தேடுதல்

Vatican News
தென்னாப்ரிக்கா ஆடை தயாரிப்பு தென்னாப்ரிக்கா ஆடை தயாரிப்பு   (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – எதிர்நீச்சலின்றி வெற்றி சாத்தியமா?

எதிர்நீச்சல், வீழ்தல், மீண்டும் எதிர்நீச்சல், மீண்டும் சரிந்து வீழ்தல், மீண்டும் எதிர்நீச்சல்… இறுதி வெற்றிவரை எதிர்நீச்சல். இதுதான் சாதனையாளர்களின் வாழ்வுமுறை

மேரி தெரேசா- வத்திக்கான்

எதிர்நீச்சல், வீழ்தல், மீண்டும் எதிர்நீச்சல், மீண்டும் சரிந்து வீழ்தல், மீண்டும் எதிர்நீச்சல்…  இறுதி வெற்றிவரை எதிர்நீச்சல். இதுதான் வாழ்வில் வெற்றிபெறுகின்றவர்களின் தாரக மந்திரம். என் இலட்சியத்தை எட்டும்வரை, முயற்சி செய்துகொண்டேயிருப்பேன் என்று சொல்பவரே, வாழ்வில் முழுமையான வெற்றியை எட்டுகின்றார். சாதனையாளர்கள் எவருக்கும், முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிட்டுவதில்லை. ஒருவர் தனது முயற்சிகளில், சில தோல்விகளைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டுவிட்டால், வாழ்வு தோல்வியிலேயே முடியும். புகழ்பெற்ற அறிவியலாளர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களிடம், அறிவற்றதன்மைக்கு விளக்கம் கேட்டபோது, "ஒரே வேலையை, திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்குப் பெயர்தான் முட்டாள்தனம்' என்று சொன்னாராம். ஆம். எடுக்கும் முயற்சியில் உடனுக்குடன் பலனை எதிர்பார்ப்பது, உடனே பலன் கிடைக்காவிட்டால், சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்சனையைக் கண்டு, ஓடி ஒளிவது கோழைத்தனம். குழந்தைப் பருவத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட Wilma Glodean Rudolph (ஜூன்23,1940-நவ.12,1994) அவர்கள், 1956ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில், வெண்கலப் பதக்கத்தையும், 1960ம் ஆண்டு உரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் மூன்று தங்கப் பதக்கங்களையும் வென்றவர். ஆப்ரிக்க அமெரிக்கரான இவர், ஐந்து வயதில் போலியோ நோய்க் கிருமியால் தாக்கப்பட்டதால், மாற்றுத்திறனாளியானார். Shelley Isabel Mann (அக்,15,1937 – மார்ச்,24,2005) அவர்கள், ஆறு வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவர், 1956ம் ஆண்டு ஒலிம்பிக்கில், நீச்சல் போட்டியில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர்.

Ford வாகன நிறுவனத்தை நிறுவி, புதிய வாகனங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய கோடீஸ்வரரான ஹென்றி போர்டு அவர்கள், முதல் காரை உருவாக்கும்போது, ரிவர்ஸ் கியரைப் பொருத்த மறந்துவிட்டார். இன்று, உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அவர்களும், ஆப்பிள் நிறுவனத்தின் மூலம், கணனி மற்றும் செல்லிடபேசி துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய, ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களும், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர்கள். இந்திய தேசியகவி சுப்ரமணி பாரதியார் அவர்களும், கவிஞர் கண்ணதாசன் அவர்களும், தங்களின் ஆரம்பகால கவிதைப் போட்டிகளில், முதல் பரிசை வெல்லவில்லை. முன்னாள் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், பள்ளிக்குச் செல்வதற்கு, ஒவ்வொரு நாளும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்குமாம். ஆற்றின் குறுக்கே, பாலம் இல்லாததால், புத்தகத்தையும், கழற்றிய உடையையும், தலைக்குமேல் சுமந்தபடி நீச்சலடித்து, அக்கரையை அடைந்திருக்கிறார். முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள், அதிகாலையில் வீடு வீடாகச் சென்று தினத்தாள்களைப் போட்டு, பள்ளிக்குச் சென்றவர். இவ்வாறு, உலகில், அடி மட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை அடைந்தவர்களைப்  பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.

இந்த சாதனை மனிதர்கள், தோல்வி, அதைத் தொடர்ந்து கிடைத்த அவமானம் போன்றவற்றுக்கு அஞ்சி, முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. இந்திய கணனித் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி அவர்கள், செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, இந்தியாவை கணனித் துறையில் முன்னணிக்குக் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்தில், கணனித் தொழில் துவங்க நினைத்தார். இவரது ஆரம்பகால முயற்சி, தோல்வியைத் தழுவியது. இறுதியில், தொழில் துவங்க கையில் பணமில்லை. அவரது மனைவி, தன் நகையை விற்றுக்கொடுத்த, பத்தாயிரம் ரூபாயை வைத்து, மற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம்தான், இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கணனி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ். (நன்றி தினமலர்)

திருப்பூர் தொழிலதிபர் வைகிங்

ஒரு காலத்தில், ஆறு அணா கட்டணம் கொடுத்து, நகரப் பேருந்தில் பயணிக்க இயலாமல் இருந்தவர், இன்று நானூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் தலைவராக, நான்காயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். நகரப் பேருந்தில் ஏறி வேலைக்குச் சென்றுவர வசதியில்லாமல் இருந்த இவர்தான், வைகிங் ஈஸ்வரன். இவர், திருப்பூர் வைகிங் (Viking Textiles) மற்றும் ஆனந்த் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் தலைவர். இவரது அப்பாவுக்குச் சொந்தமாக, இரண்டு ஏக்கர் வானம்பார்த்த பூமிதான் இருந்துள்ளது. இவரை ஐந்தாவது வரையாவது படிக்க வைக்க இவரது தந்தை விரும்பினார். பள்ளிக்குப் போனால் கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமென்று நினைத்து இவர் படிக்கவில்லை. அதனால், மாடு மேய்ப்பது தொடங்கி, விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்பது வரை, அத்தனை வேலைகளையும், பத்து வயதிலேயே இவர் செய்துள்ளார்.

வைகிங் ஈஸ்வரன் அவர்கள், 12வது வயதில், திருப்பூரில், சிறார் தொழிலாளியாக வேலையில் சேர்ந்தவர். இரவு இரண்டு மணிக்கே எழுந்து, மழை காலமாக இருந்தால், நள்ளிரவிலே எழுந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, காலை நான்கு மணிக்கெல்லாம், ஆடை நிறுவன வாசலிலே அமர்ந்து தூங்கிய அனுபவம் இவருக்கு உள்ளது. இவ்வேலையில் எதிர்கொண்ட அவமானத்தால், இனிமேல் யாரிடமும் கைகட்டி கூலிவேலை பார்க்க முடியாது என்று, குடும்பத்தில் உறுதியாகச் சொல்லியுள்ளார் இவர். அதற்குப் பின்னர், தான் சிறுகச் சிறுகச் சேர்த்த இரண்டாயிரம் ரூபாய், பாட்டியின் நகை மற்றும் மனது நிறைய தன்னம்பிக்கை ஆகியவற்றுடன், முதலில் ஒரு சைக்கிள் கடை, பின்னர், ஒரு மளிகைக் கடை என படிப்படியாக வாழ்வில் உயர்ந்துள்ளார். “நீச்சல் அடிப்பது எப்படி?” என்ற நூலை வாசித்து, அதில் கிடைத்த உத்வேகத்தால், ஆடை தயாரிப்பு  ஆலை கட்டும் முயற்சியில் இவர் இறங்கினார். பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் செய்த வாரக்கூலிவேலையை விட்டுவிட்டு, பனியன் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப் போகிறேன் என, இவர் சொன்னபோது, ஏராளமான பயமுறுத்தல் அறிவுரைகள் கிடைத்துள்ளன. ஆனால், வைகிங் ஈஸ்வரன் அவர்கள், எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், துணிந்து செயலில் இறங்கியதன் விளைவே, இன்று இந்நிலைக்கு இவர் உயர்ந்துள்ளார். இன்று அவரின் வர்த்தகம் பெருகி, வாழ்வும் மலர்ந்துள்ளது.    

வைகிங் ஈஸ்வரன் அவர்கள், தனது வாழ்வு முன்னேற்றம் பற்றி, இந்து தமிழ் திசை இணைய நாளிதழ் வழியாக, இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். ஒரு மில் தொழிலாளியாகவே வாழ்ந்திருக்கவேண்டிய எனக்குள், மில்லுக்கே முதலாளியாக வேண்டுமென்ற பெரிய கனவை விதைத்தது, எனக்கு நேர்ந்த அவமானமே. கூலிக்காரன்தானே நீ, அதிகாரம் செய்கிறாய்? என்று, வேலை கேட்டுப்போன இடத்தில் அந்த முதலாளி என்னைப் பார்த்து கேட்காமல் போயிருந்தால், நானும் சாதாரணமான வாழ்வையே வாழ்ந்திருப்பேன். ஒன்றுமில்லாதவன் என்று, மற்றவர்கள் என்னை அலட்சியப்படுத்தியவேளை, நான் உற்பத்திசெய்த பொருள்களின்தரம்தான் நிலைக்க வைத்தது. என் தோற்றத்தைப் பார்த்து நெற்றி சுளித்தவர்கள், எனது நிறுவனம் தயாரித்த பனியனைப் பார்த்ததும், என்னை உட்காரச் சொல்லி, சாருக்கு ஒரு சாயா என்று புன்முறுவல் பூத்தார்கள். இது தரத்துக்குக் கிடைத்த மரியாதை என்றும், தோற்றத்துக்கு கொடுக்கும் மரியாதை நிரந்தமற்றது என்றும் முழுமையாக நம்பினேன். ஆம். உழைப்பையும் தரத்தையும் நான் எப்போதும் கைவிட்டதில்லை. அதேபோல், அவையும் என்னை ஒருபோதும் கைவிடவில்லை. அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றிக்கு எப்போதுமே ஆயுள் குறைவுதான். பெரிய போராட்டத்துக்குப் பிறகு கிடைக்கின்ற வெற்றியே என்றும் நீடித்து நிலைத்து நிற்கும். இத்தகைய வெற்றி, எளிதாக ஒருவரைவிட்டு அகலாது. (நன்றி இந்து தமிழ் திசை)

வைகிங் ஈஸ்வரன் அவர்களின் வாழ்வு, விவசாயத்தில் தொடங்கி, வறுமையில் கற்றாழை கிழங்கை உண்டு, ஏமாற்றத்தையும் கண்ணீரையுமே அனுபவித்து, பலரின் எதிர்ப்புகள், அவமானங்களைப் பின்னுக்குத் தள்ளி, இன்று, வாழ்வில் உயர்ந்து நிற்கிறது. எனவே, வைகிங் ஈஸ்வரன் அவர்கள் சொல்வது போன்று, வாழ்வில் அவமானம், ஏமாற்றம், தோல்வி போன்றவை வந்தால், அவை நம்முடைய வல்லமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு என்று இறைவனுக்கு நன்றி சொல்வோம். வாழ்வில் முன்னேறுவதற்கு, மூன்றாவது கையாக, தன்னம்பிக்கையைக் கொண்டிருப்போம். ஆர்வமும், ஈடுபாடும், திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் யாரும் சாதனை படைக்கலாம். வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால், எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆக வேண்டும். ஓர் இடத்திற்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

“வாழ்க்கையின் முதல் புள்ளி, எதிர் நீச்சலிலே ஆரம்பமாகும். அடுத்தடுத்த புள்ளிகளைத் தொடும்வேளை, வாழ்க்கை என்பது, நதியோடுபோகும் இலையாக அல்ல‌, இலை மீது போகும் எறும்பாகவே இருக்கும் என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கும். மலை குறுக்கிட்டால் முட்டித்தள்ளுவோம், இடி விழுந்தாலும் அதனைக் கடத்தும் தாங்கியாவோம். அடி கொடுக்க நினைக்கும் வாழ்க்கைக்கு, நம் புன்னகையால் புத்தி சொல்வோம். எதிர்த்துச் சென்றே இலட்சியம் தொடுவோம், எதிர் நீச்சலடித்தே இலட்சியம் அடைவோம் (eluthu.com/kavithai)”.

வாரம் ஓர் அலசல் – எதிர்நீச்சலின்றி வெற்றி சாத்தியமா?
10 June 2019, 16:05