டெக்சஸ், எல் பாசோ துப்பாக்கிச்சூடு டெக்சஸ், எல் பாசோ துப்பாக்கிச்சூடு 

வாரம் ஓர் அலசல் – பகையில்லா வாழ்வு தெய்வீகமானது

மனதை வெறுப்பு ஆக்ரமித்துவிட்டால், அது படைப்பாற்றல் திறனைச் சீரழித்துவிடும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்குச் சமாதி கட்டிவிடும். வாழ்வையே முன்னேறவிடாமல் தனிமை என்ற இருட்டுச் சிறைக்குள் தள்ளிவிடும்

மேரி தெரேசா – வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின், டெக்சஸ், மற்றும் Ohio மாநிலங்களில், இச்சனி, ஞாயிறு தினங்களில்,  24 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்டுள்ள இரண்டு துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள், அந்நாட்டினரை மட்டுமல்ல, நன்மனம் கொண்ட மனிதர் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டெக்சஸ் மாநிலத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Dayton பகுதியில் இஞ்ஞாயிறன்று நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், 16 பேர் காயமுற்றுள்ளனர். இத்தாக்குதல்கள், அந்நாட்டில், 2019ம் ஆண்டில் நடத்தப்பட்டுள்ள 22வது வன்முறையாகும். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர், இத்தாக்குதல்களில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து, அவர்களுக்காக, அன்னைமரியிடம் செபித்தார். டெக்சஸ், கலிஃபோர்னியா மற்றும், Ohio பகுதிகளில் நடத்தப்பட்டுள்ள இரத்தம் சிந்தும் தாக்குதல்கள் குறித்த தனது ஆழ்ந்த வேதனையையும் திருத்தந்தை வெளியிட்டார்.

அந்நியர்மீது வெறுப்பு

அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும், மெக்சிகோ எல்லைக்கு அருகே உள்ள Cielo Vista Mall  எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எல் பாசோ நகரில், இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த மக்களின் வழிமரபுகள் என, 6,80,000 பேர் வாழ்கின்றனர். மேலும், இந்நகர், மெக்சிகோ நாட்டின் Ciudad Juárez நகர் எல்லையில், பெரிய ஆறு எனப்படும் Rio Grande பகுதியில் அமைந்துள்ளது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளும் கடும் துன்பம் நிறைந்த வாழ்வைச் சமாளிக்க இயலாமல், அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடைக்கலம் தேடுவதற்கு பெருமளவான மக்கள் மெக்சிகோ எல்லைப் பகுதியில் காத்திருக்கின்றனர். அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களும், அம்மக்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். எல்லையிலும் பெரிய தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த சுவர் கட்டுமான பணிக்கென, அமெரிக்க உச்ச நீதிமன்றமும், ஜூலை 27 கடந்த சனிக்கிழமையன்று, 250 கோடி டாலர் நிதியை, இராணுவத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து எடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்தக் காரணங்களாலும் நியாயப்படுத்த முடியாது.  டெக்சஸில் இந்தத் தாக்குதலை நடத்தியவர், 21 வயது நிரம்பிய Patrick Crusius என்ற இளைஞர் எனவும், இஸ்பானிய சமுதாயத்தை குறிவைத்து, அந்நியர் மீதுள்ள வெறுப்பால் இதனை இவர் செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனை ‘வெறுப்பு குற்றம்’ என்றே அமெரிக்க காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

வெறுப்புணர்வு

நெருப்பு எரிய எரிய, சந்தன மரமும் கரிக்கட்டையாகும். வெறுப்பு எரிய எரிய சந்தன மனமும் கரிக்கட்டையாகும். வெறுப்பு, காழ்ப்புணர்வு போன்ற சொல்லாடல்களைக் கேட்கையில், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்று இருக்கின்றது. அதுவும், வெறுப்பினால் அப்பாவி உயிர்கள் பலியாகும்போது, அந்தச் சொல், மனதைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாக உள்ளது. ஆனால், இத்தகைய வன்முறை நிகழ்வுகளில், ‘ஏன்?’ என்ற கேள்வி மட்டும், உலகில் எல்லாப் பகுதிகளின் ஈரமுள்ள நெஞ்சங்களில் எழுகின்றது. 1996ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஸ்காட்லாந்தின் டன்பிளேன் என்ற இடத்திலுள்ள ஒரு பள்ளியின் வெளிப்புறத்தில், குவியலாக இருந்த மலர்க்கொத்துக்களோடும், கரடிப் பொம்மைகளோடும் இந்த சொல், ஒரு காகிதத்துண்டில் எழுதி இணைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அதற்கு சில நாட்களுக்கு முன்புதான், ஒருவர், அந்த பள்ளியில் அத்துமீறி உள்ளே நுழைந்து 16 மழலைகளையும், அவர்களுடைய ஆசிரியையையும் சுட்டுக்கொன்றான். இன்னும் பலரை காயப்படுத்தினான், பிறகு தன்னையே சுட்டுக்கொண்டான். அந்த மனிதர், தன்மீதும், பிறர்மீதும், பொதுவாக சமுதாயத்தின்மீதும் இருந்த கடும் வெறுப்பே அதற்குக் காரணமாகும்.

ஒரு சமயம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், சீர்திருத்தப் பள்ளியிலிருந்த சிறாரின் மனநலம் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. அடுத்து என்ன விபரீதம் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ளாமல், கொலைகளைச் செய்யும் சிறாரும், வளர்இளம் பருவத்தினரும், சிறுவயதில் வெறுக்கப்பட்டதே காரணம் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பள்ளி ஒன்றில், ஓர் ஆசிரியரைக் கொலை செய்த மாணவனின் மனநலம் பற்றி அந்த ஆய்வு களப்பணியில் விசாரித்தனர். அவன் இவ்வாறு சொல்லியுள்ளான்.

“என் அப்பா என்னை வெறுத்தார். ஏனெனில் அவர் எனது இரண்டாவது அப்பா. என் வீட்டில் நாய் பூனைக்குக் காட்டிய அன்பைக்கூட அவர் என்னிடம் காட்டவில்லை. அதற்கு நான் என்ன தவறு செய்தேன்?, அதற்கு மாறாக, அவருக்குப் பிறந்த என் தம்பி மீது அவ்வளவு பாசம் காட்டினார். நான் மனத்தளவில் தனிமைப்படுத்தப்பட்டேன். நான் விளையாட்டு வீரனாகி குடும்பத்திற்குப் பெருமை தேடித்தர வேண்டுமென அவர் விரும்பினார். அதற்காக, சிறந்த பயிற்சியாளர் ஒருவரை நியமித்தார். என்னை வெறுத்த அவருக்கு நான் ஏன் பெருமைத் தேடித் தரவேண்டும்? அதற்கு மாறாக, நான் அவருக்கு அவமானத்தைத் தேடித்தர விரும்பினேன். அவர் குற்ற உணர்வால் காலமெல்லாம் கண்ணீரில் துடிக்க வேண்டுமென விரும்பினேன். அதனாலே ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டேன்”

அந்த மாணவன், தந்தையைப் பழிவாங்கும் எண்ணத்தில், அப்பாவி உயிர் ஒன்றுக்கு உலை வைத்தான். அவனது வருங்காலம் பாழாகிவிடும் என்பதை சிந்தித்து பார்ப்பதற்கு அந்நேரத்தில் அவனது மனம் இடம்தரவில்லை. அவன் அப்பா அவன்மீது காட்டிய வெறுப்பு, அவனைக் கொலைக்குற்றவாளியாக்கிவிட்டது. தப்பெண்ணம், அறியாமை, தவறான தகவல், பயம், கோபம், புண்பட்ட உணர்வு ஆகியவற்றால் வெறுப்புணர்வு ஏற்படுகிறது. ஆப்ரிக்காவின், ருவாண்டா நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்போது, 1994ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதிக்கும், ஜீலை 15ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அந்நாட்டின் ஹூட்டு மற்றும், துட்சி இனத்தவர் ஒருவரையொருவர் கொன்று பழிதீர்த்துக்கொண்டனர். இதில், ஐந்து இலட்சம் முதல், பத்து இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் துட்சி இனத்தவர். இந்த இனப் படுகொலையில், 2 இலட்சத்து 50 ஆயிரம் முதல், 5 இலட்சம் வரை, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர்.  இவ்விரு இனத்தவரும், ஒருவர் ஒருவர் மீது கொண்டிருந்த வெறுப்புணர்வே இந்த இனப் படுகொலைகளுக்குக் காரணம். அங்கு கிடந்த மனித உடல்களையும், ஓடிய இரத்த ஆறுகளையும் நேரடியாகப் பார்த்த ஒரு செய்தியாளர், எப்படி இவ்வளவு வெறுப்பு சேர்ந்தது? என்றுதான் கேட்டார்.

இன்றும், மத்தியக் கிழக்கு நாடுகளில் இடம்பெறும் போர்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் காரணம் என்னவென்பது எவருக்கும் தெரியாததல்ல. முன்னாள் யுகோஸ்லாவியாவின் பிரிவுக்கு வழிநடத்தியதும் வெறுப்புணர்வுதான். இனவெறியும், பேராசையும், வேற்றினத்தவர் மீதுள்ள வெறுப்புணர்வுமே இதற்குக் காரணம்.  உலகின் பல நாடுகளில் சிறுபான்மை மதங்கள், சமுதாயங்கள், குறிப்பாக, இலங்கையில் தமிழர்கள், எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் துன்பங்களுக்குக் காரணம் நாமறிந்ததே. ஏன் இன்று இந்தியாவில் நடப்பது என்ன? போர் மற்றும் பயங்கரவாதிகள் நிறைந்த நாடுகளில் அமைதியையும், போர் நிறுத்தத்தையும் நிலைநாட்டுவதில் சிரமம் இருப்பதற்கு எந்தக் காரணத்தைச் சுட்டிக் காட்ட முடியும்? போஸ்னிய-எர்செகொவினாவில் போர் முடிந்து தனி நாடானபோது, ஓர் இதழ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. “சரயேவோ மறுபடியும் ஒன்றுசேர்ந்திருக்கிறது, ஆனால் அதன் மக்களோ சேரவில்லை” என்று. 

வெறுப்பு என்ற தீய குணத்தால், ஒருவர், தன்னையும், உறவுகளையும் இழக்கிறார். உறவுகள்மீது காட்டும் வெறுப்பு, படிப்படியாக உறவுகளையே விலகச் செய்துவிடும். தனிமரமாய், தனிமையில் வாடி வதங்கி சருகாக வேண்டியிருக்கும். நம் உறவுகள் ஏதோ ஒரு சூழலில் நமக்குத் தீமை செய்திருக்கலாம், தாறுமாறாகப் பேசியிருக்கலாம், நம் விருப்பத்திற்கு மாறாக நடந்திருக்கலாம். அவற்றையே காலம்காலமாக நினைத்துக்கொண்டு மனதில் வெறுப்பை வளர்த்து வந்தால், ஒருநாள் அந்த வெறுப்பே நமக்கு எதிராகக் கிளம்பிவிடும். உறவுகள் கடைச் சரக்குகள் அல்ல, விரும்புகின்றபோது வாங்குவதற்கு. அத்துடன், மனதை வெறுப்பு ஆக்ரமித்துவிட்டால், அது படைப்பாற்றல் திறனைச் சீரழித்துவிடும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்குச் சமாதி கட்டிவிடும். வாழ்வையே முன்னேறவிடாமல் தனிமை என்ற இருட்டுச் சிறைக்குள் தள்ளிவிடும். குறைகள் இல்லாத மனிதர் இல்லையே. எனவே, ஒவ்வொருவரும் தன்னிடமும் குறைகள் உள்ளன என்பதைப் புரிந்துகொண்டு, மனதிலிருந்து வெறுப்பு என்ற தீயசக்தியை வேரோடு அறுத்துவிட்டு, உறவுகளில் வளர முயற்சிப்போம். ஏனெனில் வெறுப்பற்ற வாழ்வு தெய்வீகமானது. சில காயங்கள் மருந்தால் சரியாகும். சில காயங்கள் மறந்தால் சரியாகும் என்றார், தந்தை பெரியார். எனவே, வெறுப்புணர்வைத் தவிர்த்து, அன்புணர்வை வளர்ப்போம். அன்பில் வாழ்ந்து, அன்பு சமுதாயத்தை, ஒன்றிணைந்து சமைப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2019, 15:12