கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் 

குடி நீரிலுள்ள நெகிழி நுண் துகள்கள் நலவாழ்வுக்கு…

கழிவு நீரிலுள்ள, வேதியப் பொருள்கள் மற்றும் வண்டல் மண்ணைச் சரியான முறையில் அகற்றுவதன் வழியாக, நீரில், 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நெகிழி நுண் துகள்களை அகற்ற முடியும் - WHO

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

குடி நீரிலுள்ள  நெகிழி (பிளாஸ்டிக்) நுண் துகள்கள், நலவாழ்வுக்கு அச்சுறுத்தலாக இல்லை என, WHO எனப்படும், ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம், ஆகஸ்ட் 21, இப்புதனன்று வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அந்நிறுவனத்தின் மருத்துவர் Bruce Gordon அவர்கள், உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்ட முதல் அறிக்கையில், உடலில் செல்லும், பெரிய மற்றும் சிறிய நெகிழிப் பொருள்கள் ஜீரணிக்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டதையடுத்து, அது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார்.  

இந்த ஆய்வின் முடிவில், குடி நீரிலுள்ள  நெகிழி நுண் துகள்கள், நலவாழ்வுக்கு பெரிய அளவில் அச்சுறுத்தலாக இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது என்று, மேலும் தெரிவித்தார், Gordon.

கழிவு நீரிலுள்ள, வேதியப் பொருள்கள் மற்றும் வண்டல் மண்ணை, சரியான முறையில் அகற்றுவதன் வழியாக, நீரில், 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நெகிழி நுண் துகள்களை அகற்ற முடியும் என்பதையும், Gordon அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உலகில் 200 கோடிப் பேர், வண்டல் மண் கலந்த குடி நீரைப் பயன்படுத்துகின்றனர், இது ஆண்டுக்கு, 10 இலட்சம் உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றது என்றும், நெகிழி மாசுகேடு, உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்றும், Gordon அவர்கள் கூறினார்.

நெகிழி நுண் துகள்கள் என்பவை, 5 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவிலுள்ளவை என்றும், இந்த நெகிழித் துகள்கள், ஆறுகள், ஏரிகள், குடி நீர் விநியோகங்கள், மற்றும், தண்ணீர் பாட்டில்களில் உள்ளன. (BBC)

இதற்கிடையே, உலகின் பல நாடுகளின் கடற்கரை மணலிலும் நெகிழி துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஒரு கிலோ உப்பில் 63.76 மைக்ரோ கிராம் அளவில் நெகிழி நுண் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு நபர் சராசரியாக 5 கிராம் அளவுக்கு உப்பை உட்கொண்டால் ஆண்டிற்கு 117 நெகிழி நுண் துகள்களை உட்கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2019, 15:04