வேப்பங்குளம் விவசாயி வேப்பங்குளம் விவசாயி 

பூமியில் புதுமை - ஒருங்கிணைந்த மேலாண்மையில் விவசாயம்

இந்தியாவில், 70%க்கும் அதிகமானவர்கள் குறுநில விவசாயிகள். இவர்களில் 50%க்கும்மேல் மழையை நம்பி வாழ்பவர்கள். கிராமப்புற சீரமைப்பு சாத்தியமே மற்றும், அது எளிதும்கூட. கிராம நீர்நிலைகளைச் சிறப்பாகச் செப்பனிட்டு பராமரிப்பது கிராமச் சீரமைப்புக்கு அடிப்படை

மேரி தெரேசா- வத்திக்கான்

இந்தியாவில் பல குறுநில விவசாயிகள், குறிப்பாக, வானம்பார்த்த பூமியிலுள்ள. விவசாயிகள், மழை பெய்தால் விதைக்கிறோம், விளைந்தால் அறுவடை செய்கிறோம் என்ற மனநிலையில்தான் பெரும்பாலும் வாழ்கின்றனர். மேலும், ஒரு விவசாயி தக்காளிச் சாகுபடி செய்தால், அந்த கிராமத்திலுள்ள அத்தனை விவசாயிகளும், அதையே சாகுபடி செய்கின்றனர். இதனால், சந்தையில் சரியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகளின் இந்த மனநிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், சில ஆண்டுகளுக்குமுன், தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள சிலர் இணைந்து, “தகவல் தொழில்நுட்பக் குழு” என்ற அமைப்பை உருவாக்கினர். அக்குழு, விவசாய மேலாண்மை நிலையங்கள் அமைக்கும் திட்டத்தையும் உருவாக்கி, அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களைச் சந்தித்து, இத்திட்டத்தை விளக்கினர். அவரின் அனுமதியின்பேரில் கடப்பா மாவட்டத்தில் முப்பது கிராமங்களில் இந்த திட்டம் நிறைய பலன்களை அளித்தது. அதேநேரம், இந்தக் குழுவின் இத்திட்டத்திற்கு தமிழக அரசிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனவே, இக்குழுவைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, தனது சொந்த கிராமமான வேப்பங்குளத்தில் இதனைச் செயல்படுத்த விரும்பினார். வேப்பங்குளம் கிராமத்தில், நான்கு குளங்களும், ஓர் ஆறும் இருக்கின்றன. இந்தக் குளங்களும், கால்வாய்களும் பராமரிப்பு இல்லாமல், சிதைந்து போய்க் கிடந்ததைக் கண்ட திருச்செல்வம் அவர்கள், இவற்றைச் சரிசெய்தால், மீண்டும் விவசாயத்தைச் சிறப்பாகச் செய்யலாம் என, தனது கிராம மக்களிடம் எடுத்துச் சொன்னார். இதற்கு கிராமத்தினரும் ஆர்வமுடன் ஒத்துழைப்பு வழங்கினர். எனவே, கிராமத்தினரின் பங்கேற்புடன், ஐந்து இலட்சம் ரூபாய் செலவில், நான்கு குளங்களும், பதினைந்து கிலோ மீட்டர் தூரமுள்ள ஏழு கால்வாய்களும் சரிசெய்யப்பட்டன. அந்தப் பணி முடிந்தநிலையில் மழை பெய்தது. குளங்கள் முக்கால்வாசி நிரம்பின. கிராமத்தினர், சீமைக் கருவேல மரங்கள் மண்டிக்கிடந்த நிலங்களைச் சுத்தப்படுத்தி உழவு செய்தார்கள். இதனால், அக்கிராமத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த போகத்தில் 250 ஏக்கரில் நெல் சாகுபடி நடந்திருக்கிறது. அடுத்து, வேப்பங்குளம் கிராமம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த, “விவசாயம் செயல் மேலாண்மை மையம்” அமைத்து அதன் வழியாக, டிஜிட்டல் கிராமங்களுக்கு எடுத்துக்காட்டாய் மாறும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது (நன்றி இந்து தமிழ் திசை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2019, 15:13