மடகாஸ்கரில் உயிரினப் பாதுகாப்பு மடகாஸ்கரில் உயிரினப் பாதுகாப்பு 

பூமியில் புதுமை: மடகாஸ்கர் இளையோரின் வேளாண் புரட்சி

எங்கள் கிராமத்திலிருந்து ஒரு மருத்துவரைப் பார்க்கச் செல்வதற்கு பலமணி நேரம் எடுக்கும். எனவே, காடுகளில் வளரும் மூலிகைச் செடிகளையே மக்கள் நம்பி வாழ்கின்றனர் – மடகாஸ்கர் இளையோர்

மேரி தெரேசா-வத்திக்கான்

ஏறத்தாழ 454 கோடி ஆண்டுகள் வயது நிரம்பிய இந்தப் பூமியின் பரப்பளவில், வெப்பமண்டல காடுகளின் சூழலியல் அமைப்புகள், பத்து விழுக்காட்டுக்கும் குறைவே. ஆயினும், உலகின், ஏறத்தாழ 90 விழுக்காடு உயிரினங்களின் பல்வேறு வகைகள், இந்தக் காடுகளில்தான் உள்ளன. தற்போது தீவிரமடைந்துவரும் சூழலியல் மாற்றங்களால், இப்பூமியின் 500 கோடிக்கு அதிகமான, பல்வகை தாவர மற்றும் விலங்கினங்களில் 99.9 விழுக்காடு அழியும் ஆபத்தில் உள்ளது என்று ஓர் ஆய்வு கூறுகின்றது. ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள மடகாஸ்கர், 250க்கும் அதிகமான சிறிய தீவுகளை உள்ளடக்கிய உலகின் ஐந்தாவது பெரிய தீவாகும். இத்தீவு, ஏறத்தாழ 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்ரிக்க கண்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இப்பூமியிலுள்ள ஊர்வனவற்றில் ஏறத்தாழ 95 விழுக்காடு, பாலூட்டிகளில் 92 விழுக்காடு, மற்றும், தாவர வகைகளில் 89 விழுக்காடு ஆகியவற்றை, இத்தீவைத் தவிர, வேறெங்கும் காண முடியாது. வளமான மழைக் காடுகளையும், வறண்ட வெப்பமண்டல காடுகளையும், சமவெளிகளையும், பாலைநிலங்களையும் கொண்ட ஒரு நாடு, மடகாஸ்கர். இந்நாட்டில், மக்களின் முக்கிய வாழ்வாதாரம் வேளாண்மை. எனவே, மக்கள் உணவு உற்பத்திக்காக, காடுகளை நம்பி வாழ்வதால், அத்தீவின் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. 2017ம் ஆண்டில் மட்டும், ஐந்து இலட்சம் ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டன. மேலும், மடகாஸ்கர் தீவில் மட்டுமே காணப்படும் நீண்ட மூக்கையுடைய, இரவில் மட்டுமே நடமாடக்கூடிய நூறு வகையான அரியவகை குரங்கினங்கள் மறைந்து விட்டன. மேலும்,  உலகில், காடுகள் அழிவிலும் முன்னணியில் உள்ளது எனவும் சொல்லப்படுகின்றது. எனவே, இந்நாட்டு இளையோர் சிலர், “மடகாஸ்கர் சூழலியல் பாதுகாப்பு” என்ற அமைப்பை உருவாக்கி, காடுகள் அழிக்கப்படுவதைத் தடைசெய்து, வேளாண் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த அமைப்பின் Voahirana Randriamamonjy அவர்கள், இம்முயற்சி பற்றி இவ்வாறு சொல்கிறார். நாம் உண்ணும் உண‌வில் எண்பது விழுக்காடு, பல்வகை தாவ‌ர‌ங்க‌ளையும், வில‌ங்குக‌ளையும் சார்ந்துள்ளது. நோய்களின் தாக்க‌த்தில் இருந்து ந‌ம்மைக் காக்கும் ம‌ருந்துக‌ளில் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌து, இந்த‌ உயிரின‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌டும் பொருள்க‌ள்தான். எங்கள் கிராமத்திலிருந்து ஒரு மருத்துவரைப் பார்க்கச் செல்வதற்கு பல மணி நேரம் எடுக்கும். எனவே காடுகளில் வளரும் மூலிகைச் செடிகளையே மக்கள் நம்பியுள்ளனர். காடுகள் இல்லையென்றால், நாங்கள் குடிப்பதற்கு சுத்தமான நீர் கிடைக்காது, மண்ணும் சத்தின்றி வறண்டு விடும். இளையோரின் வருங்காலம், இந்தக் காடுகளையே நம்பி இருக்கின்றது. எனவே நாங்கள், காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்குமாறு மடகாஸ்கரின் புதிய அரசுக்கு விண்ணப்பித்துள்ளோம். அத்துடன், மக்களுக்கு, விதைகளையும் கருவிகளையும் விநியோகித்து, நவீன தொழில்நுட்பத்தில், வேளாண்மை செய்வதை ஊக்குவித்து வருகின்றோம். இதனால் காடுகள் அழிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு வருகின்றது. பன்னாட்டு வல்லுனர்களும், மடகாஸ்கரின் சூழலியல் அமைப்பு பாதுகாக்கப்படுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2019, 15:27