தேடுதல்

Vatican News
குப்பை இல்லா இந்தியாவை கனவு காணும் இளைஞர் ரிபுதமன் குப்பை இல்லா இந்தியாவை கனவு காணும் இளைஞர் ரிபுதமன்  

பூமியில் புதுமை – குப்பை இல்லா இந்தியாவே என் கனவு

மக்கள் நெகிழிப் பயன்பாட்டை முழுமையாகக் கைவிட வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் தன்னை சமுதாயத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும். நானும் என் வாழ்வை குப்பை இல்லா இந்தியாவை உருவாக்க அர்ப்பணித்துவிட்டேன் – ரிபுதமன்

மேரி தெரேசா - வத்திக்கான்

'குப்பை இல்லா இந்தியா'வை உருவாக்க வலியுறுத்தி, 31 வயது நிரம்பிய டில்லி இளைஞர் ரிபுதமன் அவர்கள், ஐம்பது நகரங்களில் ஆயிரம் கி.மீ. துாரம் ஓடி, சாலையோர குப்பையை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவர் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். தடகள வீரரான இவர், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலையை உதறிவிட்டு, குப்பை இல்லா இந்தியாவை உருவாக்க 'பிளாக்கர்ஸ் ஆப் இந்தியா' அமைப்பைத் துவங்கினார் இவர். அவ்வமைப்பு வழியாக பல்வேறு நகரங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு ஓட்டத்தை செப்டம்பர் 6, கடந்த வெள்ளியன்று, கேரள மாநிலம் கொச்சியில் துவங்கினார். அங்கு 11 கி.மீ. ஓடியபடி சாலையோரக் குப்பைகளை அகற்றினார். பின், மதுரை வந்தவர், ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சாலை, எம்.ஜி.ஆர். பேருந்து நிலையப் பகுதிகளில், எட்டு கி.மீ. துாரம் ஓடி குப்பைகளைச் சேகரித்தார். சிலர் அவருடன் இணைந்து குப்பைகளைச் சேகரித்தனர். எல்லாரும் சேர்ந்து 31 கிலோ குப்பைகளை அகற்றினர். ரிபுதமன் அவர்கள், குப்பை இல்லா இந்தியாவை உருவாக்க நாட்டின் முக்கிய நகரங்களில் முன்னூறு இயக்கங்களை துவக்கியுள்ளார். புதிய முயற்சியாக விழிப்புணர்வு ஓட்டத்தையும் துவக்கியுள்ளார். இவர், 22 மாநிலங்களில் 50 முக்கிய நகரங்களில் ஓடியபடி குப்பைகளைச் சேகரித்து வருகிறார். (நன்றி-தினமலர்)

12 September 2019, 15:40