தேடுதல்

புதன் மறைக்கல்வியுரைக்குப் பின் Elise Lindqvistஐ சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (220519) புதன் மறைக்கல்வியுரைக்குப் பின் Elise Lindqvistஐ சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (220519)  

வாரம் ஓர் அலசல் – புதிய வாழ்வு, புதிய பயணம்

பாலியல் தொழிலாளரிடம், "இந்த தெருக்களுக்கு அப்பால் ஒரு வாழ்வு இருக்கின்றது” என்பதை நினைவுபடுத்தி, உண்மையான ஓர் அன்னையாக விளங்கி வருகிறார் Elise Lindqvist

மேரி தெரேசா - வத்திக்கான்

நம் ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையின் வரைபடம், அவரவர் கையில் உள்ளது. அந்தப் பாதை நல்லதா, கெட்டதா என்பதை முடிவு செய்வது அவரவர் விருப்பம். வாழ்க்கையில் தடைகளும், பிரச்சனைகளும் வருவது நிச்சயம், ஆனால் அவற்றை தூக்கி எறிய துணிச்சல் வேண்டும். மனதில் உறுதி வேண்டும். சுவீடன் நாட்டைச் சேர்ந்த Elise Lindqvist என்பவரின் வாழ்வுப் பயணமும், ஏறத்தாழ இதே பாணியில்தான் அமைந்துள்ளது. எண்பது வயது நிரம்பிய இவர், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகர்த் தெருக்களில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பல பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் அன்னை தெரேசாவாக உருவெடுத்திருக்கிறார். அப்பெண்களிடம், “இந்த தெருக்களுக்கு அப்பால் ஒரு வாழ்வு இருக்கின்றது” என்பதை நினைவுபடுத்தி, உண்மையான ஓர் அன்னையாக விளங்கி வருகிறார். இதில் ஒரு சிறப்பு என்னவெனில், எலிசே அவர்களே, குழந்தைப் பருவம் முதல், பாலியல் வன்கொடுமைக்குப் பலியானவர். இரணங்களும், வலிகளும், வேதனைகளுமே இவரது வாழ்வாக இருந்தன. அதனாலே, இந்தப் பெண்களின் நிலைமை பற்றி நன்கு அறிந்திருந்தார். Elise அவர்கள், சுவீடன் நாட்டில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளில், “விபசாரர்களின் அன்னை தெரேசா" எனவும், ஸ்டாக்கோம் நகரின் சாலைகளில் ஒன்றான, “Malmskillnadsgatan விபசாரர்களின் வானதூதர்" எனவும் அழைக்கப்படுகிறார்.

Elise Lindqvist அவர்கள், அண்மையில் உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்டு, திருத்தந்தையைச் சந்தித்து, அவரின் ஆசீரைப் பெற்றுச் சென்றார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வர்த்தகம் ஒழிக்கப்பட எடுத்துவரும் முயற்சிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.  திருத்தந்தையும், “நான் உங்கள் பணி பற்றி அறிந்திருக்கிறேன், சிறப்பான பணியாற்றுகிறீர்கள்” என்று சொல்லி, எலிசே அவர்களை ஊக்கப்படுத்தினார். Elise Lindqvist அவர்கள், குழந்தைப் பருவத்திலிருந்தே மிகத் துயரமான வாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்திருந்தாலும், எண்பது வயதிலும், இவரது கண்களில் ஒளிரும், ஒருவித அமைதியையும், மகிழ்வையும் காணும் எவரும் வியப்படையாமல் இருக்கமாட்டார்கள். Elise அவர்களைச் சந்தித்த, வத்திக்கான் வானொலி செய்தியாளர் ஒருவர், அவர் வாழ்வு பற்றிக் கேட்டுள்ளார். கேட்டதுதான் தாமதம், Elise Lindqvist அவர்கள், தான் கடந்துவந்த பாதையை, இவ்வாறு திரும்பிப் பார்த்தார்.

துன்பம்நிறை குழந்தைப் பருவம்

எனது வாழ்வு, மன்னிப்புப் பண்பால் புதிய பிறவி எடுத்துள்ளது. நான், சுவீடன் நாட்டில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தேன். எனது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களால், ஐந்து வயது முதற்கொண்டு, பாலியல் முறையில் துன்புறுத்தப்பட்டேன். துன்புறுத்தியவர்கள் விடுத்த மிரட்டலால், எல்லாச் சிறாரும் இந்நிலைக்கு உள்ளாவார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அவர்கள் வீட்டுக்கு என்னை உணவருந்த அழைக்கும்போதெல்லாம், இதற்குத்தான் என்று அறிந்திருந்தேன். அச்சத்தினால் எனது வீட்டிற்கு ஓடிவருவேன். அப்போது அவர்கள், இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக எச்சரித்தனர். இதனால் வயதுவந்தவர்களை என்னால் நம்ப முடியவில்லை. எனது தாயும் அந்த வழியில் செல்பவர் என்பதால், எனது நிலை பற்றி அவர் அக்கறைப்படவே இல்லை. பள்ளியிலும் எனக்கு இதே கதிதான். ஆசிரியர் மற்ற மாணவர்களை விளையாட அனுப்பிவிட்டு, என்னை மட்டும் அவரோடு தனியே ஓர் அறையில் வைத்துக்கொள்வார். நான் அழகாக இல்லை, முட்டாளாக இருக்கிறேன் என்று எல்லாருமே என்னை ஏளனமாகப் பேசுவார்கள். எனது தந்தை மட்டுமே அவ்வப்போது என்னிடம் பாசம் காட்டினார். அந்தப் பாசத்தை உணராமல் இருந்திருந்தால், நான் உயிரோடு வாழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு பத்து வயது நடந்தபோது தந்தை இறந்தார். அதன்பின் வாழ்வு இன்னும் கடினமானது. எனது தாயின் புதிய துணைவர், ஒரு குடிகாரர். அவரும் என்னை அடிக்கடி தாக்குவார். ஒரு நாள்,  அவர் என் மீது துப்பாக்கியைக் காட்டினார். என்னைச் சுட்டுவிடுங்கள், எனக்கு உயிர்வாழ விருப்பமில்லை எனக் கெஞ்சினேன். அவரும் சுட்டார். ஆனால், அதில் குண்டுகளை வைக்க அவர் மறந்ததால், நான் உயிர் பிழைத்தேன். நான் வாழ வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார் என, அப்பொழுது நினைத்தேன். ஆனால் அச்சமயத்தில் எனக்கு ஆண்டவர் பற்றி அறியாதிருந்தேன். இவ்வாறு பகிர்ந்துகொண்ட எலிசே அவர்கள் தொடர்ந்து பேசினார்.

நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்

அப்பொழுது எனக்கு வயது பதினான்கு. நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். எனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு குடும்பம் என்னை வரவேற்றது. எனக்கு இரவு உடைகளைத் தந்தபோது, மீண்டும் அதே குழிக்குள் விழப்போகிறேன் என்று அச்சமுற்றேன். ஆனால் அந்தக் குடும்பத் தலைவி, என்னிடம் கனிவோடு நடந்துகொண்டார். ஆனால் அதற்கு அடுத்து நடந்தது, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நடப்பதுதான். அந்தப் பெண் விபசார விடுதி நடத்துபவர். அவர், என்னைப் பற்றி அறிந்துகொண்டு, ‘நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்’ என்று சொன்னார். நான் அழகாய் இருக்கிறேன் என்பதை, முதன்முதலில் கேட்டதும் மகிழ்வடைந்தேன். அன்றுமுதல் நான் அந்தப் பெண்ணிடம் முழுவதும் சரணடைந்தேன். அம்மா என்றுதான் அவரை அழைத்தேன். அவர் ஒருநாள் ஆடைகள் வாங்கிவந்து என்னை அழகுபடுத்தினார். நான் அவரது வாடிக்கையாளர்களுக்கு எனது உடலை விற்க வேண்டுமெனச் சொன்னார். அப்போது எனக்கு வயது 16. நானும் அவர் சொன்னதுபோலவே செய்தேன். நான் எத்தனை ஆண்டுகள் இந்தப் படுகுழியில் வீழ்ந்துகிடந்தேன் என்பது சரியாக நினைவில் இல்லை. ஒரு நாள் வாடிக்கையாளர் ஒருவர், என்னைக் கடுமையாக அடித்தார். அதன்பின், அந்த அம்மாவிடம் சென்று, நான் இந்தத் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாது என்று சொல்லிவிட்டேன். அந்நேரத்தில், நான் பேறுபெற்றவள். ஏனெனில் இவ்வாறு தொழில் செய்ய மறுப்பவர்கள் கொல்லப்படுவார்கள். அந்தப் பெண், வீட்டுக் கதவுகளைத் திறந்து, இங்கே உனக்கு இடமில்லை என, கோபத்தில் என்னைப் படிகளில் உருட்டிவிட்டார். எனது காலும் பாதிக்கப்பட்டது. வீடற்றவர் ஆனேன். தெருக்களில் குப்பை மேடுகளில் கிடப்பதைப் பொறுக்கிச் சாப்பிட்டேன். எனக்குத் தெரிந்த, அந்த ஒரே தொழிலைச் செய்தேன். மதுபானங்களுக்கும், போதை மாத்திரைகளுக்கும் அடிமையானேன்.

இயேசுவின் ஒளி

1994ம் ஆண்டில் மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்க்கப்பட்டேன். அங்கு என்னைப் பார்த்த எல்லாரும் அச்சமுற்றனர். யாரும் என்னை நெருங்கினால் எட்டி உதைப்பேன். ஆண்களைப் பார்த்தால், காறித் துப்புவேன். கோபம் ஒன்றே என்னில் இருந்தது. அதேநேரம், அந்த மையத்தில் இருந்த எல்லாரும் என்னைப் பார்த்து புன்னைகத்தார்கள். நான் மனநலம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு தவறாக வந்துவிட்டேனோ,  வித்தியாசமான மனிதர்களாக உள்ளார்களே என்று நினைத்தேன். இந்தப் புன்னகை ஏதோ மாத்திரை சாப்பிடுவதால் வருகிறது என்று நினைத்து, அந்த மருந்தை எனக்கும் கேட்டேன். மாத்திரைகளைத் தருவதற்குப் பதிலாக, அவர்கள் என்னை, அங்கிருந்த சிற்றாலயத்திற்கு அழைத்துச் சென்று எனக்காகச் செபித்தார்கள். எனக்கு கடவுள் பற்றியோ, செபம் பற்றியோ எதுவும் தெரியாது. அதனால் அவர்கள் செய்தது எனக்குப் புரியவில்லை. ஒருநாள், ஒளி மற்றும் அமைதியால் குளிப்பதாக உணர்ந்தேன். இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயேசு மட்டுமே என்னைக் குணப்படுத்த முடியும் என்பதை அவ்வேளையில் உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் புதிய பிறவி எடுத்தேன். இப்போது மக்கள் என்னிடம் வயது கேட்டால் 25 என்று சொல்வேன். ஏனெனில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர்தான்  இயேசு எனக்கு வாழ்வு கொடுத்தார். அப்போதுதான் அவரின் அன்பில் நடை பயிலத் தொடங்கினேன்.

மன்னிப்பு

சில மாதங்கள் சென்று, ஆன்மீக அருள்பணியாளர் ஒருவர் என்னிடம், நீ உன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னிக்க வேண்டும் என்றார். கொடுமைப்படுத்திய அத்தனை பேரையும் எப்படி மன்னிப்பது என்று கொந்தளித்தேன். மன்னிக்கவில்லையெனில் உன்னால் முழுமையாகக் குணமடைய முடியாது என்பதை அவர் உணர்த்தினார். இது எனக்கு மிகவும் நீண்டதொரு வேதனைதரும் முயற்சியாக இருந்தது. எப்போதும் ஆலயத்தில் இருந்து ஒவ்வொரு பெயராகச் சொல்லிச் செபித்தேன். என்னை அன்புகூரவும் காப்பாற்றவும் தவறிய எனது தாயை முதலில் மன்னித்தேன். எனது தாயின் நிலையையும் புரிந்துகொண்டேன். பின்னர், ஒவ்வொருவராக மன்னித்தேன்.

இவ்வாறு சொல்லும் எலிசே அவர்கள்,  தன்னைப்போல் தடம் மாறும் பல பெண்களுக்கு, இன்று தாயாக இருந்து அரவணைத்து ஆதரவளித்து வருகிறார். அப்பெண்கள் இவரை "அன்னை" என்றே அழைக்கின்றனர். 2016ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மனித வர்த்தகத்திற்கு எதிரான ஐரோப்பிய நாளன்று, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்ற இவர் அழைக்கப்பட்டார். மனித வர்த்தக்த்திற்கெதிராய்த் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார், அன்னை எலிசே. பிஞ்சுப் பருவத்திலிருந்தே பலவாறு கொடுமைப்படுத்தியவர்களை, உண்மையிலே மன்னிக்க இயலுமா?. இயலும் என்பதற்கு, சுவீடன் நாட்டு Elise Lindqvist அவர்கள் வாழ்வே ஒரு சான்று. ஆம். சுயமாவதும், சுணக்கமாவதும் ஒவ்வொருவருக்குள்ளேதான் உள்ளன. எனவே, பழையவற்றையே நினைத்து, முடங்கிப்போய், எழுந்து நடக்க சுணக்கம் காட்டாமல், மன்னிப்பு போன்ற நல்ல விழுமியங்களால், புதுப்பிறப்பெடுத்து, புதிய வாழ்வில் புதிய பயணத்தைத் தொடங்குவோம். அதில் இறைவன் கரம்பிடித்து வழிநடத்துகிறார் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வோம்.

வாரம் ஓர் அலசல் – புதிய வாழ்வு, புதிய பயணம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2019, 15:18