தேடுதல்

காடுகள் காடுகள் 

வாரம் ஓர் அலசல் – பாலைநிலங்களை சோலைகளாக்குவோம்

சுற்றுச்சூழல் ஆர்வலரான அப்துல் கரீம் அவர்கள் வளர்த்துள்ள வனத்தில், இப்போது, 800க்கும் அதிகமான தாவர வகைகளும், 300 வகையான மருத்துவ குணம்கொண்ட செடிகளும், ஆயிரக்கணக்கான மரங்களும் உள்ளன

மேரி தெரேசா - வத்திக்கான்

மரங்கள் நிறைந்து சோலைவனமாகக் காட்சியளித்த பல பகுதிகள், இப்போது, போதிய மழையின்றி, மரங்களின்றி பாலைநிலமாக மாறி வருகின்றன. அதோடு, கோடையின் வெப்பமும் அதிகரித்துள்ளது. சென்னையிலுள்ள ஓர்‌ உணவகம், 'தண்ணீர் இல்லாததால் உணவு தயாரிக்கமுடியாத நிலை ஏற்படலாம். வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்ற அறிவிப்பை வைக்க வேண்டிய நிலையில், இப்போது தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தி, வாட்சப்பில் இப்படியொரு பகிர்வு இருந்தது. அந்த காக்கா தன் தாகத்தைத் தீர்க்க, கல், மண் போன்றவற்றை உள்ளே போட்டது. உடனே நீர் மேலே வந்தது. காகமும் தாகத்தைத் தீர்த்துக்கொண்டது. ஆனால், ஓர் அரசு, தன் பண தாகத்தைத் தீர்க்க, கல், மண் போன்றவற்றை வெளியே எடுத்து விற்றது. பணம்மேல் பணம் வந்தது. ஆனால், நீர் கீழே சென்றது. மக்கள் மடிந்தனர். தற்போதைய கடும் தண்ணீர் பிரச்சனைக்கு ஒருவரையொருவர் குறைகூறிவரும்வேளை, பொது மக்கள், குறிப்பாக, இளையோர் மத்தியில் மரங்களை வளர்த்து மழையைப் பெற வேண்டும், வறண்டுபோன நிலங்களை, பசுமையாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வீடுகளில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில், விருந்தினர்களுக்கு, மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. திருப்பூர் போன்ற நகரங்களில் இடம்பெறும் அதிவேக தொழில் வளர்ச்சியின் காரணமாக, தொலைந்துபோன ஆறுகளையும், குளங்களையும் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில், இளையோர் மற்றும் சில தன்னார்வலர் அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.

மரங்களின் வியர்வை

மழை வேண்டுமா, நமக்குத் தேவை காடுகள். மரத்தின் இலைகளிலுள்ள நுண்ணிய துளைகள் மூலம்தான், மரம் தனக்குத் தேவையான வாயுக்களை கிரகித்துச் சுழற்சி முறைகளில் வெளியேற்றுகின்றது. இலைகளிலுள்ள துளைகள், மரம் சுவாசிக்க மட்டும் உதவுவதில்லை. அதோடு, மரங்களின் வியர்வையை, அதாவது நீர்ச்சத்தை வெளியேற்றவும் உதவுகின்றன. அப்படி வெளியேறும் நீர்ச்சத்து, வளிமண்டலத்தில் கலந்து ஈரப்பதத்தை அதிகப்படுத்துகின்றது. அந்த ஈரப்பதத்தை உறிஞ்சும் மேகங்கள்தான் மீண்டும் மழையாகப் பெய்கின்றது. ஒரு மரம், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 300 லிட்டர் வரை, நீர்ச்சத்தை வியர்வையாக வெளியேற்றுகிறது. அப்படியானால் பல ஆயிரம் மரங்கள் சிந்தும் வியர்வைகள், குளிர்ந்த காற்றாகத்தான் இருக்கும். மரங்கள் எப்போதுமே தனக்குத் தேவையான நீரைவிட, பல மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக்கொள்ளும். அந்த உபரி நீர் அனைத்தும் வெளியாகி, ஈரப்பதமாகக் காற்றில் கலந்துவிடுகிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு மரம் பத்தாயிரம் லிட்டர் நீரை உறிஞ்சினால், அதில் அதற்குத் தேவையான நீர், ஆயிரம் முதல் இரண்டாயிரம் லிட்டர் மட்டும்தான். அதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள எட்டாயிரம் லிட்டரை, காற்றுக்குக் கொடையாக அளித்துவிடும். அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கிறது. எனவே, நமக்கு மழை வேண்டுமென்றால், மரங்களை நட வேண்டும், காடுகளை வளர்க்க வேண்டும். மரங்களை நட்டால் மட்டும் போதாது. அவற்றைப் பராமரிக்கவும் வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர் அப்துல் கரீம்

கேரளாவின் Kasargod மாவட்டத்தில், கோட்டபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் (Abdul Kareem) என்பவர், தனியொரு ஆளாக, 32 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் மரங்களை நட்டு, அந்தப் பகுதியையே வனமாக மாற்றியுள்ளார். புளியங்குளம் கிராமத்திலுள்ள அவரது மனைவியின் சமாதியை அடிக்கடி பார்க்கச் சென்றவேளையில், அதற்கருகிலுள்ள குன்றுப்பகுதி தரிசு நிலமாக இருந்ததைக் கண்டார். ஆதலால், 1977ம் ஆண்டில் 3,750 ரூபாய் செலவில், ஐந்து ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த நிலத்திலிருந்த ஒரேயொரு கிணறும் ஆண்டு முழுவதும் ஏறத்தாழ வறண்டே இருக்குமாம். இதனால் இவரின் முயற்சியை, குடும்பத்தினரும், அந்தப் பகுதி மக்களும் எள்ளி நகையாடியுள்ளனர். ஆயினும் மனம் தளராமல், அந்த நிலத்தில் மரக்கன்றுகளை நட்டு, வேறோர் இடத்திலிருந்து, தனது இரண்டு சக்கர வாகனத்தில், தண்ணீர் எடுத்துவந்து ஊற்றி வளர்த்தார். இப்படியாக மூன்று ஆண்டுகள் தொடர்ந்தன. அதற்குப்பின், அவரது முயற்சிக்கு இயற்கையும் கைகொடுத்தது. மரங்கள் வளரத் தொடங்கின. பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடுகட்டி வாழ ஆரம்பித்தன. அவை கொண்டுவந்து போட்ட பல்வேறு வகையான விதைகள் முளைக்கத் தொடங்கின. அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பே புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியது. இதனால் உந்தப்பட்டு, கரீம் அவர்கள், அப்பகுதியில் மேலும் 27 ஏக்கர் நிலத்தை வாங்கி, மரங்களை நடத் தொடங்கினார். அதேநேரம், மரங்களின் இயல்பான வளர்ச்சிக்கு தடங்கலாக, இவர் எதையுமே செய்யவில்லை. அவையனைத்தும் தானாக வளருவதற்கு இவர் உதவினார். இப்போது அந்த வனம், அதன் சுற்றுப்புறத்திற்கு வியப்புக்குரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ஒரு காலத்தில் வறண்டு கிடந்த கிணறு, தற்போது சுத்தமான மற்றும், நிறையத் தண்ணீரைத் தந்துகொண்டிருக்கின்றது. அப்பகுதியில் ஏறத்தாழ பத்து கிலோ மீட்டருக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்தக் காட்டிலுள்ள வெப்ப அளவு, வெளிப்புறத்தைவிட குளிர்ச்சியாக உள்ளது. கரீம் அவர்களும், 1986ம் ஆண்டிலிருந்து, அந்தக் காட்டிற்குள்ளே வாழ்ந்து வருகிறார். கரீம் அவர்கள் விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, பார்வையாளர்கள் அங்குச் செல்கின்றனர். ஒரு சிறுதுளி வேதியப் பொருள் கலவை இல்லாத வகையில் வளர்க்கப்பட்ட மரங்கள் அடர்ந்த அந்த வனத்திற்குள் நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்டை வர்த்தகமயமாக்க பல்வேறு முறைகளில் அழுத்தங்கள் வந்தபோதிலும், அவற்றை தனியொரு ஆளாக எதிர்த்து நின்று வருகிறார் கரீம். சஹாரா பரிவார் விருது, லிம்கா புத்தகத்தின் ஆண்டின் மனிதர் உட்பட பல பெருமைகளையும் பெற்றுள்ளார், அப்துல் கரீம்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான அப்துல் கரீம் அவர்கள் வளர்த்துள்ள வனத்தில், இப்போது, 800க்கும் அதிகமான தாவர வகைகளும், 300 வகையான மருத்துவ குணம்கொண்ட செடிகளும், ஆயிரக்கணக்கான மரங்களும் உள்ளன. உலகின் பல பகுதிகளிலிருந்து, ஆராய்ச்சி மாணவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இவரது வனத்தைப் பார்வையிட வருகின்றனர். இந்தியப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இவரது வனமும் இடம்பெற்றுள்ளது. தனியொருவரின் விடா முயற்சியும், சுற்றுச்சூழல்மீது அவர் கொண்ட ஆர்வமும்,  சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதி மக்களின் நல்வாழ்வுக்கும் உதவியுள்ளன. இப்பூமியில் உயிரினங்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளவும், காடுகள் மிகவும் முக்கியம். ஏனெனில் இவை, ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 200 கோடி டன் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகின்றன. ஆனால் காடுகள், வேளாண்மைக்கும், கால்நடைகள் வளர்ப்புக்கும் என, பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதால், ஏறத்தாழ பத்து இலட்சம் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜூன் 17, இத்திங்கள், நிலங்கள் பாலைநிலங்களாகவும், தரிசாகவும் மாறிவருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக நாள். “வருங்காலத்தை ஒன்றிணைந்து வளர்ப்போம்” என்ற தலைப்பில், இந்த உலக நாள், இத்திங்களன்று, துருக்கி நாட்டின் அங்காராவில் சிறப்பிக்கப்பட்டது. நிலங்கள் தரிசுநிலமாவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்நிலைக்கு எதிராய்ச் செயல்படுவதற்கென உலக நாள் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவும் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில், உலகளவில், நிலங்கள் தரிசு நிலமாவது ஐம்பது விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது, ஆயினும், அடுத்த 25 ஆண்டுகளில் நிலங்களை வளமையாய் வைத்திருப்பதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதைச் சிந்திப்பதற்கும், ஐ.நா. நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. மனிதரின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றங்களினால், நிலங்கள் வறண்டு, பாலைநிலங்களாக மாறி வருகின்றன என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

ஆடை தொழிற்சாலைகள்

ஒரு ஜோடி ஜூன்ஸ் ஆடைகளைத் தயாரிப்பதற்கு, ஏறத்தாழ 7,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. இது, ஒரு மனிதர், ஏழு ஆண்டுகளில் குடிக்கும் தண்ணீருக்குச் சமமாகும். ஒவ்வோர் ஆண்டும் நவீன ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் பயன்படுத்தும் 9,300 கோடி கன மீட்டர் தண்ணீர், ஐம்பது இலட்சம் மக்கள் உயிர்வாழ்வதற்குப் போதுமானது. ஆடைகள் மற்றும் காலணி தொழிற்சாலைகள், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 8 விழுக்காட்டுக்குக் காரணம். ஒவ்வொரு நொடியும், ஒரு லாரி நிறைய துணிகள் நிலத்தில் கொட்டப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. 2000மாம் ஆண்டுக்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆடை உற்பத்தி இரு மடங்காகின. ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பின் (UNCTAD) கூற்றுப்படி, விதவிதமாக நவீன ஆடைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழலை மாசுபாடுத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த தொழிற்சாலைகள், ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ ஐந்து இலட்சம் நுண்ணிய சில்க் நூலிலைகளை, பெருங்கடல்களில் கொட்டுகின்றன. இவை, முப்பது இலட்சம் எண்ணெய் பீப்பாய்களுக்குச் சமமாகும். அனைத்து பன்னாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் வெளியேற்றும் கார்பன்களைவிட இந்த தொழிற்சாலைகள் வெளியேற்றும் கார்பன்கள் அதிகம் என்றும், UNCTAD அமைப்பு கூறியுள்ளது.

மழையின்றி நிலங்கள் தரிசு நிலமாகிவரும் சூழலில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், அணுக்கழிவு மையம், அணுமின் நிலையம் போன்ற திட்டங்கள், நிலங்களை முழுவதும் விளைச்சலுக்குப் பலனின்றி ஆக்கிவிடும். எனவே, நாம் வாழும் பகுதிகளில், மரங்களை நட்டு, காடுகளை வளர்த்து, நிலங்களை வளமாக்கி, அனைவரும் நலமுடன், மகிழ்வுடன் வாழ உதவுவோம். பாலைநிலங்களைச் சோலைகளாக்குவோம். 

வாரம் ஓர் அலசல் – பாலைநிலங்களை சோலைகளாக்குவோம் 170619

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2019, 15:38