பல்கேரியா-ஜெர்மனி கடல் பயணம் பல்கேரியா-ஜெர்மனி கடல் பயணம்  

பூமியில் புதுமை:கடல் பாதுகாப்புக்காக ‘மகளிர் மட்டும்’ கடல் பயணம்

ஆண்டுக்கு 80 இலட்சம் டன் நெகிழி கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. 2050-ல் மீன்களைவிட நெகிழிவு கழிவுகள்தாம் கடலில் அதிகமாக இருக்கும்

மேரி தெரேசா - வத்திக்கான்

நெகிழி அரக்கனிடமிருந்து கடலைக் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, பெண்கள் மட்டும்’ என்ற ஒரு குழு, கடல் டிராகன் என்றழைக்கப்படும், 72 மீட்டர் நீளமுள்ள பாய்மரக்கப்பலில் 38,000 கடல் மைல் தூரம், அதாவது 70,000 கிலோமீட்டர் தூரப் பயணத்தை வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கவிருக்கிறது கடல் மாசடைதல் பிரச்சனையில் கவனம் செலுத்திவரும், ‘எக்ஸ்பெடிஷன் (eXXpedition)’ தன்னார்வத் தொண்டு அமைப்பு, இந்தப் பயணத்தை ஒருங்கிணைக்கிறது. இந்தப் பயணத்தில், அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், கடல்சார் உயிரியல் மாணவர்கள், உயிரின திரைப்பட வல்லுநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என, உலகின் பல பகுதிகளில் வாழும் 380 திறமையான பெண்கள் கலந்துகொள்ள முன்வந்திருக்கிறார்கள். இந்தப் பெண்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், நெகிழிப் பொருள்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆர்டிக், அட்லான்டிக், பசிஃபிக், இந்தியப் பெருங்கடல், கலாபாகோ, தென் பசிஃபிக் தீவுகள் என, பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ‘மகளிர் மட்டும்’ என்ற கடல் பயணக் குழுவின் தலைவர் எமிலி பென் அவர்கள் கூறுகையில், கர்ப்பிணிகளுக்கு நெகிழி நச்சு காரணமாக ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு, கருவின் வளர்ச்சியும் சிக்கலாகிறது. மேலும், நெகிழிப் பொருள்களால் ஏற்படும் நச்சு, கருப்பை மற்றும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. எனவே, பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வைக் கொண்டுசெல்லத்தான் இந்தப் பயணம் என்று சொல்லியுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்குமுன், ஒரு கடல் பயணத்தின்போது, கரையிலிருந்து 1,000 கடல் மைல்களுக்கு அப்பால், அட்லான்டிக் கடலின் நடுவே மிதந்த ஒரு பல்துலக்கிதான், நெகிழி கழிவுகள் கடலில் பரவும் வேகத்தை எமிலி அவர்களுக்கு சுட்டிக்காட்டியது. ஜப்பான் நாட்டு உணவுப் பைகள் கானடா நாட்டின் ஆள் நடமாட்டமில்லாத தீவுகளின் கரைகளில் ஒதுங்கியிருப்பதைக் கண்டபோது, அதன் தீவிரத்தை எமிலி உணர்ந்தார். ஹவாய் தீவின் அருகே நடுக்கடலில் மிதந்துகொண்டிருந்த நெகிழிப்பொருள்கள் குப்பைமேடு ஒன்று, அவரை அதிர்ச்சியில் உறையவைத்தது. நெகிழி மாசு, உலகின் அனைத்துக் கடல்களுக்கும் பொதுவான பிரச்சனை என்பதை உணர்ந்த எமிலி அவர்கள், சில ஆண்டுகளுக்குமுன் 10 பேருடன், பாய்மரக்கப்பல் பயணம் ஒன்றை மேற்கொண்டார். இன்று அது, 380 பெண்களுடன் உலகம் சுற்றும் ஆராய்ச்சிப் பயணமாக மாறியுள்ளது. (நன்றி-அவள் விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2019, 14:43