தேடுதல்

Vatican News
விவசாய நிலம் நடுவில் பாதை விவசாய நிலம் நடுவில் பாதை  (AFP or licensors)

பூமியில் புதுமை : இயற்கை விவசாயம் நட்டம் தரவில்லை

சவுதி அரேபியாவில் பார்த்த வேலையைத் துறந்துவிட்டு, தமிழகம் திரும்பி, இயற்கை விவசாயத்தில் இலாபம் காணும் பெண் விவசாயி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் – பெரியபாளையம் சாலையில், பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார், அனுராதா என்பவர். சவுதி அரேபியாவில் பணிபுரிந்த அனுராதா அவர்கள், ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்தார். இவரது கணவர் சவுதியிலேயே தன் பணியைத் தொடர, அவரது வழிகாட்டுதலுடன், இயற்கை விவசாயத்தில் இறங்கினார், அனுராதா. பல்வேறு புத்தகங்களைப் படித்து, இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறையைத் தெரிந்துகொண்டார். மா, வாழை மரங்களுக்கிடையில் ஊடுபயிராக, எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா மரங்களை நட்டுள்ளார். தன் 8 ஏக்கர் நிலத்தையும், பசுமையாக வைத்திருப்பதுடன், 23 சென்டில், பண்ணைக் குட்டை அமைத்து, மழைநீரைச் சேமித்து, அதில், கட்லா, ரோகு, புல்கெண்டை மீன்களையும் வளர்த்து வருகிறார். இந்தக் குட்டை இருப்பதன் காரணமாக, கிணற்றிலும் நீர் வற்றுவதில்லை. மேலும், 15 பசு மாடு, கன்றுகளை வளர்ப்பதுடன், மாட்டுக் கொட்டகை அருகிலேயே, சிமென்ட் தொட்டியில், சாணம், கோமியம், இலைதழை, தென்னை மட்டை ஆகியவற்றை மட்கவைத்து, உரமாக பயன்படுத்துகிறார். மொத்தமாக, 8 ஏக்கரையும் சேர்த்து, ஆண்டுக்கு, 3 இலட்ச ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், இதில், 50 ஆயிரம் ரூபாய் செலவு போக, இரண்டரை இலட்ச ரூபாய் இலாபம் எனவும் கூறுகிறார், இயற்கை விவசாயி, அனுராதா.

21 June 2019, 13:55