தேடுதல்

ஆப்கானில் அமைதி குறித்த கலந்துரையாடலில் அரசு பிரதிநிதிகள் ஆப்கானில் அமைதி குறித்த கலந்துரையாடலில் அரசு பிரதிநிதிகள் 

ஆப்கானில் அமைதிக்கு முதல்கட்ட ஒப்பந்தம்

மக்களின் மாண்பும், வாழ்வும், சொத்துக்களும் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படவும், குடிமக்கள் பலியாவது முழுவதுமாக நிறுத்தப்படவும், ஆப்கான் அரசு பிரதிநிதிகளும், தலிபான் தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக்கொணரும், அமைதி தீர்வுக்கு வழியமைக்கும், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஆரம்பகட்ட ஒப்பந்தம் ஒன்றிற்கு, அந்நாட்டு அரசு பிரதிநிதிகளும், தலிபான் தலைவர்களும் இசைவு தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனி மற்றும் கத்தார் நாடுகளின் ஏற்பாடுகளின்பேரில், கத்தார் நாட்டின் தோகாவில், ஜூலை 7 இஞ்ஞாயிறு, 8 இத்திங்கள் ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற கூட்டத்தின் பயனாக, இத்திங்கள் இரவில், அமைதித் தீர்வுக்கு இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், கபூல் அரசு பிரதிநிதிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள், பெண்ணுரிமை ஆர்வலர்கள் என, 50 பேரும், தலிபான் தலைவர்கள் 17 பேரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் இறுதியில், ஆப்கான் அரசு பிரதிநிதிகளும், தலிபான் தலைவர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், மக்களின் மாண்பும், வாழ்வும், சொத்துக்களும் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படவும், குடிமக்கள் பலியாவது முழுவதுமாக நிறுத்தப்படவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படக் கூடாது, பள்ளிகள் போன்ற பொதுவான நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இஸ்லாம் மரபுப்படி பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் போன்ற விவகாரங்களுக்கு, இதில் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோரும், நாட்டுக்குள்ளே இடம்பெயர்ந்தோரும் பாதுகாப்பாக மீள்குடியேறுவது உட்பட, இந்த அமைதி ஒப்பந்தம், கண்காணிக்கப்படவும், கடைப்பிடிக்கப்படவும் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அதிருப்தி

தலிபான் தலைவர்களுக்கு, ஆப்கானில், வெளிநாட்டு இராணுவத்தின் இருப்பு மீது நிலவும் வெறுப்பு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசால் நியமிக்கப்பட்ட, ஆப்கான் அரசுத்தலைவர் Ashraf Ghani அவர்களின் அரசை, பொம்மை அரசாகக் கருதி, அவரின் நிர்வாகத்தின் மீது இருந்த அதிருப்தி போன்றவை, இதற்கு முந்தைய, இத்தகைய கலந்துரையாடல் கூட்டம் தோல்வியடைந்ததற்குக் காரணம் என்று செய்திகள் கூறுகின்றன. தோகாவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2019, 14:57