தேடுதல்

Vatican News
ஏமனில் பள்ளிகள் ஏமனில் பள்ளிகள்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – மனிதநேய உலக நாள் ஆகஸ்ட் 19

உலகில், ஆபத்தான இடங்களில் மனிதநேயப் பணியாற்றும் ஐந்து இலட்சம் பேரில் ஏறத்தாழ நாற்பது விழுக்காட்டினர் பெண்கள் - ஐ.நா. நிறுவனம்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒரு சமயம், பெண் ஒருவர், உணவகம் ஒன்றுக்குச் சென்று, அங்கு நின்ற நபரிடம், உணவு பரிமாறுகிறவரே என்று கூப்பிட்டார். உடனே அவர், இல்லை, நான்தான் இந்த உணவகத்தின் உரிமையாளர் என்றார். மன்னிக்கவும், ஒருவர் சாப்பிட இடம் இருக்கிறதா என்றார் அப்பெண். உள்ளே செல்லுங்கள் என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, வாசலருகில், பவுல் என்ற பெயருடைய ஒரு பிச்சைக்காரர் வந்து, ஐயா பசிக்குது, கொஞ்சம் உணவு என்றார். உடனே அந்த பிச்சைக்காரரிடம், இங்கே உனக்கு இடமில்லை என எத்தனை முறை சொல்வது என்று, கோபத்துடன் சொன்னார். ஐயா, பசிக்குது, தயவு செய்து... என்று தளதளத்த குரலில் கெஞ்சினார் பவுல். அதற்கு அந்த உரிமையாளர், இதனை சில ஆண்டுகளுக்குமுன், இங்கு நீ வேலை செய்யும்போது உணர்ந்திருக்க வேண்டும், இருவேறு நிறமுடைய கண்களைக்கொண்ட அந்த வீடற்ற பெண்ணுக்கு இங்கிருந்து நீ உணவு கொடுத்தவேளையில் சிந்தித்திருக்க வேண்டும், இங்குள்ள உணவை இப்படி கொடுத்தால் எனது தொழில் என்ன ஆவது... இவ்வாறு வசைபாடிக் கொண்டிருந்தார். இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த பெண், மன்னிக்கவும், இப்போது இரண்டு பேர் சாப்பிட இடமிருக்கிறதா என்றார். தாராளமாக... ஏன் இருவருக்கு என்றார். நான், இங்கு நிற்கும் பவுலுக்கும் இந்த உணவகத்தில் நல்ல சூடான சாப்பாடு வாங்கிக் கொடுத்து அவரோடு சேர்ந்து உண்ண விரும்புகிறேன் என்றார் அந்தப் பெண்.  சாரி மாம், அந்த ஆளுக்கு கண்டிப்பாக இந்த உணவகத்தில் இடமில்லை என்றார் உரிமையாளர். உடனே அந்தப் பெண் சொன்னார் - சில ஆண்டுகளுக்குமுன், நான் வீடின்றி இந்த நகருக்கு வந்தேன். உணவகங்களின் அருகில் பசியோடு உறங்கினேன். பவுல் போன்றவர்கள் எனக்கு சூடான உணவு தந்து எனது பசியைப் போக்கினார்கள். இவர்களின் உதவி எனக்கு கிடைத்திராவிட்டால் நான் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பே இல்லை. உண்மையில் எனக்கு உணவளித்தது பவுல்தான். உமக்கு ஒன்று தெரியுமா, நான்தான் அந்த வீடற்ற பெண் என்று. உடனே உரிமையாளர் இந்தக் கதைக் கேட்பதற்கு சுவையாக உள்ளது, ஆனால் அந்த ஆளுக்கு இந்த உணவகத்தில் இடமில்லை, நீங்கள் வேறு எங்காவது சென்று சாப்பிடுங்கள் என்று கோபம் கொப்பளிக்கச் சொன்னார். ஐயா, நான் போகிறேன், அதற்கு முன்னதாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். DM Capital என்ற பெயரைக் கேட்டிருக்கிறீர்களா, ஆமாம், எனது உணவகத்திற்கு பெரிய அளவில் உணவுப்பொருள்களை விநியோகம் செய்யும் நிறுவனம் அதுதான் என்றார் உரிமையாளர். அப்போது அந்தப் பெண், தனது அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்து, நான்தான் கத்ரீன் லில்லி. அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் மற்றும் அதன் தலைவர். இன்றிலிருந்து எமது நிறுவனம் உணவுப்பொருள்களை விற்பனை செய்வதற்காக இல்லாமல், மனிதர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்ற உள்ளது. இனிமேல் எமது நிறுவனம் உங்களுக்கு விற்பனை செய்யாது என்று தீர்க்கமாகச் சொல்லி அந்த உணவகத்தைவிட்டு வெளியேறினார் கத்ரீன். பின்னர் பிச்சைக்கார பவுலைப் பார்த்து, உங்களை எமது நிறுவனம் வேலைக்குச் சேர்த்துள்ளது, வாருங்கள் என்று தட்டிக்கொடுத்தார் கத்ரீன் லில்லி.

மனிதநேய உலக நாள்

 “அன்பு இல்லாத உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஒருநாள் அன்பின் இல்லத்திற்குச் சென்றேன். அன்பிற்காக ஏங்கி நிற்கும் உள்ளங்களை அரவணைக்கும் அன்பு உள்ளங்களைக் கண்டேன். அதன்பிறகு, நான் நினைத்தது தவறு என உணர்ந்தேன்” என ஜெனி செல்லம் (Jeni Chellam) என்பவர் எழுதியுள்ளார். திருவள்ளுவரும், அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்றார். மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறை நிகழ்வுகளாக இருக்கட்டும்... பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து புலம்பெயர்ந்து நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட, அநாதை உடல்களை நல்லடக்கம் செய்ய... என,  தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், புனித அன்னை தெரேசா போன்ற பல நல்ல மனிதர்கள் சேவைசெய்து வருகின்றனர். இவர்களையெல்லாம் நன்றியுடன் நினைவுகூர்வதற்காக, ஐ.நா. நிறுவனம், மனித நேய உலக நாளை உருவாக்கி, 2009ம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகிறது.

2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, ஈராக்கின் பாக்தாத்தில், அல்கொய்தா அமைப்பு, ஐ.நா. தூதரகத்தைக் குறிவைத்து, வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியது. அதில், ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றிய, 55 வயது நிரம்பிய Sergio Vieira de Mello அவர்கள் உட்பட, குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். பிரேசில் நாட்டவரான செர்ஜோ அவர்கள், ஐ.நா.வுக்காக 34 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவர். ஆபத்து நிறைந்த சூழல்களில் அவர் ஆற்றியுள்ள மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டாதவர்களே இல்லை. எனவே, அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19ம் நாளை, உலக மனித நேய நாளாக, மனிதாபிமான நாளாகக் கடைப்பிடிக்க ஐ.நா. பொது அவை தீர்மானித்தது. ஆகஸ்ட் 19 இத்திங்களன்று, #WomenHumanitarians என்ற ஹாஷ்டாக்குடன், இந்த உலக நாள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் போரினால் காயமடைந்தவர்கள் முதல், ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதியில், உணவு பாதுகாப்பின்மையால் துன்புறுவோர்,  மத்திய ஆப்ரிக்க குடியரசு, தென் சூடான், சிரியா, ஏமன் போன்ற நாடுகளில், வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து உதவிகள் தேவைப்படும் மக்கள் வரை, மிகவும் சவாலான பகுதிகளில் நீண்ட காலமாக, முன்னணியில் நின்று பணியாற்றிவரும், மனிதநேயப் பெண் பணியாளர்களை நினைத்து இந்த உலக நாளில் ஐ.நா. நிறுவனம் மரியாதை செலுத்தியுள்ளது. போர்கள், இயற்கைப் பேரிடர்கள், நோய்கள், வன்முறை, சித்ரவதைகள் போன்றவற்றால், ஏழு கோடிக்கு அதிகமான மக்கள் கட்டாயமாக சொந்த இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர். உலகில், ஆபத்தான இடங்களில் மனிதநேயப் பணியாற்றும் ஐந்து இலட்சம் பேரில் ஏறத்தாழ நாற்பது விழுக்காட்டினர் பெண்கள் என ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது.

மனிதாபிமானப் பணியாளர் ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி. இவர், நிறைய போராட்டங்களுக்குப்பின் வெள்ளித்திரையிலும், சின்னத் திரையிலும், பின்னணிக் குரல் கொடுக்கும் வாய்ப்புப் பெற்று, தனது வருவாயில், நாற்பது விழுக்காட்டை மனிதநேயச் சேவைக்காகப் பயன்படுத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் 300-க்கும் அதிகமான ஆதரவற்ற முதியோர்களை, தன் நண்பர்களின் உதவியுடன் சேவை இல்லங்களில் சேர்த்துள்ளார் இவர். இந்த சேவையில் நுழைய ஸ்ரீதேவி அவர்களைத் தூண்டியது எது? என, விகடன் செய்தியாளரிடம் சொல்லியுள்ளார்.

“ஒரு சமயம், சென்னை, பெசன்ட் நகரில் ஒரு முதியவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக, எனக்கு தகவல் வந்தது. உடனே அங்கே சென்றால், அந்த முதியவர் பக்கத்தில் போகவே எல்லாரும் தயங்கியதைக் கண்டேன். எனவே நான் அவரைத் தூக்கி, சுத்தப்படுத்தி என் மடியில் படுக்கவைத்து தண்ணீர் கொடுத்தேன். தண்ணீர் தொண்டையில் இறங்கிக்கொண்டிருக்கும்போதே அவர் உயிர் என் மடியிலேயே பிரிந்துவிட்டது. அந்த மரணத்திலிருந்து மனத்தளவில் பாதிக்கப்பட்ட எனக்கு, அதிலிருந்து மீண்டுவர ஒரு வாரம் தேவைப்பட்டது. ஆனால், அந்த மரணம்தான், `இனி இப்படி ஓர் உயிர் போகக்கூடாது' என ஆதரவற்றவங்களை அடுத்தடுத்து பாதுகாக்கும் ஆற்றலை எனக்குத் தந்தது. ஆரம்பத்தில், ஆதரவற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போவது, வயதானவர்களைக் குளிப்பாட்டுவது, தொழுநோயாளிகளுக்கு உதவுவது...இப்படி உடல் உழைப்பால் உதவி செய்து கொண்டிருந்தேன். அப்புறம் சமூக வலைதளங்களைக் கருவியாகப பயன்படுத்தி, உதவி தேவைப்படுகிறவர்களுக்கும் உதவுகிறவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தேன். கல்லூரியில் படிக்கும்போது, என் நண்பர்களும் நானும், எளிய மக்கள் வாழும் இடங்களுக்குப் போய், பாலியல் விழிப்புணர்வு, பெண் கல்வியின் முக்கியத்துவம் போன்றவற்றை அங்கே வீதி நாடகங்களாக அரங்கேற்றுவோம். அடிப்படைக் கல்வியைக் கற்றுக்கொடுப்போம். ஒரு கட்டத்தில், மக்களுக்குத் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள பொருளாதார உதவிதான் முதன்மையாகத் தேவைப்படுகிறது எனப் புரிந்தது. அதனால் வேலை தேட ஆரம்பித்தேன். இப்போது, எனது  வேலைகள் போக, மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 பேருக்கு மாலை நேரங்களில் இலவச வகுப்பு எடுப்பதோடு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் பாடங்களை நண்பர்களோடு சேர்ந்து ட்யூஷன் எடுக்கிறேன். ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவிகளை ஒருங்கிணைக்கிறேன். இவை தவிர, விருந்துகளில் வீணாகும் உணவுகளைச் சேகரித்து பசித்திருப்பவர்களுக்குக் கொடுக்கிறேன். அதைப் பற்றி எனக்குத் தகவல் கொடுத்தால் போதும். அந்த பகுதியில் இருக்கும் என் நண்பர்கள், விழா நடக்கும் இடத்துக்குப் போய் உணவை எடுத்து வருவார்கள். இந்தச் சமுதாயத்துக்கு நாம்தானே பொறுப்பு”. (நன்றி - விகடன்)

நல்லது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக்கொள். அதில் துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதே என்றார், இராஜாஜி. நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார். நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.

மனித நேயப் பணிகளாற்றும் அனைத்து அன்பர்களையும், சிறப்பாக, இந்த உலக நாளில், மனிதநேயப் பெண்களை வாழ்த்துவோம்.

வாரம் ஓர் அலசல் – மனிதநேய உலக நாள் ஆகஸ்ட் 19
19 August 2019, 15:30