தேடுதல்

Vatican News
இயற்கை வழி விவசாயம் இயற்கை வழி விவசாயம்  (AFP or licensors)

பூமியில் புதுமை : தொழில் நுட்பத்துடன் இயற்கை வேளாண்மை

உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும், ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால்தான் இந்த உலகம் இயங்குகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை”

உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும், ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம்தான், உலகில் வாழ்பவை அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.

இன்று உலகில் பல்வேறு மக்கள் பல முறைகளில் வேளாண்மை செய்கின்றனர், அவற்றில், பண்பட்ட மக்கள், மண்ணைப் புண்படுத்தாத இயற்கை வேளாண்மை செய்கின்றனர்.

இயற்கை வேளாண்மை என்பது இயற்கையின் இதயத்தை காயப்படுத்தாமல் செய்வது, இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது, இயற்கையினுள் செயற்கையை புகுத்தாமல் இயற்கையை இதமாக அதன் போக்கில் விடுவது, மற்றும், வேதிப்பொருள்களைப் புகுத்தி, இயற்கையை இரணப்படுத்தாமல் இருப்பது. இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வதுதான், இயற்கை வேளாண்மை.

ஜப்பான் நாட்டை சேர்ந்த, இயற்கை வேளாண்மையின் தந்தை மசானபு ஃபுகோகா அவர்கள், இயற்கையின் பின்னணியில், செடிகள் வளர்ப்பில், பல ஆய்வுகள் செய்து, தமது “ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலின் வழியாக, இவ்வுலகிற்கு, இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமை பற்றி எடுத்தியம்பியுள்ளார்.

புவியிலிருந்து வரும் அனைத்தும் புவிக்கே திரும்பிவிட வேண்டும், நெற்கதிர்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும் எனக் கூறும் இவர்,  மண்வளம் பேணுதல், பயிர் வளர்ச்சிக்குரிய உரம், களைகளின் வளர்ச்சி, மற்றும்,  பூச்சிக்கட்டுப்பாடு பற்றி தன் நூலில் விரிவாகக் குறிப்பிடுகின்றார்.

05 July 2019, 15:37