நைரோபி தேசிய பூங்கா நைரோபி தேசிய பூங்கா 

பூமியில் புதுமை : பூமியைக் காப்பாற்றுவதற்காக மதங்கள்

“நம் பொதுவான இல்லமாகிய பூமியைக் காப்பாற்றுவதற்காக மதங்கள்: நாம் ஒன்று சேர்ந்து அன்னை பூமியைக் காப்பாற்றுவோம் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்க முயற்சிப்போம்” – ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு

மேரி தெரேசா - வத்திக்கான்

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபி, ஆப்ரிக்காவில் வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்று. இந்நகருக்கு தெற்கே, ஏறத்தாழ ஏழு கிலோ மீட்டர் தூரத்தில், தேசிய பூங்கா அமைந்துள்ளது. 1946ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவில், அந்த மண்ணுக்கே உரிய பல்வேறு மலர்ச்செடிகளும், விலங்கினங்களும் உள்ளன. குறிப்பாக, இது, காண்டாமிருகங்களின் சரணாலயமாக உள்ளது. இப்பூங்கா,  சுற்றுச்சூழலில், கார்பன் வெளியேற்றத்தில் பத்து விழுக்காட்டைக் குறைக்க உதவுகிறது. ஆயினும், நைரோபி நகரின் நவீன வளர்ச்சியைக் குறித்து நிற்கும் கட்டடங்கள், இந்தப் பூங்கா வழியே அமைக்கப்படும் இரயில் பாதை போன்றவை, அங்கு வாழ்கின்ற பல்வேறு உயிரினங்கள் மற்றும் செடிகளின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களோடு சேர்த்து கொண்டுவரப்பட்ட ஒருவகை புல், மண்வளத்தைப் பாதித்திருப்பதுடன், விலங்குகளின் செரிமானத்தையும் பாதித்துள்ளது. எனவே, கென்யாவின் Reinhard Bonke என்பவர், இந்தப் பூங்காவைப் பாதுகாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர், தனது இந்தப் பணி பற்றி விளக்குகையில், நான் ஒரு கிறிஸ்தவன், மனிதர்களாகிய நாம் இந்தப் பூமியில் வாழ்ந்து, அதைப் பாதுகாப்பதற்காக படைக்கப்பட்டுள்ளோம் என விவிலியம் சொல்கிறது, எனது கிறிஸ்தவ நம்பிக்கையே இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்தியுள்ளது என்று சொல்லியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையிலுள்ள கத்தோலிக்கத் திருஅவையும், இந்தப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று உலகில் எல்லா மதங்களுமே, இப்பூமியையும், அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற விழிப்புணர்வில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் வழிகாட்டுதலில், அனைத்து ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, கடந்த மே மாதம் 31ம் தேதி, நைரோபியில் கூடி, “நீ எவ்வாறு நடத்தப்பட விரும்புகிறாயோ அவ்வாறே இயற்கையை நடத்து” என்ற பொருளில், பசுமை விதிமுறை ஒன்றை உருவாக்கியது.

காற்று இல்லாமல் வாழ்வு இல்லை. உலகில், காற்று மாசுபாட்டால், ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ எழுபது இலட்சம் பேர் உயிர்துறக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2019, 15:11