தூத்துக்குடி துறைமுகம் தூத்துக்குடி துறைமுகம் 

வாரம் ஓர் அலசல் - கடல்பணியாளர் உலக நாள் ஜூன் 25

கடல்சார் தொழில்களில், பெண்களின் முக்கியத்துவம் மற்றும், அவர்கள் ஆற்றும் பணிகளின் மதிப்பு பற்றி, 2019ம் ஆண்டு முழுவதும் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று IMO அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, அணுக்கழிவு மையம் போன்ற பேராபத்துகள் நிறைந்த அழிவுத்திட்டங்களையெல்லாம், தமிழ் நாட்டின் மீது திணிப்பதன் வழியாக, இந்தியாவின் குப்பைத்தொட்டியாகத் தமிழ்நாடு பயன்படுத்தப்படுகிறது என்ற குமுறல்கள் ஏறத்தாழ எல்லாருக்குமே எழுகின்றன. ஹைட்ரோகார்பன் கொண்டு செல்வதற்காக, தஞ்சாவூர் அருகே இராட்சத இரும்புக் குழாய்கள் பதிப்பது குறித்து பார்க்க வந்த அதிகாரிகள், “நீங்கள் வயலில் நடவு செய்திருந்தாலும் வேறு வேளாண்மை செய்திருந்தாலும், மரங்கள் இருந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை, எல்லாவற்றையும் அழித்துவிட்டு அறுபது அடி அகலத்துக்கு குழி தோண்டி, குழாய்ப் பதிப்போம்” என கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அதற்கு அதிகாரிகளிடம், `நடவு செய்யப்பட்ட வயலில் செருப்புப் போட்டுகூட நடக்கமாட்டோம். ஆனா, நீங்க இப்படி நெஞ்சை பிளப்பதுபோல், அதுவும் நடவு செய்த வயலைப் பிளக்கிறீர்களே?' என, விவசாயிகள் கண்ணீர் வடித்தனர் என்று ஜூன் 21, கடந்த வெள்ளியன்று செய்திகள் வெளியாயின. இதனை எதிர்த்து, விவசாயப் பாட்டாளி பெருமக்கள் எவ்வளவுதான் போராடினாலும், மக்களால் பதவியிலிருக்கும் அரசுகள் கண்டுகொள்வதாகவே இல்லை என்றே கூறப்படுகின்றது.   

அணு உலைகள்

தமிழகத்தின் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், இரஷ்யாவின் ஒத்துழைப்போடு இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அதே இடத்தில், மேலும் நான்கு அணு உலைகளை அமைக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளதுடன், இரு அணு உலைகளுக்குப் பணிகளையும் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், கூடங்குளம் அணு உலை வளாகத்தில், அணுக்கழிவு மையம் அமைப்பதற்காக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயிரம் மெகாவாட் மின்சக்தி தயாரிக்கும் ஓர் அணு உலையில், ஒவ்வோர் ஆண்டும், சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகின்றன. இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள், அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றை ஏழு வருடங்களுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி, தற்காலிக அணுக்கழிவு மையத்திற்கு (Away From Reactor -AFR) கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள், ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையோடு இருக்கக்கூடியவை. இக்காலக்கட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால், தமிழகமே மிகப்பெரியப் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இந்நிலத்தில் உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்.

அணுக்கழிவுகள்

அணுக்கழிவு மையம் ஒரு விபரீதமான முயற்சி என்று, பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. ஒருவேளை தற்காலிக அணுக்கழிவு அமையம் அமைக்கப்பட்டுவிட்டாலும்கூட, அதோடு சிக்கல் முழுவதுமாகத் தீரப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் அணுக்கழிவுகளைத் தற்காலிக மையத்தில் சேமித்து வைக்க முடியும். அதன்பிறகு, அவற்றை அதிக ஆழத்தில் அமைக்கப்படக்கூடிய நிரந்தர அணுக்கழிவு மையத்திற்குப் (Deep geological repository - DGR) பாதுகாப்பாக நகர்த்த வேண்டும். இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையத்தை எங்கு அமைப்பது என்பதையே இந்திய அணுசக்தித் துறை முடிவு செய்யவில்லை. இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையம் அமைத்திட இந்தியாவில் எந்த மாநிலமும் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. எனவே, மக்களை பரிசோதனைக்கூட எலிகளாகக் கருதி, இவை போன்ற பேரழிவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது, இம்மண்ணில் வாழக்கூடிய ஒவ்வொரு தமிழரின் உயிர்ப் பாதுகாப்புக்கு எதிரானது மட்டுமல்ல சுற்றுப்புற சூழல் பெருந்தீங்கினை ஏற்படுத்துவது ஆகும். கூடங்குளத்தில் திட்டமிடப்பட்டுள்ள, ஆறு அணு உலைகள் இயங்கத் தொடங்கியவுடனேயே, அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை குளிரவைக்க, கடல் நீர் பயன்படுத்தப்படும். பின்னர் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 4,200 கோடி லிட்டர் சுடு தண்ணீர் கடலில் கலக்கும். ஏற்கனவே 29 டிகிரி வெப்பநிலையிலுள்ள கடல் நீர், இதனால் 36 டிகிரி அதிகரிக்கும். பின்னர் கடல்சூழ்நிலை மண்டலம், மனிதரின் வாழ்வு, வாழ்வாதாரங்கள் மற்றும், கடல்வாழ் உயிர்கள் பாதிக்கப்படும். மனிதர், இந்த மண்ணை மட்டுமல்ல, கடலையும் மாசுபடுத்துவதில் வல்லவர்களாகவே உள்ளார்கள். இவ்வேளையில், ஒவ்வோர் ஆண்டும் பெருங்கடல்களில் கொட்டப்படும் அணுக்கதிர்வீச்சுக் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிர்ச்சி தருகின்றன (நன்றி - இந்து தமிழ் திசை, விகடன்).

1946ம் ஆண்டு முதல், 1970ம் ஆண்டு வரை, அமெரிக்க ஐக்கிய நாடு மட்டும், ஒரு இலட்சத்து பத்தாயிரத்துக்கு அதிகமான கொள்கலங்களை (containers), பெருங்கடல்களில் கொட்டியுள்ளது. அணுக்கழிவுகளைக் கடல்களில் கொட்டுவதற்குத் தடை விதிக்கும் உலகளாவிய சட்டம் 1993ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. ஆயினும், கதிர்வீச்சுகளை ஏற்படுத்தும் இலட்சக்கணக்கான லிட்டர் கழிவுகள், ஒவ்வோர் ஆண்டும் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆபத்து நிறைந்த சூழலில், கப்பல்களில் தொடர்ந்து பயணம் செய்பவர்கள், கடல் தொழிலாளர்கள் மற்றும் கடலோர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கப்பல்களிலும், துறைமுகங்களிலும் தொடர்ந்து பணியாற்றுவோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், IMO எனப்படும், உலகளாவிய கடலாண்மை அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 25ம் தேதியன்று,  “கடல்பணியாளர் உலக நாளை” சிறப்பித்து வருகிறது. உலகில் ஏறத்தாழ 90 விழுக்காடு வர்த்தகப் பொருள்கள், கப்பல்கள் வழியாகவே இடம்பெறுகின்றன.

கடல்பணியாளர் உலக நாள்

கப்பல்களில் பணியாற்றுவோர்க்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, உலக அளவில் சட்டம் அவசியம் என பல நாடுகள் கேட்டுக்கொண்டன. அதனால், 1948ம் ஆண்டில் ஜெனீவாவில் நடைபெற்ற உலக மாநாட்டில், IMCO அதாவது அரசுகளுக்கிடையே கடல்மேலாண்மை ஆலோசனை அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர், 1982ம் ஆண்டில், அந்த அமைப்பு, IMO என மாற்றப்பட்டது. இந்த அமைப்பு, கப்பல்களிலிருந்து வெளியேறும் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு, 1973ம் ஆண்டில், மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தது. சமுதாய ஊடகங்கள் வழியாக, கடல்சார்ந்த தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறும், இந்த அமைப்பு ஊக்குவித்து வருகின்றது. 2011ம் ஆண்டிலிருந்து கடல்பணியாளர் உலக நாளை சிறப்பித்து வருகின்ற IMO அமைப்பு, ஜூன் 25, இச்செவ்வாயன்று, ‘பாலின சமத்துவம்’ என்ற தலைப்பில், இந்நாளைச் சிறப்பிக்கின்றது. கடல்சார் தொழில்களில், பெண்களின் முக்கியத்துவம் மற்றும், அவர்கள் ஆற்றும் பணிகளின் மதிப்பு பற்றி, 2019ம் ஆண்டு முழுவதும் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. உலகளவில் கப்பல் தொழிலாளர்களில் ஏறத்தாழ இரண்டு விழுக்காடு, அதாவது ஏறத்தாழ 23 ஆயிரம் பேர், பெண்கள். இப்பெண்கள் பெரும்பாலும், கப்பல்களில் பாதுகாப்பு குறைந்த இடங்களில் (Flags of Convenience FOC) வேலை செய்கின்றனர். இவர்களுக்கு ஊதியமும் குறைவாகவே கொடுக்கப்படுகின்றது. இளவயதினராகவும் இவர்கள் இருப்பதால், பலவேளைகளில், பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று, IMO அமைப்பு கூறியுள்ளது. அன்பு இதயங்களே, பெண்கள் பல்வேறு துறைகளில் பாகுபடுத்தப்படுகின்றனர் என்று சொல்லும்போது, பெண்களின், குறிப்பாக, தாய்மையின் மேன்மையை வெளிப்படுத்தியுள்ள, சுமித்ரா தேவி என்ற ஓர் அன்னை பற்றிச் சொல்லி இந்நிகழ்ச்சியை நிறைவு செய்கிறோம்.

ராஜ்புரா சுமித்ரா தேவி

சுமித்ரா தேவி அவர்கள், ஜார்கண்ட் மாநிலம், ராஜ்புரா மாநகராட்சியில், கடந்த முப்பது ஆண்டுகளாக துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி, கடந்த வாரம் பணிஒய்வு பெறுள்ளார். இவர், எவ்வளவு மழை பெய்தாலும் புயல் அடித்தாலும் வேலைக்குச் செல்லாமல் இருந்தது இல்லை. இவர் இருக்கும் இடத்தில், ஒரு குப்பை கூளத்தைகூடப் பார்க்க முடியாது. அதிகம் பேசாதவர், ஆனால் அசராத உழைப்பாளி இவர். கடமையில் அர்ப்பணிப்போடு இருந்திருக்கிறார். எந்த ஒரு புகாரும் இல்லாமல், சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். அவரைப் போல, ஒரு தொழிலாளி கிடைப்பது அரிது என்று மாநகராட்சி நிர்வாகிகள், பணி ஓய்வு விழாவில், மனம் திறந்து பாராட்டியுள்ளனர். அவ்விழா நடந்துகொண்டிருந்தபோது, அந்த மாவட்ட ஆட்சியர் மகேந்திர குமார் அவர்களின் வாகனம், அங்கு வந்து நின்றது. ஆட்சியர், ஏதோ ஒரு வேலையாக இந்த வழியாகப் போகிறார் என்று எல்லாரும் எண்ணினர். ஆனால் அவரோ, சுமித்ரா தேவி அவர்கள் அருகில் சென்று, அவரது பாதம் தொட்டு, தனது கண்களில் ஒற்றிக் கொண்டார். பின்னர் ஆரத்தழுவி கண்ணீர்விட்டார். அடுத்தடுத்து வாகனங்களில் வந்த, ஒரு பொறியியலாளர், ஒரு மருத்துவர் ஆகிய இருவருமே அவ்வாறே செய்தனர். ஆம், அவர்கள் மூவருமே சுமித்ராதேவி அவர்களின் மகன்கள். அப்போது கண்களைத் துடைத்தவாறு பேசிய மாவட்ட ஆட்சியர், எங்கள் மூவரையும் பெற்றெடுத்த இவர், சாதாரண தாய் அல்ல, தெய்வத்தாய். தனது இன்பங்களை மறந்து எங்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர். நாங்கள் மூவரும் நன்றாகப் படித்து, ஒவ்வொருவரும், ஒரு பொறுப்பில் இருந்தபோதும், ஒரு காலத்திலும் எங்கள் பெயரை அவர் சொன்னதே இல்லை. நாங்கள்தான் நல்ல நிலையில் இருக்கிறோமே, இந்த வேலையை விட்டுவிடுங்கள் என்று சொன்னபோது, இந்த வேலைதான் உங்களை இந்த நிலைக்குக்கொண்டு வந்தது ஆகவே அரசு அனுமதிக்கும்வரை, நான் இந்த வேலையை விடமாட்டேன் என்று, உறுதியுடன் சொன்னவர் என்று, மனம் உருகினார் ஆட்சியர். மகன்களை அனுப்பிவிட்டு, விழா நடந்த இடத்தை சுத்தம் செய்வதற்கு, கையில் விளக்குமாறுடன் சென்றாராம், அந்த தெய்வத்தாய், சுமித்ராதேவி (நன்றி தினமலர்).

கப்பல்கள் மற்றும் துறைமுகங்களில் பணியாற்றும் பெண்களின் மதிப்பை உணர வேண்டும் என, கடல்பணியாளர் உலக நாளில் அழைப்பு விடுக்கப்படுகின்றது. எந்தத் துறையில், எத்தகைய வேலை செய்தாலும், பெண்களின் சிறப்பை உணர்ந்து, அவர்களை மதித்துப் போற்றுவோம்.

வாரம் ஓர் அலசல் - கடல்பணியாளர் உலக நாள் ஜூன் 25

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2019, 15:47