தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டில் புகலிடம் தேடுவோர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் புகலிடம் தேடுவோர் 

புலம் பெயர்ந்தோர் நடுவே, வாழ்வை ஆதரிக்கும் பெண்கள்

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் உருவாகியுள்ளச் சூழலை, ஓர் அரசியல் பிரச்சனையாக மட்டும் காணாமல், அதை மனிதாபிமானத்துடன் அணுகுவதே, வாழ்வை ஆதரிக்கும் பெண்கள் கொண்டுள்ள கண்ணோட்டம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வை ஆதரிக்கும் பெண்கள் என்ற கருத்துடன் செயலாற்றும் பெண்களின் குழுக்கள் இணைந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு எல்லையில் டெக்சாஸ் மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேற்று நாட்டவருக்கு, உணவும், தண்ணீரும் வழங்கினர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

New Wave Feminists மற்றும், And Then There Were None (ATTWN) என்ற இரு அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் இணைந்து, "எல்லையில் இருப்போருக்கு பாட்டில்கள்" என்ற பொருள்படும் #BottlestotheBorder கருத்துப் பரப்பு முயற்சியை மேற்கொண்டதன் விளைவாக, 1,20,000 டாலர்கள் மதிப்புள்ள உணவு, மற்றும் பானங்களை திரட்டினர்.

டெக்சாஸ் மாநிலத்தில் தற்போது நிலவும் மிகக் கடுமையான வெப்பத்தினாலும், அப்பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் மிகக் குறைந்த வசதிகளே உள்ளன என்பதாலும், பல்லாயிரம் குழந்தைகள், மற்றும் பெண்கள் உட்பட புலம் பெயர்ந்தோர் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருப்பதை ஊடகங்கள் கூறி வருகின்றன.

மிக உயர் நிலையை அடைந்துள்ள வெப்பத்தில், பொருள்களைத் திரட்டுதல், அவற்றை வாகனங்களில் ஏற்றிச் செல்லுதல், எல்லையில் உள்ள முகாம்களில் அவற்றை விநியோகம் செய்தல் என்ற அனைத்தும், மிகச் சவாலான முயற்சிகள் என்றாலும், அவற்றைப் பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் அடையும் மகிழ்வு நிறைவைத் தருகிறது என்று New Wave Feminists என்ற அமைப்பைச் சேர்ந்த Abby Johnson என்பவர் கூறினார்.

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் உருவாகியுள்ளச் சூழலை, ஓர் அரசியல் பிரச்சனையாக மட்டும் காணாமல், அதை மனிதாபிமானத்துடன் அணுகுவதே, வாழ்வை ஆதரிக்கும் பெண்கள் கொண்டுள்ள கண்ணோட்டம் என்று Abby Johnson அவர்கள் மேலும் கூறினார். (CNA)

17 July 2019, 15:03