தேடுதல்

மணிப்பூர் மாநிலத்தில் பசுமை திட்ட தூதராக, 9 வயது சிறுமி மணிப்பூர் மாநிலத்தில் பசுமை திட்ட தூதராக, 9 வயது சிறுமி 

பூமியில் புதுமை – பசுமை திட்ட தூதராக, 9 வயது சிறுமி

இந்திய சூழலியல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, மணிப்பூர் மாநிலம், 2017ம் ஆண்டில், காடுகள் பகுதியை 1.18 விழுக்காடு விரிவுபடுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில், 77.69 விழுக்காடு, அதாவது 17,346 சதுர கிலோ மீட்டர் பகுதி காடுகளாகும்

மேரி தெரேசா - வத்திக்கான்

வலன்டீன் எலங்பம் (Valentina Elangbam) எனப்படும் ஒன்பது வயது சிறுமி, இந்த மாதத்தில், மணிப்பூர் மாநிலத்தின் பசுமை திட்ட தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமியின் குடும்பம், காக்சிங் என்ற ஊரில், ஆற்றங்கரையை ஒட்டிய குடியிருப்பில் வாழ்ந்து வருகிறது. இந்த ஊர், மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 48 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. உள்ளூர் பள்ளியில் படித்துவரும் வலன்டினா, முதல் வகுப்பு படிக்கும்போது, சுற்றுச்சூழலின் அவசியத்தைக் கற்றுக்கொடுத்த ஆசிரியரின் அறிவுரைப்படி, தன் வீட்டு வாசலை ஒட்டிய பகுதியில், குல்மோஹர் (Gulmohar) இனத்தைச் சார்ந்த, இரண்டு மரக்கன்றுகளை நட்டு, அவற்றிற்குத் தவறாமல் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தார். அத்துடன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றோடு உரையாடுவது, அங்கேயே விளையாடுவது என்று, அவற்றின் மீது நிறைய பாசம் வைத்திருந்தார். வலன்டினாவின் அன்பான வளர்ப்பால், அந்தக் மரக்கன்றுகளும் நன்கு வளர்ந்து பூத்துக்குலுங்கி, அவரை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்துக் கொண்டிருந்தன. ஒரு நாள், சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, ஆசையாக வளர்த்திருந்த அந்த மரங்கள் இரண்டும் வெட்டப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, சிறுமி வளர்த்த இரண்டு மரங்கள் உட்பட, பல மரங்களை அதிகாரிகள் வெட்டியிருந்தனர். என் தம்பி போன்று, உரையாடி, விளையாடி ஆசை ஆசையாக வளர்த்த மரங்களை வெட்டி விட்டார்களே என்று, மரம் கிடந்த இடத்தைச் சுற்றி சுற்றி வந்து அழுதார் சிறுமி. அவர் அழுகையை நிறுத்தவோ, அவரை அமைதிப்படுத்தவோ யாராலும் முடியவில்லை. இதனை அவரது மாமா தனது கைபேசியில் புகைப்படம் எடுத்து, மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன்சிங் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். உடனே அவர் அதிகாரிகளை அழைத்து, அந்தச் சிறுமியின் வழியாகவே, மீண்டும் அதே ஆற்றங்கரையில் இருபது மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்தார். மரத்தின் மீது இவ்வளவு பாசம்கொண்ட இந்தச் சிறுமியைவிட, சிறந்த தூதர் கிடைக்கமாட்டார் என்று சொல்லி, மணிப்பூர் மாநிலத்தின் பசுமை திட்ட தூதராகவும் வலன்டீனாவை நியமித்தார், முதலமைச்சர் பைரன்சிங். 2017ம் ஆண்டின் நிலவரப்படி, மணிப்பூர் மாநிலம், 263 கிலோ மீட்டருக்கு காடுகளை விரிவுபடுத்தியுள்ளது. (உதவி-தினமலர்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2019, 15:26