மூலிகை தாய்க்கு 'வைத்ய பூஷன் விருது மூலிகை தாய்க்கு 'வைத்ய பூஷன் விருது  

பூமியில் புதுமை: மூலிகை தாய்க்கு 'வைத்ய பூஷன் விருது

ஆயுர்வேத மூலிகைகள் ஒவ்வொன்றும், மனம், உடல், மற்றும் ஆத்மாவிற்குப் பல்வேறு பயன்களைக் கொடுக்கின்றன

மேரி தெரேசா - வத்திக்கான்

'மூலிகை தாய்' என்றழைக்கப்படும் சாமியாத்தாள் அவர்களுக்கு, ஜெர்மனியின் பன்னாட்டு அமைதி பல்கலைக்கழகம், 'வைத்ய பூஷன் விருது' வழங்கி கவுரவித்துள்ளது. 66 வயது நிரம்பிய, கைம்பெண்ணான சாமியாத்தாள் அவர்கள், ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர். சாவடிபாளையம் கிராமத்தில் தனியாக வாழ்ந்து வரும் இவர், கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக, மூலிகைச் செடிகளைச் சேகரித்து சித்த மருத்துவர்களுக்கு வழங்குவதை வாழ்க்கையாக அமைத்துள்ளார். ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ள சாமியாத்தாள் அவர்கள், மூலிகைச் செடிகளைத் தேடி, அவற்றைச் சேகரித்து வருவதையும், அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதையும் பாராட்டி, 2002ம் ஆண்டில், அப்போதைய அரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள், 'மூலிகைத் தாய்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார். சாமியாத்தாள் அவர்கள், இயற்கை மருத்துவம் சார்ந்த மாநாடு, கால்நடை மருத்துவ முகாம் மற்றும், கட்சி விழாக்களில், குடில்கள் அமைத்து, மூலிகைச் செடிகளை வழங்கி வருவதுடன், பல நோய்களுக்கும் தீர்வுகண்டு வருகிறார். புதுச்சேரி அரசு உட்பட, பல்வேறு தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், சாமியாத்தாள் அவர்களைக் கவுரவித்து சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கியுள்ளன. மலைதாங்கி, முதியோர் கூந்தல், கள்ளுமுள்ளியான், செருப்படை, ஈஸ்வரமூலி, தவசிமுருங்கை, கோபுரம் தாங்கி, மூங்கிரட்டை, விராலி, தழுதாலை, வேலிப்பருத்தி, நீலாஆவாரை, முடக்கத்தான் இலை, நொச்சி தழை, ஆடுதிண்ணாபாலை உள்ளிட்ட பல மூலிகைச் செடிகளை, பல்வேறு இடங்களில் தேடிக் கண்டுபிடித்துள்ளார், சாமியாத்தாள். இவருக்கு, பழனி சித்த மருத்துவ சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், ஜெர்மன் பன்னாட்டு அமைதி பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் சித்த மருத்துவர்கள், 'வைத்ய பூஷன் விருது' வழங்கி கவுரவித்துள்ளனர். (தினமலர்)

பழமையான ஆயுர்வேத அறிவியலில், மூலிகைகள் ஆன்மீகச் சாரமுள்ளவையாக, தாவரங்களின் குண்டலினியாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும், துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்சி ஆகிய 15 மூலிகைகள் இருப்பது நல்லது என்று சொல்கிறார், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2019, 14:33