தேடுதல்

இயற்கை மருத்துவத்தின் முன்னோடி அர்னால்டு ரிக்லி இயற்கை மருத்துவத்தின் முன்னோடி அர்னால்டு ரிக்லி  

பூமியில் புதுமை – இயற்கை மருத்துவத்தின் முன்னோடி

இளஞ்சூடான மற்றும் குளிர்ந்த நீர், சூரிய வெளிச்சம் மற்றும், தூய்மையான மலைக் காற்று ஆகியவை, நோய்த் தடுப்புக்கும், குணமாக்கலுக்கும் நல்நருந்துகள் - ரிக்லி

மேரி தெரேசா - வத்திக்கான்

தண்ணீர் சிகிச்சை, சூரிய சிகிச்சை, காலநிலை சிகிச்சை. இந்த மூன்று சிகிச்சைகளுடன், சரியான உணவு, மற்றும், உடல்பயிற்சி இருந்தால், நோய்களிலிருந்து குணம் பெறலாம் என்பதை எண்பித்துக் காட்டியிருப்பவர், அர்னால்டு ரிக்லி (Arnold Rikli 13 பிப்.1823–30,ஏப்,1906). நம் உடலில், சூரிய வெளிச்சமும், தூய்மையான காற்றுக்கும் படும்படி வைத்தால் நோயின்றி வாழலாம் என்பதை தன் வாழ்வு அனுபவத்திலிருந்து நிரூபித்தவர் ரிக்லி. இவர், இளஞ்சூடான மற்றும் குளிர்ந்த நீர், சூரிய வெளிச்சம் மற்றும், தூய்மையான மலைக் காற்று ஆகியவற்றை வைத்து நோயாளர்களைக் குணப்படுத்தியவர். எனவே, இக்கால இயற்கை மருத்துவத்திற்கு முன்னோடிகளாக விளங்கிய நம் மூதாதையர்களில் ஒருவராக. இவர் போற்றப்படுகிறார். இவர், சுவிட்சர்லாந்தில் செல்வாக்குமிக்க குடும்பத்தில், 1823ம் ஆண்டு பிறந்தார். அரசியலில் ஈடுபட்டிருந்த இவரது தந்தை, இவரையும், இவரது இரு சகோதரர்களையும், தனது தொழிற்சாலை வாரிசுகளாக்க விரும்பினார். அதனால், ரிக்லியையும், அவரது சகோதரர் கார்லையும், ஆஸ்ட்ரியாவில், ஸ்பிட்டல் நகருக்கு அருகே, Seebach என்ற கிராமத்திற்கு அனுப்பினார். அவர்கள் அங்கே தோல் பதனிடும் புதிய தொழிற்சாலையை அமைத்தனர். அச்சமயத்தில், ரிக்லியின் உடல்நலம் வயிற்றோட்டத்தால் மிகவும் மோசமடைந்தது. அதற்கு இந்த தொழிற்சாலையின் வேதியப்பொருள்களே காரணம் என குறை கூறினார் ரிக்லி. அதனால் ஓய்வு எடுக்கவும், நோயிலிருந்து குணம்பெறவுமென, சுலோவேனியா நாட்டின் வடமேற்கிலுள்ள பிலெட் (Bled) ஏரிப் பகுதிக்கு, 1852ம் ஆண்டில் முதன்முதலாகச் சென்றார். பிலெட் ஏரி, ஆஸ்ட்ரிய எல்லையில், ஜூலியன் ஆல்ப்ஸில் செங்குத்தான மலா ஒசோஜ்னிகா மலையின் உச்சிக்குச் செல்லும் குறுகலான பாதையில் 144 ஹெக்டரில் பரந்துள்ளது. அந்த இடத்தின் இயற்கையழகில் இவர் மயங்கினார். ஈராண்டுகள் சென்று, தனது குடும்பத் தொழிலைக் கைவிட்டு, இந்த ஏரிப் பகுதிக்கு மீண்டும் சென்றார். அங்கு குளிர்ந்த நீரில் நீந்தினார், சூரிய வெளிச்சத்தில் படுத்தார், நடைப்பயிற்சி செய்தார். அதற்குப்பின், தான் குணமடைந்ததை உணர்ந்தார். அதிலிருந்து, காற்று, சூரியன் மற்றும் தண்ணீரே, உடல்நலத்திற்கு முக்கியமானவை என்பதைக் கற்றுக் கொண்டார். பின்னர் பலருக்கும் இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினார். பிலெட் ஏரி இயற்கைச் சூழலில் நோய் குணமாவதை முதலில் கண்டுபிடித்தவர் ரிக்லி. அப்பகுதியில், 1895ம் ஆண்டில் மர வீடுகளையும், குளியல் தொட்டிகளையும், சுவிஸ் மரபில் அமைத்தார். நடைபாதைகள், பனிச்சறுக்குப் பாதைகள் போன்றவற்றையும் அமைத்தார். 1903ம் ஆண்டில், ஆஸ்டியாவில் இயற்கை மருத்துவம் பற்றி நடந்த ஓர் உலகளாவிய கூட்டத்தில், இவருக்கு, தங்கப் பதக்கமும் கிடைத்தது. "தண்ணீர் நல்லது, காற்று சிறந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சூரிய ஒளி சிறந்தது" என்பது ரிக்லி அவர்களின் புகழ்பெற்ற கூற்று. அப்பகுதி மக்கள் இவரை, "சூரிய மருத்துவர்" என்ற புனைப்பெயரால் அழைத்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2019, 15:53