'நான் விற்பனைக்கு அல்ல' என்ற வாசகத்துடன் வியட்நாம் சிறுமி 'நான் விற்பனைக்கு அல்ல' என்ற வாசகத்துடன் வியட்நாம் சிறுமி 

வியட்நாமிலிருந்து சீனாவுக்கு மனித வர்த்தகம்

சீனாவுக்கு வர்த்தகம் செய்யப்படும் இளம் பெண்களும், சிறுமிகளும், திருமணம் மற்றும் பாலியல் தொழிலுக்கும், வாடகைத் தாயாகப் பணியாற்றவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வியட்நாம் எல்லைப்புற மாநிலங்களுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் மனிதவர்த்தகம் அதிர்ச்சியூட்டுவதாய் உள்ளது என்றும், 2012ம் ஆண்டுக்கும், 2017ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இதிலிருந்து 7,500 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும், வியட்நாம் அரசு அறிவித்துள்ளது.

வியட்நாமின், தொழில், மற்றும் சமுதாய விவகாரத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியட்நாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ள 7,500 பேரில், ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் பெண்களும், சிறாரும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு வர்த்தகம் செய்யப்படும் இளம் பெண்களும், சிறுமிகளும், திருமணம் மற்றும் பாலியல் தொழிலுக்கும், வாடகைத் தாயாகப் பணியாற்றவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சீனாவுடன் மனித வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வியட்நாமின் ஏழு மாநிலங்களில், Quảng Ninh  மாநிலத்தில் ,இக்குற்றம் அதிகமாக இடம்பெறுகின்றது என்றும், 2018ம் ஆண்டிலும், 2019ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும், 60 வியட்நாம் பெண்கள், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு வர்த்தகம் செய்யப்படும் அன்னையர்கள், 3,450 முதல், 6,035 டாலர் வரை பணம் பெறுவர் என உறுதியளிக்கப்படுகின்றனர் எனக் கூறும் அந்த அமைச்சகம், சிறுபான்மை இன சமுதாயங்களின் உறுப்பினர்களுக்கு, இது, பெரிய தொகையாகும் என்றும் கூறியுள்ளது. (AsiaNews) 

மனித வர்த்தகம், வியட்நாமிலும், தெற்கு ஆசியாவிலும், பெரியதலைவலியாக உள்ளது என, தெற்கு ஆசிய மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2019, 14:58