தேடுதல்

மலாவி நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் மலாவி நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் 

21 கோடியே 80 இலட்சம் சிறார் தொழிலாளர்கள்

சிறார் தொழிலை எதிர்க்கும் உலக நாள் இப்புதனன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, கவலை தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது யுனிசெஃப் அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் பத்துக்கு ஒரு சிறாரும், ஆப்ரிக்கக் கண்டத்தில் ஐந்துக்கு ஒரு சிறாரும், தொழிலாளர்களாக உள்ளதாக ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

சிறார் தொழிலை எதிர்க்கும் உலக நாள் இப்புதன், ஜூன் 12ம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யுனிசெஃப் அமைப்பு, ஆயுத மோதல்கள் இடம்பெற்றுவரும் நாடுகளில், சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அதுவும் ஆபத்து நிறைந்ததாக இருப்பதாகவும், கவலையை வெளியிட்டுள்ளது.

உலகில் ஒரு கோடியே ஐம்பத்தைந்து இலட்சம் சிறார், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பான்மையினோர் சிறுமிகள் எனவும் கூறும் இவ்வறிக்கை, சிறார் தொழிலாளர்முறை அடிமைத்தனத்திற்கும், பாலியல் மற்றும் பொருளாதார அடிப்படையிலான சுரண்டல்களுக்கும் இட்டுச்செல்கின்றது எனவும் தெரிவிக்கின்றது.

சிறார் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி உழைத்துவரும் யுனிசெஃப் அமைப்பு, இந்தியாவின் 12 மாநிலங்களில், சிறார் தொழிலாளர் முறைக்கு எதிரான செயல்பாட்டுத் திட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும், 8 மாநிலங்கள் சிறார் தொழிலாளர் முறையை ஒழிக்கும் முயற்சிகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2019, 15:10