தேடுதல்

Vatican News
பிரேசிலிலுள்ள அமேசான் காடுகள் அழிக்கப்படுகின்றன பிரேசிலிலுள்ள அமேசான் காடுகள் அழிக்கப்படுகின்றன 

பூமியில் புதுமை : பிரேசிலில் கனிமவளக் கொள்ளை

உலகின் மழைக்காடுகளில் மூன்றில் இரு பங்குள்ள அமேசான் காடுகளை, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில், மிக வேகமாக அழிக்கும் செயலை, தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது, பிரேசில் அரசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அமேசான் பருவமழைக் காடுகளின் சில இடங்களில் தங்கம், மக்னீசியம், இரும்பு, தாமிரம் ஆகிய தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. அவற்றை எடுக்கும் பணியில் அரசு அனுமதியுடன் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு பிரேசிலின், அமாபா மாநிலத்தில், அமேசான் காட்டில் உள்ள ஒரு பழங்குடியின கிராமத்தைக் கைப்பற்றுவதற்காக, பழங்குடியினத் தலைவரான எமிரா வாஜாபியைக் கொன்றிருக்கிறார்கள் தங்க சுரங்கப் பணியாளர்கள். பயங்கரமான ஆயுதங்களால் அவரைத் தாக்கி ஆற்றில் வீசியிருக்கிறார்கள்.

அமாபாவில் ஆறு இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில், கிராமங்களில், வாஜாபி சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியினர், ஏறக்குறைய 1,200 பேர் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வப்போது, தாதுக்கனிகள் எடுக்கும் பணியாளர்களுக்கும், இந்தப் பழங்குடியின மக்களுக்கும் இடையே சிறுசிறு மோதல்கள் நிகழும். ஆனால் இந்த முறை, பழங்குடியினத் தலைவர் எமிரா வாஜாபி கொடூரமாகக் கொல்லப்பட்டு, பழங்குடியின கிராமமான விடுடு ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கிராமப் பழங்குடிகள், 40 நிமிடப் பயண தூரத்தில் உள்ள, மாரிரி கிராமத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். சுரங்கப் பணியாளர்கள் தரப்பில் இருந்து, ‘திரும்பி வர முயற்சி செய்ய வேண்டாம்’ என அவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

ஒரு பக்கம், காடுகளை, தெய்வமாகப் பார்க்கும் பழங்குடிகள், மறுபக்கம் காடுகளைப் பணமாகவும் வளர்ச்சியாகவும் பார்க்கும் பெருங்குடிகள். உலகமயமாக்கல் கொள்கையால் காடுகள் அழிக்கப்பட்டதுதான் மிச்சம். ஒரு காலத்தில், ஓர் இடத்தில் இருக்கும் நிலமும் நீரும் பூர்வகுடிகளுக்கே சொந்தமாக இருந்தன. அப்போது எதுவும் மாசுபடாமல் சுத்தமாகத்தான் இருந்தது. இப்போது பூர்வகுடிகள் விரட்டப்பட்டு, நிலமும் நீரும் ஆக்ரமிக்கப்பட்டு நஞ்சாகியுள்ளன. இனிவரும் காலங்களில், பிரேசிலில் நடக்கப்போவதும் இதுதான், என்று சொல்கின்றனர், சமுதாய ஆர்வலர்கள்.

பிரேசில் பிடியிலிருந்து பழங்குடிகளையும் காடுகளையும் காப்பாற்றப்போவது யார்? (நன்றி: விகடன்)

14 August 2019, 12:47