தேடுதல்

Vatican News
மவுனா கியா எரிமலையில் தொலைநோக்கி கருவி மூலம் பார்க்கும் மக்கள் மவுனா கியா எரிமலையில் தொலைநோக்கி கருவி மூலம் பார்க்கும் மக்கள் 

பூமியில் புதுமை – புனித நிலத்தை காக்கப் போராடும் பழங்குடி மக்கள்

மவுனா கியா எரிமலை, ஹவாய் தீவில் மிகப் புனிதமான இடங்களில் ஒன்று. பழங்காலத்தில், நன்மதிப்புடன் விளங்கிய தங்கள் மூதாதையரில் பலர், இந்த வறண்ட மலையில் புதைக்கப்பட்டுள்ளனர் என்பது ஹவாய் மக்களின் நம்பிக்கை

மேரி தெரேசா – வத்திக்கான் 

வட பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, ஹவாய் தீவில், ஐந்து முக்கிய எரிமலைகள் உள்ளன. அவற்றில் மிக உயரமானது மவுனா கியா (Mauna Kea-4,207.3 மீட்டர்). பெருங்கடல் அடித்தளத்திலிருந்து அளந்தால், இம்மலையே உலகில் மிக உயரமான மலையாகும். ஏறத்தாழ பத்து இலட்சம் ஆண்டுகள் பழமைகொண்ட இந்த எரிமலை, ஏறத்தாழ ஆறாயிரம் முதல், நான்காயிரம் ஆண்டுகளுக்குமுன் கடைசியாக வெடித்துள்ளது. தற்போது அந்த எரிமலை உறங்கிக்கொண்டிருக்கின்றது என்று கருதப்படுகிறது. ஹவாய் புராணக்கதைகளின்படி, ஹவாய்த் தீவுகளின் மலைச் சிகரங்கள், புனிதமானவை. அம்மக்களின் சட்டப்படி, அவர்களில் உயர்பதவியில் இருந்தவர்கள் மட்டுமே மலைச்சிகரங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். மேலும், சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்பட்ட மூதாதையர் பலர் அங்குப் புதைக்கப்பட்டுள்ளதால், அம்மலை தங்களுக்கு மிகவும் புனிதமானது என்றும் சொல்கின்றனர். பழங்காலத்தில் மவுனா கியா மலையின் சரிவான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள், தங்களின் வாழ்வாதாரங்களுக்கு, அதன் அடர்ந்த காடுகளையே நம்பியிருந்தனர். மேலும், எரிமலை வெடிப்பால் உருவான கடினப் பாறைகளைக்கொண்டு பயன்பாட்டுக் கருவிகளைத் தயார் செய்தனர். 18ம் நூற்றாண்டின் இறுதியில் அத்தீவில் குடியேறிய ஐரோப்பியர்கள், ஆடுமாடுகளையும், ஏனைய விலங்குகளையும் அறிமுகப்படுத்தினர். இவற்றில் பல, காட்டு விலங்குகளாக இருந்ததால், அவை, அந்த எரிமலையின் சுற்றுச்சூழலுக்குச் சேதம் விளைவிக்கத் தொடங்கின. மேலும், அம்மலைப் பகுதியில் குடியேறிய வெளிநாட்டவர் அமைத்த கரும்புத் தொழிற்சாலைகளால், காடுகளின் பெரும்பகுதியும் அழிக்கப்பட்டுவிட்டன. மவுனா கியா மலையின் உயரம், வறண்ட சூழல், வீசும் காற்று போன்ற காரணங்களால்,  உலகில் வானியல் அறிவியல் ஆய்வுக்கு மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாக, அது கருதப்படுகின்றது. அம்மலைக்குச் செல்வதற்கு சாலை வசதிகள் அமைக்கப்பட்ட 1964ம் ஆண்டிலிருந்து, 11 நாடுகள், 13 தொலைநோக்கிக் கருவிகளை அந்த மலையின் உச்சியில் பொருத்தியுள்ளன. தற்போது, அந்த மலையில், 140 கோடி டாலர் செலவில், முப்பது மீட்டர் நீள தொலைநோக்கி கருவி அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. “இது எங்களின் புனித நிலம், உங்கள் அறிவியல் இங்கே வேண்டாம், இவ்வாறான திட்டங்களைச் செயல்படுத்துவது சூழலியல் சீர்கேடுக்கு வழிவகுக்கும்” என்று சொல்லி, ஹவாய் பழங்குடி இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஜூலை 21, இஞ்ஞாயிறன்று 2000த்திற்கு அதிகமான மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர் என செய்திகள் கூறுகின்றன.

22 July 2019, 15:04