பெரியகுளம் குளத்தை சுத்தம் செய்யும் தன்னார்வலர்கள் பெரியகுளம் குளத்தை சுத்தம் செய்யும் தன்னார்வலர்கள் 

பூமியில் புதுமை – இளையோர் தூர்வாரிய 150 ஏக்கர் குளம்

பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து, அங்குள்ள 150 ஏக்கர் கொண்ட, பெரியகுளம் குளத்தை, தாங்களாகவே தூர்வாரி வருகின்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

பட்டுக்கோட்டையில் உள்ள ஒட்டங்காடு, மற்றும், அதன் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து, அங்குள்ள 150 ஏக்கர் கொண்ட, பெரியகுளம் குளத்தை, தாங்களாகவே தூர்வாரி வருகின்றனர். அரசிடமிருந்து அனுமதியை மட்டும் பெற்ற தன்னார்வலர்கள், மக்களின் உதவியுடன், குளத்தைச் சீரமைத்து வருகின்றனர். இத்திட்டத்தைத் தொடங்கக் காரணமாக இருந்த, திருநெல்வேலி சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், ஐ.ஏ.எஸ். அவர்கள், தங்களின் செயல்பாடுகள் குறித்து, 'இந்து தமிழ்' இணையத்திடம் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார்:

நம்முடைய கிராமத்துக்கு, நாம்தான் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், டாக்டர் அப்துல் கலாம் கிராம வளர்ச்சிக் குழுவைத் தொடங்கினோம். 9 கிராமங்கள் சேர்ந்து, இந்தப் பணியை முன்னெடுத்திருக்கிறோம். ஊர்த் தலைவர்கள், முக்கியமான ஆட்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் ஆகியோருடன் இதுகுறித்துக் கலந்து பேசி, குளத்தைத் தூர்வார ஆரம்பித்தோம்.

ஊர் இளைஞர்கள், தன்னார்வலர்கள், பெண்கள், பொதுமக்கள் என, அனைத்துத் தரப்பினருமே, குளத்தை மீட்டெடுக்க, ஆர்வத்துடன் வேலை செய்கின்றனர். உடல் உழைப்பைத் தருபவர்களோடு, பொருளாக அளிப்பவர்களும் அதிகம். இன்னும் சிலர், தங்களின் சொந்த டிராக்டர், புல்டோசர்களைக் கொண்டுவந்து, இலவசமாக வேலை செய்து கொடுப்பார்கள். வேறு சிலர், சாப்பாடு போடுவார்கள்.

குளத்தில் தூர்வாரும் பணி நடைபெறுவதை, பள்ளி மாணவர்களும் வந்து பார்வையிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், தங்களின் பாக்கெட் மணியை, குளத்துக்காகக் கொடுத்து, நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகம் என, அனைத்துத் தரப்பினரும், குளத்தை மீட்டெடுக்க உறுதுணையாக இருக்கின்றனர்.

தங்கள் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, ஏனைய இளையோரும், அவரவர் கிராமத்தை முன்னேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் ஆட்சியர் சிவகுரு அவர்கள், கிராமத்தில் நடக்கும் கூட்டங்களில் இளையோர் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்றும், அங்கு செல்லும்போது, தனி ஆளாகச் செல்வதற்குப் பதில், ஒரு குழுவாகச் சென்று, தங்கள் கருத்தை வலியுறுத்த வேண்டும் என்றும், பரிந்துரை செய்கிறார்.

நாம் பிறந்த இடத்துக்குத் தேவையானதை, நாம்தான் செய்யவேண்டும். நாம் தொடங்கினால் போதும்; மற்றவர்கள், அதை, சிறப்பாகச் செய்துமுடிப்பார்கள்... இவ்வாறு கூறுகிறார், சிவகுரு ஐ.ஏ.எஸ்.

நீ உலகில் காண விரும்பும் மாற்றம், முதலில் உன்னிடம் நிகழவேண்டும் – என்று சொல்லித்தந்தவர், மகாத்மா காந்தி. (க.சே.ரமணி பிரபா தேவி – இந்து தமிழ் திசை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2019, 14:37