தேடுதல்

Vatican News
தாய்லாந்தில் கட்டாய  பாலியல் தொழிலில் பெண்கள் தாய்லாந்தில் கட்டாய பாலியல் தொழிலில் பெண்கள்  (©yupachingping - stock.adobe.com)

மனித வர்த்தகத்திற்குப் பலியானோரில் 700 பேர் மீள்குடியமர்வு

தாய்லாந்துக்கு மனித வர்த்தகம் செய்யப்படும் மக்கள், வேலை செய்யவும், பிச்சையெடுக்கவும், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாய்லாந்தில் மறுவாழ்வு மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த, மனித வர்த்தகத்திற்குப் பலியானோரில் ஏறத்தாழ 700 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் தங்களின் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசுக்கும், மியான்மார் அரசுக்கும் இடையே நடைபெற்ற உடன்பாட்டின்கீழ், இந்த 700 பேரும், மியான்மாருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

மனித வர்த்தகத்திற்குப் பலியானவர்களை மீண்டும் சமுதாயத்தோடு ஒன்றிணைப்பது குறித்து, யாங்கூனில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 23வது கூட்டத்தின் முடிவில், தாய்லாந்திலுள்ள, இம்மக்களை மியான்மார் ஏற்பது குறித்து அறிவிக்கப்பட்டது.

இம்மக்கள், இரண்டு அல்லது மூன்று தவணைகளாக, மியான்மார் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று, மனித வர்த்தகத்திற்கெதிரான தாய்லாந்து பிரிவின் இயக்குனர் Sunee Srisangatrakullert அவர்கள் தெரிவித்தார்.

தாய்லாந்திற்கும் மியான்மாருக்கும் இடையேயுள்ள ஒப்பந்தப்படி, தாய்லாந்தில் வேலைசெய்வதற்கென, ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் மியான்மார் மக்கள் வருகின்றனர். ஆயினும், சட்டத்திற்குப் புறம்பே எத்தனை பேர் நுழைகின்றனர் என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

ஐ.நா. நிறுவன அதிகாரிகளின் கணிப்புப்படி, தாய்லாந்தில் இன்று, ஏறத்தாழ 49 இலட்சம் குடியேற்றதார தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் அதிகமான மக்கள், தென்கிழக்கு ஆசியாவில் வறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் (AsiaNews/Agencies)

13 August 2019, 14:50