சோற்றுக்கற்றாழை சோற்றுக்கற்றாழை 

பூமியில் புதுமை – சோற்றுக்கற்றாழையின் பயன்கள்

வேதிப்பொருள்களை விடுத்து கற்றாழைக்கு மாறுவதால் செலவும் குறைவு மற்றும், சுற்றுச்சூழலுக்கும் நிறைவு. நாமும் இயற்கையோடு இணைந்து வாழ முயற்சிப்போம்

மேரி தெரேசா - வத்திக்கான்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப், ஷாம்பு, குளிர் காப்பான்கள், பாத்திரங்கள் மற்றும், வீடுகள் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் கலந்த திரவங்கள் ஆகியவை அமிலங்களும் வேதிப்பொருள்களும் கலந்தவை. அவை நிலத்துக்குள் சென்று நிலத்தடி நீரையும் மண்ணையும் பாழாக்குகின்றன. எனவே மண் மீதும், இயற்கை மீதும் அக்கறை கொண்டு, குளிக்க, பல்துலக்க, பாத்திரம் கழுவ, தரை துடைக்க போன்ற எல்லாவற்றுக்கும் சோற்றுக்கற்றாழையைப் பயன்படுத்துகிறார், திருப்பூர் ராஜூ மாரியப்பன்.  இவர் சொல்கிறார்-

கற்றாழை வறண்ட மாதிரி தெரியும்போது கையாலேயே கீறிக் கீறி மறுபடியும் அதைப் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில், கத்தாழை ஜெல்லை எடுத்து, அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு பாத்திரங்களைத் தேய்க்கலாம். எண்ணெய்ப் பிசுக்கு அதிகமாக இருக்கின்ற பாத்திரங்களைத் தண்ணீர்விடாத கத்தாழை ஜெல் மூலமாகச் சுத்தப்படுத்தினால், பளிச்சென்று ஆகிவிடும். வீட்டுத் தரையைத் துடைக்க, ஒரு வாளித் தண்ணீரில், கொஞ்சம் ஜெல்லைப்  போட்டு கலந்து, துடைக்கலாம். பல் விளக்கவும் கத்தாழையைப் பயன்படுத்தலாம். சிறு மிட்டாய் அளவுக்கு வாயில் போட்டு மென்றோ அல்லது, விரலால் கீறியோ பிரஷில் பேஸ்ட் போல தடவியோ பயன்படுத்தலாம். உடம்பின் தோல், எண்ணெய் பசை உள்ளதாக இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம். நான் ஒரு கற்றாழை மடலை எடுத்து, ஒரு வாரம் வரைக்கும் பயன்படுத்துவேன். எந்த பக்க விளைவும் ஏற்படாது. நம் தோல், குழந்தையின் தோல் மாதிரி மிருதுவாகிடும். அழகு நிலையங்களில் இதனால்தான் ஆலோவேரா எனச் சொல்லி ஆயிரக்கணக்கில் வாங்குகிறார்கள். வேதியப்பொருள் இல்லாத தண்ணீர் என்பதால், பளிங்குத் தரை சேதமாகாது. தரைகளும் வெளுத்துப் போகாமல் மின்னும். மனிதக் கழிவுகள் சேரும் தொட்டியும் அதிக நாள் அப்படியே இருக்கும். கற்றாழை, குளிர்ச்சி என்பதால் வயிற்று வலிக்கும், மாதாந்திர பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கிறது. (இந்து தமிழ்' இணையதளம்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2019, 15:34