தேடுதல்

Vatican News
ஐ.நா. அவையில் நெல்சன் மண்டேலா ஐ.நா. அவையில் நெல்சன் மண்டேலா 

வாரம் ஓர் அலசல் – போராடிப் பெறுவதே வெற்றி

ஜூலை 15, இளையோர் திறமைகள் உலக நாள். இன்று உலகில் 120 கோடிப் பேர், 15க்கும், 24 வயதுக்கும் உட்பட்ட இளையோர். இவர்கள், உலக மக்கள் தொகையில் 16 விழுக்காடாகும்.

மேரி தெரேசா – வத்திக்கான்

“போராட்டம் இல்லையெனில், முன்னேற்றமும் இல்லை” என்று சொன்னார், ஆப்ரிக்க அமெரிக்க சமுதாய சீர்திருத்தவாதி பிரெட்ரிக் டக்லஸ் (Frederick Douglass). விடுதலைக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு, போராட்டத்தில் பின்வாங்குபவர்கள், நிலத்தை உழாமல் அறுவடையை எதிர்பார்க்கின்றவர்கள், இடியும் மின்னலுமின்றி மழையை விரும்புகின்றவர்கள் என்று, தனது கூற்றுக்கு விளக்கமளித்தார், பிரெட்ரிக் டக்லஸ். மனிதர் பிறக்கும்போதே, வாழ்வு முழுவதும் பல்வேறு ஆனந்த மலர்களாக நிறைந்திருக்கும் என்றோ, அல்லது வாழ்வுப் பாதை முழுவதும் முள்கள் நிறைந்திருக்கும் என்றோ இறைவன் வாக்குறுதி தருவதில்லை. ஆனால், எந்த நிலையையும், நறுமண மலர்களாக மாற்றிக்கொள்ளும் மனவலிமையை அவர் அளித்திருக்கிறார். அதற்கு மனிதரது முயற்சியும் பயிற்சியுமே தேவை. போராடிப் பெறுவதே வெற்றி என்பது, உலகில் பல சமுதாய ஆர்வலர்களின் அனுபவம். "வெற்றி வேண்டுமா போட்டுத்தான் பார்க்க வேண்டும், எதிர்நீச்சல். போராட்டம் இன்றி, எதிர்நீச்சல் இன்றி, வெற்றியை எட்டுவது கடினமே. மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா என, பல மாமனிதர்கள், தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், அறப்போர் வழியில் போராடி, வெற்றியும் பெற்றனர். தென்னாப்ரிக்காவில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக (1948-1990) அமலிலிருந்த நிறவெறிக் கோட்பாடு ஒழிக்கப்படுவதற்கு, நெல்சன் மண்டேலா அவர்கள் உட்பட பலர் போராடினர், சிறை சென்றனர். இறுதியில் வெற்றியும் பெற்றனர்.

நெல்சன் மண்டேலா உலக நாள்

ஜூலை 18, வருகிற வியாழன், நெல்சன் மண்டேலா உலக நாள். “விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல. விழும் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை” என்று சொன்னவர் நெல்சன் மண்டேலா. ஆப்ரிக்க கறுப்பு காந்தி என அழைக்கப்படும், இவர், 67 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்காகத் தொண்டாற்றியவர். மனித உரிமை வழக்கறிஞர், மனச்சான்று கைதி, தென்னாப்ரிக்க நிறவெறிக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், தென்னாப்ரிக்காவில் முதல்முறையாக நடந்த சுதந்திர சனநாயகத் தேர்தலில் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அந்நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டவர், உலகளவில் அமைதி நிலவ உழைத்தவர் போன்ற பல பெருமைகளுக்கு உரியவர் மண்டேலா. இவர், அமைதி மற்றும் விடுதலை கலாச்சாரத்திற்கு ஆற்றிய மகத்தான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, ஐ.நா.பொது அவை, 2009ம் ஆண்டு நவம்பரில், நெல்சன் மண்டேலா உலக நாளை உருவாக்கியது. கறுப்பின மக்களின் விடிவெள்ளியான, மண்டேலா அவர்கள் பிறந்த, ஜூலை 18ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும், மண்டேலா உலக நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நிலவுக்குப் பயணம்

மனிதர் முதன்முதலில் நிலவில் கால்தடம் பதித்த பொன் விழா ஜூலை 20, வருகிற சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படுகின்றது. 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி மையம், புளோரிடா மாநிலத்திலிருந்து, Apollo -11 விண்கலத்தில், நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் அல்ட்ரின், மைக்கிள் கொலின்ஸ் (Neil Armstrong, Buzz Aldrin, Michael Collins) ஆகிய மூன்று விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. அதற்கு நான்கு நாள்கள் சென்று, ஜூலை 20ம் தேதி, நியு யார்க் நேரப்படி, இரவு 10.50 மணிக்கு, நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், முதலில் நிலவில் இறங்கினார். இந்திய 'இஸ்ரோ' விண்வெளி ஆய்வு நிறுவனமும், சந்திராயன் – 2 விண்கலத்தை, ஜூலை 15, இத்திங்கள் இந்திய நேரம் அதிகாலை, 2:51 மணிக்கு, விண்ணில் ஏவ இருந்தது. ஆயினும், சிறு தொழில்நுட்ப பிரச்சனையால் இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. எனினும், இது பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியாது என, அறிவியலாளர் நம்பி நாராயணன் அவர்கள் தெரிவித்துள்ளார். சந்திராயன் 2 விண்கலம், உலகில் முதல் முறையாக, நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம். “போராட்டம் இல்லையெனில், முன்னேற்றமும் இல்லை”. எந்த சாதனைகளையும் கடினமாகப் போராடியே பெற வேண்டியிருக்கின்றது. அதில் பின்னடைவுக்கு இடமே கிடையாது.

திருச்சி கே.ஜெனிட்டா

சதுரங்க விளையாட்டில் முடிசூடா அரசியாக விளங்கும், திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த, செல்வி கே.ஜெனிட்டா ஆன்டோ அவர்கள், மாற்றுத்திறனாளிகள் உலக சதுரங்க விளையாட்டுப் போட்டியில், ஆறாவது முறையாக தங்கம் வென்று, தாய் நாட்டிற்குப் பெருமை சேர்த்துத் தந்திருக்கிறார். சுலோவாக்கியா நாட்டின், Ružomberok நகரில், கடந்த ஜூன் 27ம் தேதி முதல், ஜூலை 06ம் தேதி வரை நடைபெற்ற, 19வது உலக மாற்றுத்திறனாளிகள் தனிநபர் சதுரங்கப் போட்டியில், 13 நாடுகளைச் சேர்ந்த 44 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக ஜெனிட்டா அவர்கள் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். ஒன்பது முறை தங்கம் வென்ற இரஷ்ய வீராங்கனையை தோற்கடித்து, தங்கம் வென்றுள்ளார் ஜெனிட்டா. ``மாற்றுத்திறனாளி என்று என்னை ஒருபொழுதும் நினைத்ததில்லை என்று சொல்லும் ஜெனிட்டா அவர்கள், இந்நிலையிலும் பி.காம். படிப்பை முடித்திருப்பவர்.

திருப்பூர் மாரியம்மாள்

உயரிய இலட்சியவாதிகள் ஒருபோதும் தோற்பதில்லை. சாதிக்க நினைப்பவர்கள், வாழ்வுப் பிரச்சனைகளோடும், சமுதாய அநீதிகளோடும் போராட்டம் நடத்த அஞ்சுவதில்லை. திருப்பூரைச் சேர்ந்த படிப்பறிவில்லா மாரியம்மாள் என்ற தாய், தனியாளாக முயற்சிசெய்து, தாய்லாந்திலிருந்து தன் மகன்களை மீட்டுள்ளார். கணவரைப் பிரிந்து மூன்று மகன்களுடன் வாழும் அவர், பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். வெளிநாட்டுக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் இரஞ்சித் என்பவர், மாரியம்மாள் அவர்களின் இரண்டு மகன்களையும், தாய்லாந்து நாட்டில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் நாற்பதாயிரம் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய மாரியம்மாள் அவர்கள், இரஞ்சித் அவர்களிடம் 2,70,000 ரூபாய் பணம் கட்டியுள்ளார். கடந்த சனவரி 21ம் தேதியன்று, அவரின் மகன்கள் இருவரும் தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு இருவரும் ஓர் உணவகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறிது நாள்கள் கொத்தடிமைபோல் வேலை வாங்கிவிட்டு, அங்குள்ள தமிழர் ஒருவரின் உணவகத்தில், இருவரும் வேலைக்குச் சேர்த்துவிடப்பட்டுள்ளனர். இவர்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட உணவக உரிமையாளர், அவர்களுக்கு முடிந்தவரை அடைக்கலம் தருவதாகவும், அதற்குள் இந்தியாவில் யாரிடமாவது உதவி கேட்டுச் சென்றுவிடுமாறும் கூறியுள்ளார். இந்தத் தகவல் மாரியம்மாள் அவர்களுக்குத் தெரியவர, அவர் இரஞ்சித்தை சந்தித்து இது குறித்து கேட்டபோது, அவர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். காவல் நிலையத்தில் புகாரளித்தும் பயனில்லை. பின்னர், பலரைத் தொடர்புகொண்டு, இறுதியில், தனது ஒரு மகனுக்கு இந்தியாவிலிருந்து விமானப்பயணத்திற்குப் பணம் அனுப்பி கடந்த ஜூன் 13ம் தேதியன்று இந்தியா வரவழைத்துள்ளார். இன்னொரு மகனையும், தூதரக அதிகாரிகள் 15 நாள்கள் சிறையில் அடைத்து வைத்துள்ளதை அறிந்து, கடும் முயற்சிகள் எடுத்து, தூதரகத்தில் அபராதத் தொகை கட்டி, அவரையும் மீட்டு இந்தியாவிற்கு வரச்செய்துள்ளார் மாரியம்மாள்.

இளையோர் திறமைகள் உலக நாள்

போராட்டம் இன்றி வெற்றி இல்லை. ஜூலை 15, இத்திங்கள், இளையோர் திறமைகள் உலக நாள் (World Youth Skills Day). ஐ.நா. பொது அவை, 2014ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி, இந்த உலக நாளை உருவாக்கி, அது ஜூலை 15ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது. இன்று உலகில் 120 கோடிப் பேர், 15க்கும், 24 வயதுக்கும் உட்பட்ட இளையோர். இவர்கள், உலக மக்கள் தொகையில் 16 விழுக்காடாகும். ஐ.நா. வின் நீடித்த நிலையான வளர்ச்சித்திட்டங்களில் இளையோரின் உயிர்த்துடிப்புள்ள பங்கேற்பின் முக்கியத்துவம், இந்நாளில் அதிகமாக  வலியுறுத்தப்படுகின்றது. உலகில் வேலைவாய்ப்பற்றவர்களில், இளையோர் வயதுவந்தவர்களைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம். எனவே, இளையோர் திறமைகள் உலக நாளில், இளையோர் தங்கள் திறமைகளை ஆக்க வழிகளில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுமாறு, ஐ.நா. நிறுவனம் உலக நாடுகளை வலியுறுத்துகின்றது. இளையோரே, “உங்கள் வாழ்வின் எந்த ஒரு நாளில் நீங்கள் முன்னால் எந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல் முன் செல்கிறீர்களோ, அப்பொழுது தவறான பாதையில் நீங்கள் பயணிக்கின்றீர்கள் என்று அறிவீர்கள்”. “தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்! துணிந்தவர் தோற்றதில்லை! தயங்கியவர் வென்றதில்லை! ” “நாளைய மழை அறியும் எறும்பாய் இருங்கள். நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதீர்கள்!” “தோல்விகள் இல்லாத வாழ்க்கை பயனற்றது. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையற்றது”. இளையோரே, பெரியோரின் இவை போன்ற பொன்மொழிகளை மனதில் வைத்து, துணிச்சலுடன் வாழ்வில் எதிர்நீச்சலடித்து படியேறுங்கள். வெற்றி உங்கள் கரங்களில் தவழ்வது நிச்சயம். நீங்கள், “தடம் பார்த்து நடக்காமல், தடம் பதித்து நடக்கும் மாமனிதர்களாக (பிடல் காஸ்ட்ரோ)” உயர நல்வாழ்த்துக்கள்.

15 July 2019, 15:33