போபால் வான் விகார் தேசிய பூங்கா போபால் வான் விகார் தேசிய பூங்கா 

பூமியில் புதுமை: அழிவின் விளிம்பில் 27 ஆயிரம் வன விலங்கினங்கள்

2014ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்திய அளவில் 4,850 வன விலங்கினங்களும், 2,119 தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகில் மனித இனம் வாழ்வதற்கு இயற்கையும், இயற்கையைச் சார்ந்த வன விலங்களும் மிக இன்றியமையாதவை. ஆனால், வன விலங்குகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் நாள்தோறும் அழிவைச் சந்தித்து வருகின்றன.

உலக அளவில் ஏறத்தாழ 27,150 வன விலங்குகள் அழிவின் விளிம்பிலும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருப்பதாக அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் 40 விழுக்காடும், பாலூட்டிகள் 25 விழுக்காடும், தாவரங்கள் 34 விழுக்காடும், பறவைகள் 14 விழுக்காடும், சுறா உள்ளிட்ட மீன் இனங்கள் 31 விழுக்காடும், பவளப் பாறைகள் 33 விழுக்காடும் அழிவின் விளிம்பில் உள்ளன. இது தற்போதுவரை கண்டறியப்பட்டுள்ள மொத்த வன விலங்கினங்களின் எண்ணிக்கையில் 27 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கையின் உணவுச் சங்கிலியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும், பாறு கழுகு என்று அழைக்கப்படும் பிணந்தின்னி கழுகு வகைகள், உலக அளவில் 99 விழுக்காடு அழிந்து விட்டனவாம்.

உலகின் 12வது மிகப் பெரிய, பல்லுயிர் பெருக்க நாடான இந்தியாவில் 8 விழுக்காட்டு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

2014ம் ஆண்டு அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய அளவில் 4,850 வன விலங்குகளும், 2,119 தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அளவில் புலி, சிறுத்தை, நரி, தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு ஆகியவையும் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. வனங்கள் அழிப்பு, மருந்துகளுக்காக அதிக அளவில் வன விலங்குகள் கொல்லப்படுவது போன்றவற்றால், வன விலங்குகள் அழிந்து வருகின்றன.(தினமணி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2019, 13:18