வெற்றி, ஒரு தொடர் பயணம் வெற்றி, ஒரு தொடர் பயணம் 

வாரம் ஓர் அலசல்– வெற்றிக்கு வயது வரம்பு இல்லை

வெற்றி பெறுவது என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது அல்ல. ஆனால் சென்ற முறையைவிட இந்தமுறை சிறப்பாக அமைந்தாலே அதுவே வெற்றிதான் - பான்னி ப்ளேயர்

மேரி தெரேசா - வத்திக்கான்

அரசர் ஒருவருக்கு தன் பட்டத்து யானை எவ்வளவு எடை உள்ளது என்பதை அறிய ஆவல். அதை அவர் அமைச்சர்களிடம் தெரிவித்தார். எடை மேடைகளோ, பெரிய தராசுகளோ இல்லாத அக்காலத்தில், எப்படி எடை காண்பது என யாருக்கும் தெரியாமல் விழித்தனர். அப்போது முதலமைச்சரின் பத்து வயது மகன், தான் கணித்துச் சொல்வதாகக் கூறினான். அனைவரும் ஏளனமாக நகைத்தனர். அரசர் ஒரு வாய்ப்பு கொடுத்தார். சிறுவன் யானையை நதிக்கு அழைத்துச் சென்று, ஒரு பெரிய படகில் ஏற்ற வைத்தான். படகில் யானை ஏறியதும், படகில் நனைந்த நீரின் மட்டத்தைக் குறியீடு செய்தான். பின், யானையை இறக்கிவிட்டு, படகில் குறியீடு செய்த அளவு வரை, படகில் பெரிய பெரிய பாறாங்கற்களை ஏற்ற வைத்தான். ஏற்றி வைத்த கற்களின் எடைதான் யானையின் சரியான எடை என தெரிவித்தான் சிறுவன். சிறுவனின் சாதுர்யமான திறமை எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆம். வெற்றிக்கு வயது கிடையாது. எந்தத் துறையிலும், யாரும் எந்த நேரத்திலும் வெற்றிச் சிகரத்தை எட்டலாம்.

தங்கம் வென்ற பி.வி. சிந்து

42 ஆண்டு கால உலக பூப்பந்தாட்ட (badminton) சாம்பியன்ஷிப் போட்டியில், முதன்முதலாகத் தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பி.வி. சிந்து. சுவிட்சர்லாந்து நாட்டின் Basel நகரில் நடைபெற்ற 25-வது உலக பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஆகஸ்ட் 24, இச்சனிக்கிழமை இறுதி போட்டிக்கு முன்னேறினார். பின்னர் ஆகஸ்ட் 25, இஞ்ஞாயிறன்று நடைபெற்ற இறுதி போட்டியில், பி.வி.சிந்து அவர்கள், ஜப்பானின் நோசோமி ஒகுஹரா (Nozomi Okuhara) என்பவருடன் மோதி, வெற்றி பெற்றுள்ளார். அரை இறுதி ஆட்டம் என்றாலே இதுவரை அச்சம் கொண்டிருந்த சிந்து அவர்கள், இம்முறை அச்சம் அகற்றி விடாஉறுதியுடன் விளையாடி வெற்றிக்கனியைச் சுவைத்துள்ளார்.

99 வயது நம்பூதிரிபாத்

கேரளாவைச் சார்ந்த சித்ரன் நம்பூதிரிபாத் என்ற ஓய்வு பெற்ற அரசு அலுவலர், தனது 99வது வயதில் இமயமலைகளில் 29வது முறை ஏறி சாதனை புரிந்துள்ளார். தனது நூறாவது வயதில், 30வது முறையை முடிக்க வேண்டும் என, தன்னை தயார்ப்படுத்திகொண்டு வருகிறார். 1952ம் ஆண்டில் இவர் ஆரம்பித்த இந்த முயற்சி இன்றும் இவரது விடாமுயற்சியால் வெற்றிகரமாக நடந்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சி, மிதமான உணவு, அமைதியான வாழ்க்கை என, நல்ல உடல்கட்டமைப்போடு தன்னை வைத்திருப்பதாகக் கூறியுள்ளார், இந்த 99 வயது இளைஞர் சித்ரன் நம்பூதிரிபாத். ஆம். வயது என்பது வெறும் எண்ணிக்கையே அன்றி,  மனதிற்கு  வயது கிடையாது.

96 வயது கார்த்தியாயினியம்மா

கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த 96 வயது நிரம்பிய கார்த்தியாயினியம்மா அவர்கள், கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்திய, நான்காம் வகுப்பிற்கானத் தேர்வில், 98 விழுக்காடு மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரால், தற்போது  செய்தித்தாள்கள் மற்றும், பத்திரிகைகளை, எவருடைய  உதவியுமின்றி, தானாகவே படிக்க  முடியுமாம். இதற்குமுன் இவர், மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை என்பது கூடுதல் செய்தி. இவர் ஒரு துப்புரவு பணியாளராகத் தொழில் புரிந்தவர். இன்று இவர், கல்லாமை எனும் குப்பையைத் தன்னிடமிருந்து அகற்றியுள்ளார். மேலும், 60 வயது நிரம்பிய இவரது மகள் அம்மினி அம்மாவும், பத்தாவது வகுப்பிற்குச்  சமமான தேர்வில்  வெற்றிப்  பெற்றுள்ளார். இவர்களது இந்த முயற்சிகளுக்குப் பின்புலத்தில், இருந்தது அவர்களது ஊக்கம்தான்.

இளம்பெண் இராதிகா அஹிரே

26 வயது நிரம்பிய இளம்பெண், இராதிகா அஹிரே என்பவர், ஜெட் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றுபவர். இவர், 2018ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி மும்பையின் அந்தேரியில் உள்ள பல மாடிக்கட்டடத்தில் ஏற்பட்ட தீயை தனது சாதுர்யத்தால் அணைத்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளார். அடுக்கு மாடி கட்டடத்தில் 9வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தைக் கண்டவுடன், சிறிதும் அஞ்சாமலும், தாமதிக்காமலும், படிகள் வழியாக,    9வது  மாடித்தளத்தை அடைந்து  அங்கிருந்து  தீ  அணைப்பான்களைப் பயன்படுத்தி விபத்தின் இழப்பைக் குறைத்துள்ளார். இவருடன், இவரது சகோதரர் ரோஹித், பக்கத்து வீட்டுக்காரர் மகேஷ் ஆகிய இருவரும் உறுதுணையாக இருந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் தீ விபத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவேளை, இவர் விமானப் பணிகளுக்காக பெற்ற பயிற்சியை தக்க நேரத்தில் விவேகத்துடன் பயன்படுத்தியது அனைவருக்கும் பெருமை அளித்தது.

தொழிலதிபர்கள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு தொழிலதிபர், Warren Edward Buffett அவர்கள், தனது வணிகத்தை ஆரம்பிக்கும்போது அவரது வயது 11. ஆனால் Colonel Harland Sanders, என்பவர்,  தனது 65வது வயதிலேயே, KFC (Kentucky Fried Chicken) என்று அழைக்கப்படும், துரித உணவகத்தை ஆரம்பித்தார். இது, உலகிலுள்ள துரித உணவு உணவகங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டின் நிலவரப்படி, 136 நாடுகளில், 22,621 உணவக மையங்களைக் கொண்டிருக்கின்றது. Henry Ford அவர்கள், தனது 45 வயதுவரை வெறும் தோல்விகளை மட்டுமே சந்தித்தவர். Hary Potter நூலை எழுதிய J.K.Rowling என்பவர், தனது 30 வயதுவரை உணவுக்கே வழியில்லாமல் இருந்தவர். பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டமைப்பான அலிபாபா குழுமத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான சீன தொழிலதிபர் ஜாக் மா (Jack Ma) அவர்கள், தனது 35வது வயதுவரை வெறும் பத்து டாலரை ஊதியமாகப் பெற்றவர். எனவே, வாழ்வில் வெற்றிக்கனியை எட்டுவதற்கு வயது ஒரு தடையே அல்ல. வெற்றி என்பது நம்மில் பிறப்பது. அமெரிக்க இணையதள கோடீஸ்வரரான Drew Houston என்பவர் சொல்கிறார் – நீங்கள் எந்த வயதில் இருந்தாலும், எந்த நிலைமையில் இருந்தாலும், உங்களிடம் இன்னும் நேரமிருக்கிறது. தயங்காது முயற்சி செய்யுங்கள் என்று. இவர், ஏறத்தாழ 220 கோடி டாலர் மதிப்புள்ள தொழில் அமைப்பைக் கொண்டிருப்பவர் என, Forbes இதழ் கூறியுள்ளது.

மின் மயானத்தில் பெண் பணியாளர்கள்

மலர்க்கொடி, கலா ராணி என்ற இரு பெண்களும், தமிழகத்தின் நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் பணியாற்றுகின்றனர். இதுவரை 1,500-க்கும் அதிகமான சடலங்களை எரித்துள்ளனர். இந்த தொழில் பற்றிச் சொல்லும் இவர்கள், ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம், பயம் இருந்தாலும், போகப் போக பழகிடுச்சு. முதல்ல இங்க பூங்கா வேலைக்குதான் வந்தோம். அப்போதான் இந்த வேலைக்கு ஆளுங்கள தேடிட்டு இருந்தாங்க. இந்த உலகத்துல ஆம்பளைங்க செய்யுற எல்லா வேலையையும் பெண்களும் செஞ்சிட்டு வர்ராங்க. இத மட்டும் ஏன் வேண்டாம்னு சொல்லணும்? எங்களால நிச்சயம் செய்ய முடியும்னு தோணுச்சு. நலம்விரும்பும் ஒரு தனியார் தொண்டு நிறுவனம்தான், மின் மயானங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்துட்டு வர்றாங்க. அவர்களை அணுகினோம். ஒரு பெண் இப்படிக் கேட்டதில் அவர்களுக்கு அதிர்ச்சி, பிறகு ஒத்துக்கிட்டாங்க" என்றபடி மலர்க்கொடி முடிக்க, கலா ராணி தொடர்ந்தார். ``எங்க ஒவ்வொரு குடும்பமும் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்தான். நாங்க எல்லாரும் கூலி வேலை, காயலாங் கடைன்னு பல இடத்துல வேலை செஞ்சிருக்கோம். இந்த வேலையில சேர்ந்து ஆறு வருஷம் முடியப்போகுது. உடல்களை எரிக்குறது எங்களுக்குக் கிடைச்ச கௌரவமா நினைக்கிறோம். சடலம், எரிக்கறது கடவுளுக்கு நாம செய்யுற தொண்டுதான். சில நேரத்துல குழந்தைங்களை கொன்னுட்டு, தாயும் தற்கொலை பண்ணுனது, குடும்பமே தற்கொலை செய்துகொல்றதுனு பல விடயங்கள் மனசை ரொம்ப பாதிச்சிருச்சு. வாழுற வரைக்கும் மத்தவங்களுக்கு ஏதாவது உருப்படியா செய்ங்க, இல்லையா யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாம இருங்க, அதுவே போதும் என்றார். இவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும், அதைத் துணிச்சலோடு எதிர்கொண்டு இப்பணியைச் செய்துவருகிறார்கள். நல்ல ஊதியம், மனநிறைவு கிடைப்பதால் இவ்வேலையைவிட மனமில்லை என்றும், அவ்விரு பெண்களும் சொல்கின்றனர் (நன்றி விகடன்).

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இல்லாமல் இல்லை. பலர், அதற்காகச் சோர்வடையாமல், அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைந்து கொண்டுதான் உள்ளனர். மாற்றுத்திறன் கொண்டவர்களும் சாதித்துத்தான் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு திறமையாவது உள்ளது. அதைக் கண்டுபிடித்து அதில் வெற்றியடை முயற்சி செய்ய வேண்டும். மனதிற்குப் பிடித்ததைச் செய்யவும், அதை விருப்பத்தோடும், ஈடுபாட்டோடும் செய்ய வேண்டும். நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார். ஓடுவது முள் அல்ல. உன் வாழ்க்கை என்று சொல்கின்றனர். நீங்கள் பந்தயத்தில் ஓடவில்லை. ஒரு தனி வழியில் பயணிக்கிறீர்கள். எனவே மனமுடைந்து போகாதீர்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள். நேரம் வரும்போது வெற்றி நிச்சயம் உங்களை வந்தடையும். வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கிகள் கிடையாது. படிக்கட்டுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் ஒவ்வொரு படியாக.. என்றெல்லாம் பெரியோர் சொல்கின்றனர். எனவே,  வாழ்வில் வெற்றிபெறுவதற்கு வயதோ, கல்வித் தகுதியோ, ஏழ்மையோ, மாற்றுத்திறனோ எதுவுமே தடையில்லை. முயற்சிப்போம்.

வாரம் ஓர் அலசல்– வெற்றிக்கு வயது வரம்பு இல்லை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2019, 15:26