தேடுதல்

சிரியாவில் சிறார் சிரியாவில் சிறார் 

மோதல்களால் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை

மோதல்களால் சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகளில் மட்டுமே 30 இலட்சம் குழந்தைகள், பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்தியக் கிழக்கு நாடுகள், மற்றும் வட ஆப்ரிக்காவில் வாழும் குழந்தைகள் மற்றும் இளையோரில், பல இலட்சக்கணக்கானோர் பள்ளிக்குச் செல்லமுடியா நிலை ஏற்பட்டுள்ளதாக, யுனிசெப் எனும், உலக குழந்தைகள் நல நிதி அமைப்பு, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

மத்தியக் கிழக்குப்பகுதி மற்றும் வட ஆப்ரிக்காவில் வாழும் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட இளையோருள் 93 இலட்சம் பேர், அப்பகுதிகளின் மோதல்களால் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, யுனிசெப் எனும் குழந்தைகளுக்கான ஐ.நா.வின் நல நிதி அமைப்பு தெரிவிக்கிறது.

மோதல்களால் சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகளில் மட்டுமே 30 இலட்சம் குழந்தைகள், கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் 2014ம் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் 2,160 பள்ளிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கிறது, யுனிசெப் அமைப்பின் அறிக்கை.

ஏழைக் குடும்பங்களே இம்மோதல்களால் கல்வியறிவைப் பெறமுடியாமல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய வயதிலேயே குழந்தைகள் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், இள வயது திருமணங்களாலும் கல்வி தடைப்படுவதாகவும் இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பின்மைகள் இப்பகுதியில் மிகப் பெரிய அளவில் இருப்பதும், இளையோரிடையே கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தை பலமிழக்க வைத்துள்ளது எனவும், யூனிசெஃபின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2019, 15:50