தேடுதல்

Vatican News
'அன்னதானா' வேளாண் சூழலியல் பண்ணை சங்கீதா சர்மா 'அன்னதானா' வேளாண் சூழலியல் பண்ணை சங்கீதா சர்மா 

பூமியில் புதுமை: மரபுவழி விதைகளின் தூதர்

குறுநில விவசாயிகள் நலனைக் காக்க வேண்டும், மரபுவழி விவசாயம் தழைத்தோங்க வேண்டும் என்பதே சங்கீதா சர்மாவின் நோக்கம். மாடித்தோட்டம் அமைத்தல், மரபுவழி விவசாய முறைகளைச் சொல்லிக் கொடுத்தல் என, பல வழிகளில் பயிற்சிகளையும் கொடுத்தும் வருகிறார் சங்கீதா

மேரி தெரேசா - வத்திக்கான்

கர்நாடக மாநில விவசாயிகள் மத்தியில், ‘கர்நாடகாவின் தங்கம்’ என அழைக்கப்படுபவர் சங்கீதா சர்மா. இராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவரது தந்தை பர்மநந்த் சர்மா அவர்கள், பெங்களூரின் புறநகரில் முப்பது ஏக்கர் நிலத்தை வாங்கி, அதை முழுமையாக ஆக்கிரமித்திருந்த பாறைகள், புதர்கள் மற்றும் பாம்புகளை அகற்றினார். இப்போது அந்த நிலம், பசுஞ்சோலையாக மாற்றப்பட்டிருக்கிறது. பல பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துவந்த சங்கீதா, விவசாயத்தின்மீது இருந்த ஆர்வத்தால், அப்பதவிகளைக் கைவிட்டு, விவசாயத்தில் ஈடுபட்டார். தனது மாநில விவசாயிகளின் துன்பங்களை, கள ஆய்வு செய்த சங்கீதா அவர்கள், விலை உயர்ந்த கலப்பின விதைகளுக்காகவும் வேதிய உரங்களுக்காகவும் விவசாயிகள் காத்துக் கொண்டிருப்பதும், மரபுவழி விவசாய முறைகளைக் கைவிட்டதும்தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார். இதுதான் இவருக்குள் மரபுவழி விவசாயத்தைப் பற்றிய சிந்தனை முளைத்திருக்கிறது. அதற்கு தீர்வளிக்க அவர் ஆரம்பித்ததுதான், 'அன்னதானா' வேளாண் சூழலியல் பண்ணை. கலப்படம் இல்லாத விதைகளைத் தவிர்த்து மரபுவழி விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ‘அன்னதானா'வை அவர் நிறுவினார். இந்த பண்ணையை, தனது தந்தையின் நிலத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் உருவாக்கினார். இங்கு, ஒரு செடியிலிருந்து 24 கிலோ விளைச்சல் கிடைக்கும், கத்திரி முதல் தக்காளி, மிளகாய், பல வண்ண மக்காச்சோளம், சூரியகாந்தி, மாதுளை, மர ஆப்பிள், கோதுமை, தினை போன்ற 800க்கும் மேற்பட்ட விதைகள் இருக்கின்றன. இவை கடந்த 18 ஆண்டுகளாக, இவரின் விதை வங்கியில் சேமிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, அன்னதானா சூழலியல் பண்ணை சார்பாக பத்து இலட்சத்திற்கும் அதிகமான மரபுவழி விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த பண்ணை வழியாக, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பல பயிற்சியாளர்களைக்கொண்டு இருபதாயிரம் விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களுக்கு, மரபுவழி விவசாயத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மரபணு மாற்ற உணவு குறித்த 'பாதுகாப்பான உணவு எனது உரிமை' என்ற பிரச்சாரத்தையும் தொடங்கி, இன்றுவரை தொடர்ந்து அதில் இயங்கிக் கொண்டிருக்கிறார் சங்கீதா சர்மா (துரை.நாகராஜன், விகடன்)

18 July 2019, 13:57