தென் மற்றும் வட கொரியத் தலைவர்களின் கூட்டம் - கோப்புப் படம் தென் மற்றும் வட கொரியத் தலைவர்களின் கூட்டம் - கோப்புப் படம் 

வட கொரியாவுக்கு, தென் கொரியா மனிதாபிமான உதவிகள்

ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு மற்றும், யுனிசெப், குழந்தை நல நிதி அமைப்பு வழியாக, 85 இலட்சம் டாலர் பெறுமான மனிதாபிமான உதவிகளை, வட கொரியாவுக்கு அனுப்புகிறது, தென் கொரியா

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பன்னாட்டு உதவி நிறுவனங்கள் வழியாக, 85 இலட்சம் டாலர் பெறுமான மனிதாபிமான உதவிகளை, வட கொரியாவுக்கு அனுப்புவதற்கு, தென் கொரியா தீர்மானித்துள்ளது.

வட கொரியாவில் நிலவும் வறட்சியினால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு உதவும் நோக்கத்தில், ஏறத்தாழ 45 இலட்சம் டாலர் பெறுமான உதவிகளை, உலக உணவு திட்ட அமைப்பு வழியாகவும், மேலும், 35 இலட்சம் டாலர் பெறுமான உதவிகளை, ஐ.நா.வின் யுனிசெப், குழந்தை நல நிதி அமைப்பு வழியாகவும் அனுப்புவதற்கு, தென் கொரிய அரசு திட்டமிட்டுள்ளது.

2017ம் ஆண்டில், தென் கொரியாவில், அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள் பணியேற்ற பின்னர், அந்நாடு, பன்னாட்டு உதவி நிறுவனங்கள் வழியாக, வட கொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவிருப்பது இதுவே முதன்முறையாகும்.

மேலும், இரஷ்யாவும், வட கொரியாவில் நிலவும் கடும் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கென, ஏறத்தாழ நான்காயிரம் டன் கோதுமையை அனுப்பத் தீர்மானித்துள்ளது. அதேநேரம், இப்புதனன்று, 2,895 டன் கோதுமை, வட கொரியா வந்துசேர்ந்துள்ளது என ஆசியச் செய்தி கூறுகின்றது. இந்த உதவி, ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு வழியாக ஆற்றப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2019, 15:44