ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டதன் 74ம் ஆண்டு நிறைவு நிகழ்வு ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டதன் 74ம் ஆண்டு நிறைவு நிகழ்வு  

ஹிரோசிமா நகரில் அமைதி கூட்டம்

50 ஆயிரம்பேர் ஒன்றுகூடி, மழையில் நனைந்துகொண்டே, அணுகுண்டு வீசப்பட்டதன் 74ம் ஆண்டை மௌனமாகச் சிறப்பித்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஜப்பானின் ஹிரோசிமா நகரில் 50,000 பேர், ஆகஸ்ட் 6, இச்செவ்வாயன்று அமைதியில் ஒன்றிணைந்து நின்று, அந்நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 74ம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தனர்.      

ஜப்பானில் இன்று காலையில் புயல்காற்று வீசலாம் என்ற அச்சத்தின் மத்தியிலும், 50 ஆயிரம்பேர் ஒன்றுகூடி, மழையில் நனைந்துகொண்டே, அணுகுண்டு வீசப்பட்டதன் 74ம் ஆண்டை மௌனமாகச் சிறப்பித்தனர்.

அணுஆயுதங்களைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தை 2017ம் ஆண்டு ஐ.நா, நிறுவனம் முன்வைத்ததிலிருந்து இதுவரை 122 நாடுகள் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஜப்பானும் ஏனைய நாடுகளும் இதில் கையெழுத்திட்டு, அணு ஆயுதத்தை முற்றிலுமாக இவ்வுலகிலிருந்து ஒழிக்க முடிவெடுக்க வேண்டும் என்ற அழைப்பை, இக்கூட்டத்தில் முன்வைத்தார் ஹிரோஷிமா மேயர் Kazumi Matsui.

அணு ஆயுதப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்குச் செவிமடுத்து, இந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் நாடுகள் கையெழுத்திட வேண்டும் என்ற உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தார், மேயர் Matsui.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி காலை உள்ளூர் நேரம் 8.15 மணிக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டால் அணுகுண்டு வீசப்பட்டு, 1 இலடசத்து 40 ஆயிரம் பேரை பலிவாங்கிய நிகழ்வை நினைவுகூரும் விதமாக, இன்று காலை ஹிரோசிமாவின் அமைதி பூங்காவில் இடம்பெற்ற கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர்.

அணுகுண்டு வீச்சுக்களால் அழிவுக்குள்ளான ஜப்பானின் ஹிரோசிமா, நாகாசாகி நகரங்களை, இவ்வாண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2019, 14:25