கல்லூரி படிப்புடன் ஆடுகள் மேய்க்கும் இராஜலட்சுமி கல்லூரி படிப்புடன் ஆடுகள் மேய்க்கும் இராஜலட்சுமி 

பூமியில் புதுமை - காலையில் கல்லூரி, மாலையில் வயல்காடு

விவசாயம்தான் நமக்குச் சோறுபோடுகிறது. இந்த மண்ணை நாம் எப்படி மறந்துவிட முடியும்? இந்த மண்ணை நாம் நேசிக்க வேண்டும் – கல்லூரி நேரம் போக, மீதி நேரத்தில் விவசாயம் செய்யும் மாணவி ராஜலெட்சுமி

மேரி தெரேசா - வத்திக்கான்

இளம்பெண் இராஜலெட்சுமி அவர்கள், ஒரத்தநாட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை கணிதம் இறுதியாண்டு படித்துவருகிறார். இவரது அக்கரைவட்ட கிராமத்தில் எல்லாரும் ஏழை விவசாயிகள். மாணவி இராஜலெட்சுமி, காலையில் கல்லூரி, மாலையில் விவசாயம் என்று, படிப்போடு, வயல்காட்டிலும் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறார். காலையில் ஆறே முக்கால் மணிக்கெல்லாம் கல்லூரிக்குப் புறப்பட்டுவிடும் இவர், இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். என்னோடு பிறந்த ஐந்து பேரையும் படிக்க வைத்து முன்னேற்றுவதற்கு எங்களிடம் உள்ள ஒரு ஏக்கர் வயல்தான் முக்கிய காரணம். சிறு வயதிலிருந்தே நாங்களும் அப்பாவுக்கு உதவியாக வயலுக்குப் போவோம். விவசாயத்தில் எனக்கும் ஆர்வம் அதிகம். எங்களை மாதிரி பிள்ளைகளுக்கு விடுமுறை என்றாலே ஆடு, மாடு மேய்க்கத்தான் செல்வோம். எங்கள் வீட்டில், ஒரு மாடும் 13 ஆடுகளும் இருக்கின்றன. விடுமுறையில் இந்த ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே எனக்கு நாள் செலவழிந்துவிடும். சென்ற மாதத்தில் எங்கள் ஊரில் நடவு வேலை அதிகமாக இருந்தது. எங்கள் வீட்டு வயலிலும் நாத்துவிட்டு முப்பது நாள்கள் ஆகியிருந்தன. எங்கள் வயலில் வேலை செய்யவும் ஆள்கள் கிடைக்கவில்லை. அப்போது அப்பாவிடம், “நீங்க நாத்தைப் பறிச்சுக் கொடுங்க. நான் தனியாக நடவு நடுறேன்”னு விளையாட்டாகச் சொன்னேன். விளையாட்டாகச் சொன்னதை உண்மையாவே செய்தால் என்னவென்று தோன்றியது. அதற்கு அப்பாவும் சரி என்று சொன்னார். சென்ற மாதத்தில், 21 பேர் செய்ய வேண்டிய வேலையை, நான் மட்டுமே, மூன்றே நாளில் தனியாளாக முடித்துவிட்டேன். காலையில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு, மதியத்துக்குமேல் வந்து நடவு செய்தேன். இதை எனது சொந்தங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். எப்படியோ ஊடகங்களுக்குத் தெரிந்துவிட்டது என்று சொல்லியுள்ளார் மாணவி இராஜலெட்சுமி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2019, 14:48