தேடுதல்

Vatican News
இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம் இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம் 

பூமியில் புதுமை – கழிவும், குப்பையும் அற்ற வழிபாட்டுத் தலங்கள்

ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும், சுற்றுச்சூழல் நலனைப் பேணுவதில், ‘மற்றத் தலங்களைவிட எங்கள் தலமே சிறந்தது’ என்ற பெருமையை எட்ட முயலவேண்டும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஞெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துதல், கவனமின்றி, அவற்றைத் தூக்கியெறிதல் ஆகியவற்றால் உருவாகும் ஆபத்துக்களை நினைவுறுத்தும்வண்ணம், 'இந்து தமிழ் திசை' இணைய இதழில், ‘துணிப்பை பிரசாரகர்’ என்ற புனைப்பெயருடன், தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வரும், கிருஷ்ணன் அவர்கள், அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையில், பல்வேறு மத வழிபாட்டுத்தலங்கள், சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டான தலங்களாக விளங்கவேண்டும் என்ற பரிந்துரையை வலியுறுத்தியுள்ளார். திருவாளர் கிருஷ்ணன் அவர்கள் வழங்கியுள்ள கருத்துக்களைத் தழுவி எழுந்த எண்ணங்கள் இதோ:

வானில் பறக்கும் பறவை முதல், கடலில் வாழும் ஆமைவரை, அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கக்கூடிய, ஆற்றலும், கடமையும் படைத்தவர்கள், மனிதர்கள் என்பதை, நம் மத நூல்கள் சொல்கின்றன. அனைத்து மதங்களும், உயிர்களிடத்து அன்பைச் செலுத்த சொல்கின்றன. இந்தப் புவியை மனிதகுலத்திடம் கடவுள் ஒப்படைத்தார் என்கின்றன. ஆனால், நாமோ, புவியைக் காக்கத் தவறியதோடு, ஒரு இலட்சம் உயிரின வகைகளை, அணு அணுவாகக் கொன்றுவருகிறோம்; பூமியின் இயற்கைச் சமநிலையை நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறோம். பாலுக்காக மாட்டை நம்பியிருக்கும் நாம், தெருவில் தூக்கியெறியும் ஞெகிழிக் குப்பை அதன் வயிற்றுக்குள் செல்வதைப்பற்றி இன்னமும்கூடக் கவலைப்படாமல்தான் இருக்கிறோம்.

மனிதர்கள், சுற்றுச்சூழல் மீது, கட்டவிழ்த்துவிட்டுள்ள அழிவு வெறியை, எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது? பூமியின் வளங்களைச் சுரண்டுதல், காடுகளை அழித்தல், பூர்வகுடிகளை வேரறுத்தல், சுற்றுச்சூழலை சிதைத்தல் என்ற கொடுமைகளை, எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது?

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அத்தியாவசியம் குறித்து, மதத்தலைவர்கள், மக்களிடையே வலியுறுத்தவேண்டிய நெருக்கடியானச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வழிபாட்டுத் தலங்கள் உயிரினங்களைப் போற்றும் பல்லுயிர் மையங்களாக உருமாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும், எந்தக் கழிவையும், குப்பையையும் உருவாக்காத (Zero Waste) தலமாக மாறவேண்டிய நாட்களைக் கடந்துகொண்டிருக்கிறோம்.

மதத்தலைவர்கள் மட்டும் அல்ல, வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பவர்கள் முதல், வழிபடச் செல்லும் பக்தர்கள்வரை, அனைவரும், இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும், சுற்றுச்சூழல் நலனைப் பேணுவதில், ‘மற்றத் தலங்களைவிட எங்கள் தலமே சிறந்தது’ என்ற பெருமையை எட்ட முயலவேண்டும். (இந்து தமிழ் திசை)

23 July 2019, 14:58