநிலத்திலும் இடம்பெற்றுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டில் நில உரிமைகள் தொடர்பாக நடத்தப்பட்டுள்ள கொலைகளில் பிலிப்பீன்ஸ் நாட்டிலே அதிகம் எனவும், அந்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 30 பேர் கொல்லப்பட்டனர் எனவும், கொலம்பியாவில் 24, இந்தியாவில் 23, பிரேசிலில் 20 எனவும் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், Global Witness அறிக்கை குறிப்பிட்டுள்ளது. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2019, 16:53