தேடுதல்

Vatican News
இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்துவரும் பழங்குடிஇனத்தவர் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்துவரும் பழங்குடிஇனத்தவர் 

பூமியில் புதுமை – 'நாங்களே எதிர்காலம்!' என்று கூறும் இளையோர்

திருத்தந்தை - இயற்கையின் அழிவினால், மனிதகுலத்தின் மரணம் அருகில் வந்திருப்பது, என்னை அதிகம் அச்சுறுத்துகின்றது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

இவ்வுலகத்தை ஓர் உடலாக நாம் உருவகித்தால், அந்த உடலுக்கு உயிர் மூச்சு வழங்கும் நுரையீரலாக, அமேசான் காடுகள் உள்ளன. இந்த நுரையீரல், அண்மைய  ஆண்டுகளில் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. இந்த நோய்களை குணமாக்கும் வழிகளைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன், அக்டோபர் மாதம், 6ம் தேதி, வத்திக்கானில், ஆயர்களின் சிறப்பு மாமன்றம் ஒன்று துவங்கவிருக்கின்றது.

இந்த மாமன்றம் நடைபெறுவதற்கு, பல வழிகளிலும் தூண்டுதலாக இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாமன்றத்தைக் குறித்தும், சுற்றுச்சூழல், பூமிக்கோளம், இயற்கை, இளையோரின் பங்கு ஆகியவற்றைக் குறித்தும், வழங்கிய கருத்துக்களைத் தொகுத்து, La Stampa என்ற இத்தாலியச் செய்தித்தாள் ஒரு நேர்க்காணலை, ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட்டிருந்தது.

அமேசான் பகுதியை மையப்படுத்தி, நடைபெறவிருக்கும் சிறப்பு மாமன்றம், "இறைவா உமக்கேப் புகழ்" என்ற தலைப்பில், தான் 2015ம் ஆண்டு வெளியிட்ட திருமடலின் குழந்தை என்று தன் பேட்டியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, தொடர்ந்து, "இந்த மாமன்றம், அறிவியலாளர்களும், அரசியல்வாதிகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டம் அல்ல. இது, நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கென்று, தூய ஆவியாரால் கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ள மாமன்றம்" என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்த பூமிக்கோளத்தைப் பற்றி, எது உங்களை மிக அதிகமாக அச்சுறுத்துகிறது என்ற கேள்விக்கு திருத்தந்தை வழங்கிய பதிலில், "உயிர் பன்முகத்தன்மையின் அழிவு, புதிதாக உருவாகிவரும் மிகக் கொடிய நோய்கள், இயற்கையின் அழிவினால், மனிதகுலத்தின் மரணம் அருகில் வந்திருப்பது, ஆகிய உண்மைகள் என்னை அதிகம் அச்சுறுத்துகின்றன" என்று கூறினார்.

சுற்றுச்சூழல் குறித்து புதிய விழிப்புணர்வு உலகில் உருவாகி வருகிறதா என்று, இப்பேட்டியில் கேள்வி எழுந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரைக் குறித்துப் பேசினார்:

"சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட இளையோர், உலகின் எல்லா நாடுகளிலும், இயக்கங்களை உருவாக்கி வருகின்றனர். தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து, 'எதிர்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்' (Fridays for Future) என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் வழியே, 'நாங்களே எதிர்காலம்!' என்பதை, இளையோர், இவ்வுலகிற்குப் பறைசாற்றுகின்றனர்" என்று, திருத்தந்தை, இளையோரைக் குறித்து பெருமையுடன் பேசினார். (நன்றி - La Stampa)

10 September 2019, 10:02