பழமை மிகுந்த அர்ஜூனா மரத்திற்கு முன் நிற்கும் அரசுத்தலைவர் அப்துல் கலாம் பழமை மிகுந்த அர்ஜூனா மரத்திற்கு முன் நிற்கும் அரசுத்தலைவர் அப்துல் கலாம் 

பூமியில் புதுமை – அப்துல் கலாமும், அர்ஜூனாவும்

"பிறருக்கு வழங்குவதே, அர்ஜுனாவின் வாழ்வாக மாறிவிட்டது. மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே வாழ்பவர்கள், வணக்கத்துக்குரியவர்கள்" - அப்துல் கலாம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஏவுகணை மனிதர், அணுசக்தி அறிஞர், இராக்கெட் மேதை, இளையோரின் கலங்கரை விளக்கம், மக்களின் அரசுத்தலைவர் என்ற பல அடைமொழிகளுக்கு உரியவர், மறைந்த மாபெரும் மனிதர், அப்துல் கலாம் அவர்கள். அவரது மறைவின் 4ம் ஆண்டு நினைவு, ஜூலை 27, கடந்த சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டபோது, அவரைப்பற்றிய பல கட்டுரைகளும், செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. அவற்றில் ஒன்று, "முனைவர் கலாமும், அவரது பழைய நண்பர் அர்ஜுனாவும்" என்ற தலைப்புடன், 'இந்தியா டுடே' என்ற இதழில் வெளியான ஒரு கட்டுரை. அப்துல் கலாம் அவர்கள், இயற்கை மீது காட்டிய அக்கறை, இக்கட்டுரையில் பதிவாகியிருந்தது.

அப்துல் கலாம் அவர்கள், அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகியபின், புது டில்லியில், 10, இராஜாஜி மார்க் என்ற முகவரியில் அமைந்திருந்த இல்லத்தில், தன் இறுதி ஆண்டுகளைச் செலவழித்தார். அந்த இல்லத்திற்கு வருபவர்களையெல்லாம், தன் நண்பர் அர்ஜுனாவுக்கு, அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த இல்லத்தின் தோட்டத்தில், பல ஆண்டுகளாக, உயர்ந்து நிற்கும் ஒரு மரத்தின் பெயர்தான், 'அர்ஜுனா'. "என் நண்பர் அர்ஜுனா, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறார். அவர், காந்தி, நேரு போன்ற பெரும் தலைவர்களைப் பார்த்தவர். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, அர்ஜுனா ஓர் இளையவராக இங்கு நின்றுகொண்டிருந்தார்" என்று, கலாம் அவர்கள், தன் நண்பரை அறிமுகம் செய்துவைப்பாராம்.

ஒருமுறை, 'அர்ஜுனா'வைப்பற்றிப் பேசியபோது, "பிறருக்கு வழங்குவதே, அர்ஜுனாவின் வாழ்வாக மாறிவிட்டது. மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே வாழ்பவர்கள், வணக்கத்துக்குரியவர்கள்" என்று, அப்துல் கலாம் அவர்கள், உணர்வுபொங்க பேசினார் என்று கூறப்படுகிறது. அவர் தங்கியிருந்த வீட்டில், பறவைகளுக்கு உணவு கொடுத்தபின்னரே, அவர் உண்டார் என்பதை அறியும்போது, கலாம் அவர்கள், இயற்கையோடு கொண்டிருந்த ஈடுபாட்டைப் புரிந்துகொள்ளலாம்.

மாமேதை அப்துல் கலாம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளன்று, சென்னைக்கருகே இளையோரால், 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தென்னிந்திய நடிகர் ஒருவர், இவ்வாறு பேசினார்: ''இந்தியாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ‘சூப்பர் ஸ்டாரா’க விளங்கும் அப்துல் கலாம் ஐயா அவருடைய நினைவு நாளில், பறவைகளுக்காக 1,000 மரக்கன்றுகள் நடுவது மகிழ்ச்சியாக உள்ளது. அரிவாளும், பட்டாக்கத்தியும் எடுத்து திரிபவர்கள் எல்லாம் மாணவர்கள் கிடையாது. கடும் வெயிலிலும், சுற்றுச்சூழலைக் காப்பதற்காக, மரக்கன்றுகளை நடுவதற்கு, கடப்பாரை பிடிக்கும் நீங்கள் தான், உண்மையான மாணவர்கள். நீங்கள் தான், நாட்டின் எதிர்காலம்.'' – (இந்தியா டுடே, இந்து தமிழ் திசை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2019, 14:20