தேடுதல்

நாகசாகி நினைவிடம் நாகசாகி நினைவிடம் 

ஜப்பான், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட...

அமெரிக்க ஐக்கிய நாடு, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் வீசிய அணு குண்டால், ஏறத்தாழ 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நாகசாகி நகரில், ஆகஸ்ட் 9, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட 74ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய, அந்நகர மேயர் Tomihisa Taue அவர்கள், உலகில், அணு ஆயுதங்களால் கடும் அழிவை எதிர்கொண்ட ஒரே நாடாகவுள்ள ஜப்பான், ஐ.நா.வின் அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்தில், உடனடியாக கையெழுத்திட்டு, விரைவில் அதை செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அணு ஆயுத ஐந்து வல்லரசு நாடுகள் உட்பட, ஏறத்தாழ எழுபது நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய Taue அவர்கள், கொரிய தீபகற்பத்தையும், வடகிழக்கு ஆசியாவையும், அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக அமைப்பதற்கு, ஜப்பான் நாடு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

அணு ஆயுதங்கள் பயனுள்ளவை என்ற எண்ணம் பரவிவரும் சூழலில், உலகம் தற்போது மிகக் கடுமையான ஆபத்தில் உள்ளது என்றும் உரையாற்றிய Taue அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாடும், இரஷ்யாவும், அணு ஆயுதச் சேமிப்பை மிகவும் குறைத்து, தங்களுக்குரிய பொறுப்பை மீண்டும் ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹரோசிமாவில் வீசிய முதல் அணு குண்டால், ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் வீசிய அணு குண்டால், ஏறத்தாழ 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதற்குப் பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஜப்பான் சரணடைந்தது.

இதற்கிடையே, 1987ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யாவுடன் கையெழுத்திட்ட, மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து, இம்மாத துவக்கத்தில், முறைப்படி விலகிவிட்டதாக அறிவித்தது. இதனால், புதிய ஆயுதப் போட்டிகள் உருவாகும் என்ற அச்சம் நிலவுகிறது. 500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது. (AsiaNews / Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2019, 15:50