தேடுதல்

 எத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள்  நடும் நிகழ்வு எத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

பூமியில் புதுமை – 12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள்

2001ம் ஆண்டில், கானடாவின் Saskatchewan பகுதியில், Ken Chaplin என்பவர், ஒரே நாளில் 15,170 சிவப்பு தேவதாரு மரக்கன்றுகள் நட்டு உலக சாதனையில் இடம்பிடித்தார்

மேரி தெரேசா - வத்திக்கான்

எத்தியோப்பிய நாடு, 12 மணி நேரத்தில், 35 கோடிக்கு அதிகமான மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்துள்ளது. வடகிழக்கு ஆப்ரிக்காவிலுள்ள இந்நாடு, செழிப்பான நிலப் பகுதியையும், காடுகளையும், எண்ணற்ற ஆறுகளையும் கொண்டுள்ளது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்நாட்டின் 35 விழுக்காட்டுப் பகுதி (ஏறத்தாழ 4,20,000 சதுர கி.மீ) காடுகளாக இருந்தன. ஆயினும், அண்மை ஆய்வின்படி, ஏறத்தாழ 11.9 விழுக்காட்டுப் பகுதியில்தான் காடுகள் உள்ளன. அத்துடன், அந்நாடு, ஒவ்வோர் ஆண்டும், 1,410 சதுர கிலோ மீட்டர் பகுதி காடுகளை இழந்து வருவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மரங்கள் பெருமளவில் அழிக்கப்படுவது மற்றும், காலநிலை மாற்றத்தின் கடும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கத்தில், எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed அவர்கள் வருகிற அக்டோபருக்குள், 470 கோடி மரக்கன்றுகள் நடப்படும் திட்டத்தை அறிவித்தார். அதன் ஆரம்பமாக, , கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, 12 மணி நேரத்தில் இருபது கோடி மரக்கன்றுகள் நடுவதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்நாளில், 35 கோடியே 36 இலட்சத்து, 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகள் நடப்பட்டன என்று அந்நாட்டின் தொழில்நுட்ப அமைச்சர் கூறியுள்ளார்.  அரசு, நாடெங்கும் தன்னார்வலர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியதோடு, சில அரசு அலுவலகங்கள் அன்றைய நாளில் விடுமுறையளித்து, தன் பணியாளர்களை இச்சாதனையில் ஊக்குவித்தன. இப்பணியில், எத்தியோப்பியாவின் பத்து கோடியே ஐம்பது இலட்சம் மொத்த மக்களில், 2 கோடியே 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஈடுபட்டனர். அவோகாதோ போன்ற பழமரங்கள் உட்பட, அம்மண்ணில் வளரக்கூடிய மரங்களே பெருமளவில் நடப்பட்டுள்ளன.

மரக்கன்றுகள் நடுவதில், கின்னசில் இதுவரை, இடம்பெற்றுள்ள நாடு இந்தியா. 2016ம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில், எட்டு இலட்சத்திற்கு அதிகமானோர், ஐந்து கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2019, 15:27