பாரோஸ் தீவு, கிரீஸ் பாரோஸ் தீவு, கிரீஸ் 

பூமியில் புதுமை:சுற்றுலாக்களில் நெகிழி குப்பைகள் பற்றிய...

ஏஜியன் கடலின் மத்தியில் அமைந்துள்ள அழகான தீவாகிய பாரோஸ், வெண்மை நிற பளிங்கு கற்களுக்குப் பெயர்போனது. இந்த பளிங்கை விவரிக்கும் "பாரியன்" என்ற சொல்லிலிருந்தே இத்தீவுக்கு, இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

பாரோஸ் (Paros), கிரீஸ் நாட்டில், ஏஜியன் கடலின் மத்தியில் அமைந்துள்ள அழகான தீவாகும். இது, வெண்மை நிற பளிங்கு கற்களுக்குப் பெயர்போனது. இந்த பளிங்கை விவரிக்கும் "பாரியன் (Parian)" என்ற சொல்லிலிருந்தே இத்தீவுக்கு, இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்தீவின் அழகிய கடற்கரைகள், சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வருகின்றன. 13 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட இத்தீவிற்கு, கோடை காலத்தில் நான்கு இலட்சத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அதனால், கிரேக்க நாட்டின் Cycladic மாநிலத்திலுள்ள பல தீவுகள் போன்று, பாரோஸ் தீவிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. எனவே, பாரோஸ் தீவை நெகிழி குப்பைகளற்ற தீவாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Stella Cervello என்ற இளம்பெண், இந்தப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். 2016ம் ஆண்டில் பிரான்சிலிருந்து பாரோஸ் தீவில் குடியேறிய Cervello அவர்கள், முகநூலில் தனது முயற்சிகள் பற்றி பதிவுசெய்யத் தொடங்கினார். நெகிழிப்பொருள்களுக்கு மாற்றாக, வேறு தொழில் செய்வது பற்றிய எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டார். இதையறிந்த, “பொதுவான கடல்கள்” என்ற அறக்கட்டளையின் Jo Royle என்பவர், பாரோஸ் தீவை நெகிழிப் பொருள்களற்ற இடமாக மாற்றி, மற்றும்பிற இடங்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கச் செய்யலாம் என்று கருதினார். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள 115 Seychelles தீவுக்கூட்டங்களில், நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், பாரோஸ் தீவை முற்றிலுமாக, நெகிழி குப்பைகளற்ற இடமாக மாற்ற, Cervello குழுவினர் தீர்மானித்தனர். இப்போது, பாரோஸ் விமான நிலையத்தில் இக்குழுவினர் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று, தங்களின் இந்த முயற்சி பற்றி சொல்லி வருகின்றனர். இக்குழுவினரின் முயற்சியால், அத்தீவில் வர்த்தகம் செய்யும் 70 நிறுவனங்களில், ஐம்பது, நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு கையெழுத்திட்டுள்ளன. 14 நிறுவனங்கள், நெகிழி குப்பைகளைச் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்புகின்றன. சுற்றுலாப் பயணிகள், நெகிழி குப்பைகளால் உண்டாகும் சூழலியல் மாசுகேட்டை உணர்வார்களா?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2019, 15:00