தேடுதல்

Vatican News
மகாராஷ்டிராவில் வெள்ள ப் பாதிப்பு மகாராஷ்டிராவில் வெள்ள ப் பாதிப்பு  (ANSA)

வாரம் ஓர் அலசல் – தன்னலம் கடந்த மனிதநேயம்

தன்னலம் மறந்த மனிதநேயச் சேவை செய்துவரும் இந்த சிறந்த மனிதர்களைப் போற்றுவோம். தியாகம், அறம், மனிதநேயம், ஏழை எளியவர்கள் மீது பரிவன்பு, கருணை, மத நல்லிணக்கம் விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட உயர்ந்த நற்பண்புகளில் வளர்வோம்.

மேரி தெரேசா - வத்திக்கான்

ஆகஸ்ட் 12, இத்திங்கள், பக்ரீத் திருநாள். முஸ்லிம்களுக்கு முக்கிய திருநாளாகிய இவ்விழா, தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. தியாகம், அறம், மனிதநேயம், ஏழை எளியவர்மீது பரிவன்பு, கருணை, மத நல்லிணக்கம் விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட உயர்ந்த நற்பண்புகளை உணர்த்தும் திருநாள் பக்ரீத். இந்த நாளில், முஸ்லிம் அன்புள்ளங்கள் அனைவருக்கும், வத்திக்கான் வானொலியும் தனது அன்பான நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. இத்திருநாள் உணர்த்தும் நற்பண்புகள் அனைவரது வாழ்விலும், சமுதாய அளவிலும் தழைத்தோங்கட்டும். ஏழைகள் மீது காட்டும் கருணை, தனிமனித வாழ்வில் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதுவே மிகுந்த மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும் விளங்குகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில், சில முஸ்லிம் சகோதரர்கள், இந்த நற்பண்பை, ஆகஸ்ட் 11, இஞ்ஞாயிறன்று, தங்கள் செயல்களில் வெளிப்படுத்தி, பக்ரீத் திருநாளை அர்த்தமுள்ளதாக்கியுள்ளனர்.

இந்துப் பெண்ணை தகனம் செய்த முஸ்லிம்கள்

வாரணாசியின் ஹர்ஹுவா டீஹ் பகுதியில் வாழ்ந்துவந்த 19 வயது நிரம்பிய சோனி என்ற இளம்பெண், கடந்த சில நாள்களாக மலேரியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிகிச்சை பலனின்றி இஞ்ஞாயிறன்று, அவர் திடீரென உயிரிழந்தார். அவரது தந்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிப் போயிருந்தார். மேலும் அவரது தாய், இதய நோயாளி. வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றிய ஒரே உறுப்பினர், சோனியின் சகோதரர் மட்டும்தான். அதனால், இளம்பெண் சோனி, இறந்தபோது, ​​அக்கம் பக்கத்தில் வாழ்கின்ற முஸ்லிம் ஆண்கள், அவர்கள் வீட்டிற்குச் சென்று, தகனம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறியதோடு, அவர்களில் சிலர், தங்கள் தொப்பிகளை அணிந்துகொண்டு, ஏற்பாடுகளையும் செய்தனர். பின்னர், தங்கள் தோள்களில் சடலத்தைச் சுமந்துகொண்டு அருகிலுள்ள மணிகர்னிகா காட்டிற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர். இறுதியஞ்சலி ஊர்வலத்தின்போது இந்து மரபுப்படி வழக்கமாகச் சொல்வதுபோல், அவர்கள் வழியெங்கும் 'ராம் நாம் சத்யா ஹை' என்று கோஷமிட்டனர். இந்நிகழ்வு, பார்த்தவர்கள் மனதை நெகிழ வைத்துள்ளது. மேலும், சிலர், இறுதிச்சடங்கு செய்ய சோனியின் சகோதரருக்கு, நிதி உதவியும் செய்துள்ளனர். இந்த தகனத்திற்கு உதவிய மனிதர்களில் ஒருவரான ஷகீல் அவர்கள் கூறுகையில், “இதுதான் உண்மை (யேஹி சத்யா ஹை). மரணம் வாழ்வின் இறுதியானது. ஆனால் சிறு பிரச்சனைகளில் தொடர்ந்து நம்மிடையே போராடுகிறோம்" என்று  கூறினார் என, இந்து தமிழ் திசை தினத்தாள், ஆகஸ்ட் 12, இத்திங்களன்று செய்தி வெளியிட்டிருந்தது. அன்பு இதயங்களே, இதுதான் மதங்களைக் கடந்த மனிதநேயம். இந்த மாதிரி மனிதநேயத்தோடு, தன்னலமற்று பணியாற்றும் சிலரை, ஊடகங்கள் அவ்வப்போது வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன.

அனாதை உடல்களை அடக்கம் செய்யும் இராஜேந்திரன்  

நாகப்பட்டினம், பெருமாள் வடக்கு வீதியில் வாழ்ந்துவரும் 67 வயது நிரம்பிய இராஜேந்திரன் என்பவர் பற்றி தினமலர் தினத்தாளில் ஆகஸ்ட் 11, இஞ்ஞாயிறன்று ஒரு தகவல் வெளியானது. கட்டட ஒப்பந்தக்காரரான இவர், இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட,  அனாதை உடல்களை, தன் சொந்த செலவில் எடுத்துச் சென்று, இறுதிச் சடங்குகளைச் செய்து, இடுகாட்டில் புதைத்து வருகிறார். இந்த சேவைக்காக, இதுவரை, இவர் யாரிடமும், ஒரு ரூபாய்கூட பெற்றதில்லையாம். ''நான் செய்யும் உதவி, சம்பந்தப்பட்டவருக்கு தெரியப் போவதில்லை. அவர்களும், நமக்கு உதவப் போவதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, இந்த சேவையில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்று, தனது இந்த சேவை பற்றி, தன்னலமற்ற சேவையின் மறுஉருவமாய் இருக்கும், இராஜேந்திரன் அவர்கள் சொல்லியுள்ளார். மேலும் இராஜேந்திரன் அவர்கள் சொல்கிறார்... கடந்த, 2012ம் ஆண்டில், எனது நண்பரின் உறவினர் இறந்ததால், உடலை அடக்கம் செய்ய, நாகை இடுகாட்டிற்குச் சென்றேன். அங்கு மனித சடலம் ஒன்றை, நாய்கள் குதறிக் கொண்டு இருந்தன. அதிர்ச்சி அடைந்த நான், அங்கிருந்த ஊழியர்களிடம், இது குறித்து கேட்டபோது, அவர்கள், 'அது, அனாதைப் பிணம். இத்தகைய பிணங்களை, நகராட்சி ஊழியர்கள், இடுகாட்டின் ஒதுக்குப்புறமாக வீசிவிட்டுப் போய்விடுகின்றனர் என, வேதனையுடன் தெரிவித்தனர். அன்றிலிருந்து, அனாதை உடல்களுக்கு, இறுதிச் சடங்கு செய்வதை,  தொடர்ந்து செய்து வருகிறேன். ஜாதி, மதம் பாராமல், குழந்தை, முதியவர் என, இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்திருக்கிறேன். எய்ட்ஸ் உட்பட, கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டோர், மரணத்தை தழுவியோரை, உறவினர்கள்கூட, நெருங்கி வரத் தயங்குவர். அப்போதும் நான், தனி மனிதனாக, உடலை, பிணவறைக்குச் சுமந்து எடுத்துச் சென்று, பாதுகாத்து, பின் அடக்கம் செய்து வருகிறேன். நாகை இராஜேந்திரன் அவர்கள், அனாதை உடல்களைப் புதைப்பதற்காகவே, தனி அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்திருக்கிறார். அங்கு, இறுதிச் சடங்கு செய்வதற்கு தேவையான, அனைத்துப் பொருள்களையும் சேமித்து வைத்துள்ளார். சுற்றுலா பகுதிகளான வேளாங்கண்ணி, நாகூருக்கு வந்து, தற்கொலை செய்தோர், கடலில் மூழ்கி, அடையாளம் தெரியாத உடல்கள், வீதியில், மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடப்போரின் உடல்களை, காவல்துறையின் அனுமதியோடு, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார். அங்கு, பிணவறையில், மூன்று நாட்கள் பாதுகாத்து வைக்கிறார். உறவுகள் யாரும் தேடி வராத நிலையில், காவல்துறையிடம் அனுமதி பெற்று, இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, இந்து முறைப்படி, அனைத்துச் சடங்குகளையும் செய்கிறார். ஒரு சடலத்தை அடக்கம் செய்வதற்கு, குறைந்தது, 3,000 ரூபாய் செலவாகும். இந்நிலையில், மாதத்தில், 10க்கும் மேற்பட்ட உடல்கள்வரை அடக்கம் செய்பவர், தேவையான பணத்திற்காக, தன் நிலத்தை விற்பனை செய்து, அதிலிருந்து செலவு செய்து வருகிறார். இறந்தவரின் நெற்றியில் வைக்கப்படும், ஒரு ரூபாய், வாய்க்கரிசியில் போடும் நாணயங்களைக்கூட மற்றவர்கள் தருவதற்கு, இவர் அனுமதிப்பதில்லை. சில அமைப்புகள், இவருக்கு விருதுதர முன்வந்தபோது, 'யாருக்கு உதவி செய்யுறேன்னு, எனக்கும் தெரியாது. யாரு உதவி செய்யுறதுன்னு, அவங்களுக்கும் தெரியாது. அப்புறம் எதுக்குங்க விருது?' என, அதையும் வேண்டாம் என, உதறியுள்ளார். இது குறித்து, ராஜேந்திரன் அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்... இறந்தவர், எந்த உதவியும் கேட்பது இல்லை. நாம் செய்யும் உதவியும், அவருக்கு தெரியப் போவதில்லை, அவர்களும், நமக்கு உதவப் போவதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, இந்தச் சேவையில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது. பலர், பண உதவி செய்கிறேன் என, சொல்கின்றனர். அது வேண்டாம் என, மறுத்துவிடுவேன். அதேநேரம், உடல் அளவிலான உதவிகள் செய்ய, எவரும் முன்வருவதில்லை. நான் எந்த உடலையும் எரிப்பதில்லை. சில நேரங்களில், உடல் அடக்கம் செய்து, பல நாள்களுக்குப் பின், உறவினர்கள் தேடி வருகின்றனர். வாழும்போது, எப்படி இருக்கிறோம் என்பது, அவரவர் கையில் இருக்கிறது. இறந்தபின், என்ன நடக்கும் என்பது, யாருக்கும் தெரியாது. அதனால்தான், இந்த சேவையைச் செய்து வருகிறேன் (நன்றி தினமலர்). தன்னலம் மறந்த மனிதநேயச் சேவை செய்துவரும் இந்த சிறந்த மனிதர்களைப் போற்றுவோம். தியாகம், அறம், மனிதநேயம், ஏழை எளியவர்கள் மீது பரிவன்பு, கருணை, மத நல்லிணக்கம் விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட உயர்ந்த நற்பண்புகளில் வளர்வோம்.

ஜெனீவா ஒப்பந்தங்கள்

ஆகஸ்ட் 12, இத்திங்கள், ஜெனீவா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்ட 70ம் ஆண்டு நிறைவு கடைப்பிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய கடும் இழப்புகளைக் கண்முன் நிறுத்தி, போர்க் காலங்களில் அப்பாவி மக்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை வரையறுக்கும் உலகளாவிய சட்டத்திற்கு, 1949ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, உலக நாடுகள் இசைவு தெரிவித்தன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்திருப்பதுபோல, போர்க் காலங்களில் உலகளாவிய மனிதாபிமான சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். போரும், பயங்கரவாதமும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் கடும் இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதை நாம் ஒருபோதும் மறவாதிருப்போம்.

உலக இளையோர் நாள்

ஆகஸ்ட் 12, இத்திங்கள், உலக இளையோர் நாளாக, ஐ.நா. சிறப்பித்தது. இந்நாளை, 1999ம் ஆண்டில் ஐ.நா.பொது அவை உருவாக்கியது. இன்று உலகில், 10க்கும், 24 வயதுக்கும் உட்பட்ட இளையோர், 180 கோடிப் பேர் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், 14 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களின் கணிதத் திறமையும், வாசிக்கும் திறனும் குறைவுபடுவதாக ஐ.நா. கூறியுள்ளது. எனவே, இவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு, உலக நாடுகளை ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.  

தன்னலம் கருதாது, பிறர்நலம் கருதி வாழ்பவரே மனிதர் எனச் சொல்லத் தகுதியுள்ளவர். இந்த வாழ்வில், விடியாத இரவென்று எதுவுமில்லை. முடியாத துயரென்று எதுவுமில்லை. வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை. வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை (கவிப்பேரரசு வைரமுத்து). எனவே, இப்பூமியில் ஒருமுறை வாழக் கிடைத்த அற்புதக் கொடையாகிய வாழ்வை, சிறப்புறச் செய்வோம்.

வாரம் ஓர் அலசல் – தன்னலம் கடந்த மனிதநேயம்
12 August 2019, 15:35