கும்பகோணம் ஆனந்த் தம்பதியர் ஒரு வருடத்தில் 1000 மரங்கள் நட்டு உருவாக்கிய காடு கும்பகோணம் ஆனந்த் தம்பதியர் ஒரு வருடத்தில் 1000 மரங்கள் நட்டு உருவாக்கிய காடு 

பூமியில் புதுமை: ஒரு வருடத்தில் மரங்களடர்ந்த சோலை

கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் தம்பதியர், அந்நகருக்கு அருகே பொது இடத்தில் சொந்த செலவில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டதுடன், அதனை வளர்த்து, இன்று சிறிய அளவிலான காட்டை உருவாக்கியுள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

கும்பகோணத்தை சேர்ந்த ஆனந்த், அவரது மனைவி ஆனந்தி ஆகிய இருவரும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கால்நடை மருத்துவர்களாகப் பணியாற்றி வந்தனர். ஒருகட்டத்தில், சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்ய வேண்டும், குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் என்ற ஆவல்வரவே, கடந்த 2010ம் ஆண்டு ஊருக்குத் திரும்பினர். கால்நடை மருத்துவ தம்பதியரான இவர்கள், செக்கான்கன்னி என்ற கிராமத்தில் 13 ஏக்கர் விளை நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய தொடங்கினர். அச்சமயத்தில், அப்பகுதியில் அனைவரும், அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுவிட்ட பூச்சி கொல்லி மருந்தை விவசாயத்திற்கு சாதாரணமாகப் பயன்படுத்துவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனால், இத்தம்பதியர், இயற்கை முறையில் மாப்பிளை சம்பா, கருங்குறுவை உள்ளிட்ட பல ரக நெல்களை சாகுபடி செய்யத் தொடங்கினர். முதல் இரண்டு ஆண்டுகளில் மகசூல் சிறப்பாக இல்லையென்றாலும், மூன்றாவது ஆண்டில் நல்ல பலனைக் கொடுத்தது. அவர்கள், இந்த இயற்கை முறை விவசாயத்தை தற்போதும் தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும், சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு மரங்களை வளர்க்கவும், இளையோர் மற்றும் அனைவர் மத்தியிலும் மரம் வளர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், மரங்கள் வளர்பதற்கான இந்த முயற்சியில் இறங்கினர். இதற்காக கடந்த ஆண்டு ஸ்ரீநிவாசநல்லுார் அய்யனார் கோயிலுக்குச் சொந்தமான 7 ஆயிரம் சதுர அடி நிலத்தில் உரிய அனுமதி பெற்று, அரசமரம், ஆலமரம், புங்கன், நெல்லி, அரளி, வேம்பு உள்ளிட்டவையும் பழம் மற்றும் பலன் தரும் மரக்கன்று, மூலிகை மரங்கன்றுகள் என 30 வகையான ஆயிரம் மரக்கன்றுகளை சொந்த செலவில் நட்டதுடன், சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி வளர்க்கத் தொடங்கினர். அவை இன்று மரமாக வளர்ந்து, ஒரு சோலைவனமாக மாறி ஒரு சிறிய காடாக காட்சி அளிக்கிறது. மேலும், 200 பனை விதைகளை ஊன்றியுள்ளதோடு ஒவ்வொன்றையும் தங்கள் பிள்ளைகளாக நினைத்து வளர்த்துள்ளனர். அதற்கும் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இந்த தங்களின் பணிக்கு, மூன்று இலட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளனர், கும்பகோணம், ஆனந்த் தம்பதியர்.(நன்றி பசுமை விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2019, 14:01