தேடுதல்

Vatican News
கிணறுகளைத் தூர்வாரும் இளையோர் கிணறுகளைத் தூர்வாரும் இளையோர்  

பூமியில் புதுமை – தமிழர் வாழ்வோடு கலந்திருக்கும் கிணறுகள்

தஞ்சை மாவட்டத்தில், 'கஜா' புயல் தாக்கியபோது, வல்லுண்டாம்பட்டு கிராமத்தில், இளையோரால் துார்வாரி பராமரிக்கப்பட்ட கிணறுதான், பல கிராம மக்களின் தாகத்தைத் தீர்த்தது

மேரி தெரேசா – வத்திக்கான்

கிணறுகள், தொன்மை காலம் முதல், தமிழர்களின் வாழ்வோடு ஒன்றாகிக் கலந்து விட்டவை. கூவல், அசும்பு, கூபம், குழி, பூவல், கேணி, துரவு உள்ளிட்ட பல பெயர்கள் கிணற்றுக்கு இருந்ததை, திவாகர நிகண்டு சொல்கிறது. மணற்பகுதி கிணறுகளை, சீவக சிந்தாமணி, கடின, பாறைக் கிணறுகளை, நற்றிணை, பசுவிற்கான கிணறுகளை அகநானுாறு, காட்டுக் கிணறுகளை, சிலப்பதிகாரம் என, இலக்கியங்கள், பலவகை கிணறுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. இவை, இலக்கியங்களில் மட்டுமன்றி, கல்வெட்டுகளிலும், விரிவாகவே குறிக்கப்பட்டுள்ளன. எதை அழித்தாலும், கிணறுகளை அழிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை, அப்போதைய தமிழர்களுக்கு இருந்தது. இக்காலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளும், கான்கிரீட் பகுதிகளும் பெருகிவிட்ட சென்னை போன்ற மாநகரங்களில், பல கிணறுகள் வற்றிக் கிடக்கின்றன. அதனால், மக்கள் தண்ணீர்த் தேவைக்குப் பெரிதும் நம்பியிருப்பது, ஆழ்துளைக் கிணறுகளைத்தான். 100 அடிக்கு மேல் தோண்டும்போது பாறைகள் தென்படுவதால், அதற்கு அடியிலுள்ள நீர், உப்புநீராகத்தான் இருக்க முடியும். காரணம், 20 அடி, 25 அடி ஆழத்தில்தான் நல்ல தண்ணீர் கிடைக்கும், அதனால்தான் கிணற்றுத் தண்ணீர் நல்ல நீராக உள்ளது என்று சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சேகர் ராகவன். நிலத்துக்குச் செல்லும் நீர், நிலத்தின் மேற்பகுதியிலேயே இருப்பதால், சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் சேர்ந்தவுடன், கிணற்றில் தானாகத் தண்ணீர் ஊற ஆரம்பித்துவிடும். மழை நீர் சேகரிப்பை முறையாகப் பயன்படுத்தினால் நிலத்தில் நீரைச் சேமித்து வைத்து, எப்போதும் நல்ல தண்ணீரைப் பெற முடியும் என்றும் ராகவன் சொல்கிறார். இதற்கிடையே, தமிழகத்தில், பல கிராம இளையோர் வறண்டு கிடக்கும் கிணறுகளைத் தூர்வாரி, தண்ணீர் பஞ்சம் நீங்க உதவி வருகின்றனர். பெரம்பலுார் மாவட்டம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த இளையோர், 'புதிய பயணம்' என்ற அமைப்பைத் துவங்கி, பொதுமக்கள் உதவியுடன், ஐந்து கிராமங்களில், தலா ஒன்று என, ஆறு கிணறுகளைத் துார்வாரி சீரமைத்துள்ளனர். கிராம மக்களும், துார்வாரப்பட்ட கிணற்று நீரால் பயனடைந்து வருகின்றனர்.

15 July 2019, 15:29