இந்திய விவசாயிகள் இந்திய விவசாயிகள்  

பூமியில் புதுமை : காணாமல் போகும் இந்திய விவசாயிகள்

பதினோரு ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 77 இலட்சம் இந்திய விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை ஏறக்குறைய 84 கோடி. 2012ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை ஏறக்குறைய 127 கோடியாக இருந்தது. இருபத்திரண்டு ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை ஏறக்குறைய 50 விழுக்காட்டு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

1991-ம் ஆண்டு துவங்கி 2012ம் ஆண்டு வரையிலான கால அளவில் ஏறக்குறைய ஒன்றரை கோடி விவசாயிகள், எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை. முன்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பலரும், தற்போது பல்வேறு சேவைத் துறைகளில் பணியாளர்களாகவும், விவசாயக் கூலிகளாகவும் புலம்பெயர்ந்துள்ளதாக, திட்ட கமிஷனின் அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகமயமாக்கல் அமல்படுத்தப்பட்டதற்கு பிந்தைய காலங்களில்தான் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த இருபத்திரண்டு வருட காலகட்டத்தில் நாளொன்றிற்கு ஏறக்குறைய 2,035 விவசாயிகள் ‘காணாமல்’ போயுள்ளனர் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது. இன்றைய நிலையில், கடந்துசெல்லும் ஒவ்வொரு மணி நேரத்திலும், ஏறக்குறைய 85 இந்தியர்கள் விவசாயத்திலிருந்து விலகிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் பயிர்த்தொழிலில் எட்டு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே ஈடுபட்டுள்ளனர். எட்டுப் பேர் பயிரிட்டு உருவாக்குவதை, 100 பேர் உண்ண வேண்டியிருக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2019, 14:31