தேடுதல்

Vatican News
இந்தியாவின் பசுமை புரட்சி இந்தியாவின் பசுமை புரட்சி 

பூமியில் புதுமை: நிலைத்த நீடித்த இயற்கையோடு இணைந்த விவசாயம்

சுற்றுச்சூழல் மாசுப்பட்டதன் விளைவாக, இன்று தாய்ப்பாலில்கூட நஞ்சு என்ற நிலைமை உருவாகி விட்டது, இனியும் நாம் தாமதித்தோமென்றால் தரணி தரை மட்டமாகிவிடும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

“பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்

பரித்தவித்தே உயிர் துடிதுடித்துத்

துஞ்சி மடிகின்றாரே – இவர்

துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே”

என்று வேதனையுற்றார் பாரதி. மக்களின் வேதனையை, அவர்களுக்கு வந்த சோதனையை நீக்க ஒரே வழி, செலவு குறைந்த, வரவு நிறைந்த இயற்கை விவசாயத் தொழில்நுட்பமேயாகும். பசுமை புரட்சியின் தந்தை டாக்‌டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள்கூட ‘நிலைத்த நீடித்த இயற்கையோடு இணைந்த விவசாயம்தான் இனி சரிப்பட்டு வரும்’ என்று வலியுறுத்தினார். இயற்கை விவசாயத்தின் மகிமை பற்றி மக்களிடம் விளக்க, இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வார், வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் போன்றோர் பெரும் முயற்சி மேற்கொண்டனர். அவர்களின் வழிகாட்டுதல் வழியாக, இன்று நம் நாட்டில் பல விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர், மறுமலர்ச்சியை உருவாக்கி வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுப்பட்டதன் விளைவாக, இன்று தாய்ப்பாலில்கூட நஞ்சு என்ற நிலைமை உருவாகிவிட்டது, இனியும் நாம் தாமதித்தோமென்றால் தரணி தரை மட்டமாகிவிடும். இயற்கை வேளாண்மை வெற்றி அடையுமா என்ற கேள்விக்கு விடையாக “world watch” நிறுவனம், 2006ம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வுகளே ஆதாரமாகும். அதில் உலக உழவர்கள் அனைவரும் இன்றே இயற்கை விவசாயத்திற்கு மாறினால் வளர்ந்த நாடுகளில் விளைச்சல் இப்போது இருப்பதைவிட 80% அதிகரித்திருக்கும். வளரும் நாடுகளில் 2 முதல் 4 மடங்கும் இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. உலகில், வளரும் நாடுகளில்தான் மக்கள்தொகை அதிகம், எனவே அந்நாடுகளில் வேளாண்மை வெற்றியடைந்தால் உலகம் வெற்றியடையும். எனவே, இயற்கை வளம் பேணும், மண் வளம் காக்கும், தரமான சத்துக்கள் கொண்ட காய்கறிகளை விளைவித்துத் தரும் இயற்கை வழி விவசாயத்தை இனிதே வரவேற்போம்.

17 July 2019, 14:21