தேடுதல்

உலகில் பசி உலகில் பசி 

உலகளவில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகளவில் ஏறத்தாழ 200 கோடிப் பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 26.4 விழுக்காட்டினர், உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உலகளவில் பசி, உணவு பாதுகாப்பின்மை மற்றும் சத்துணவு பற்றாக்குறைவால், 82 கோடியே பத்து இலட்சத்துக்கு அதிகமான மக்கள் துன்புறுகின்றனர் என்று, ஜூலை 15, இத்திங்களன்று ஐ.நா. நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கை கூறியது.

உலகில், உணவு பாதுகாப்பின்மை மற்றும் சத்துணவு என்ற தலைப்பில், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, குழந்தை நல நிதி அமைப்பு, உலக நலவாழ்வு அமைப்பு, உலகலாவிய வேளாண் வளர்ச்சி நிதி அமைப்பு, உலக உணவு திட்ட அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில்,  உலகளவில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் இந்நிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்று கூறும் அவ்வறிக்கை, 2017ம் ஆண்டில் 81 கோடியே 17 இலட்சமாக இருந்த இவ்வெண்ணிக்கை, 2018ம் ஆண்டில் சற்று அதிகரித்து, அது 82 கோடியே 16 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசிய, .நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குனர் Jose Graziano da Silva அவர்கள், உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை, பல ஆண்டுகளாகக் குறைந்துவந்தவேளை, 2015ம் ஆண்டில் அவ்வெண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

உலகில் பரவலாக நிலவிவரும் சத்துணவு பற்றாக்குறைவால், ஆப்ரிக்காவில் ஏறத்தாழ இருபது விழுக்காட்டினரும், ஆசியாவில் 12  விழுக்காட்டிற்கு அதிகமானோரும், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் ஏழு விழுக்காட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பசி தொடர்புடைய விவகாரங்களால், ஏறத்தாழ 14 கோடியே 90 இலட்சம் சிறாரின் வளர்ச்சி தாமதமாகியுள்ளது என்றும், அவ்வறிக்கை கூறியுள்ளது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2019, 15:21