தேடுதல்

அமேசான் மழைக்காடுகளில் தீ அமேசான் மழைக்காடுகளில் தீ  

அமேசான் மழைக் காடுகளில் தீ – நம் வீடு எரிகின்றது

உலகின் நுரையீரலாகிய அமேசான் மழைக்காடுகள், இப்பூமிக்கோளத்திற்குத் தேவையான 20 விழுக்காடு ஆக்ஜிசனை உற்பத்தி செய்கின்றன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் மழைக்காடுகளில் தீ பற்றியெரிவதற்கு 99 விழுக்காடு மனிதர்களே காரணம், குறிப்பாக, நிலங்களைப் பயன்படுத்த விரும்பும் விவசாயிகள், விலங்குகளை வளர்ப்பவர்கள் மற்றும் மரம் வெட்டுபவர்களே காரணம் என்று, சூழலியல் நிறுவனங்களும், ஆய்வாளர்களும் குறை கூறியுள்ளனர்.

அமேசான் மழைக்காடுகளில், 2019ம் ஆண்டு சனவரியிலிருந்து 75,000 காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவாகி உள்ளன என்றும், ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகின்றது என்றும், பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அமேசான் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகின்றது எனவும், 2018ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும், பற்றி எரியும் நிகழ்வு, 85 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும், அந்த மையம் கூறியுள்ளது.

மேலும், அமேசான் காடுகள் எரிவது, உலகளாவிய பிரச்சனை என்றும், நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில், இது குறித்து விவாதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ள பிரெஞ்சு அரசுத்தலைவர் எம்மானுவேல் மக்ரோன் அவர்கள், நம் வீடு பற்றியெரிகின்றது என்று கவலை தெரிவித்துள்ளார்.

பிரேசிலில், குறிப்பாக, ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள், இந்த காட்டுத் தீயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமேசானில், ஒவ்வோர் ஆண்டும், ஜூலை - அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில், காட்டுத் தீ நிகழ்வுகள், இயற்கையாக அதாவது மின்னலின் காரணமாக ஏற்படுகின்றன. ஆனால், மரம் வெட்டுபவர்கள், மற்றும், விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக தீ வைக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2019, 14:10