டெல்லியில் காய்கறி வியாபாரி டெல்லியில் காய்கறி வியாபாரி 

பூமியில் புதுமை : தின வருமானம் தரும் காய்கறிச் சாகுபடி

தனது குடும்பத்தினருடன் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாகக் காய்கறிச் சாகுபடியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் விவசாயி சுப்பிரமணியன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வறட்சி மிகுந்த அரியலூர் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வளவெட்டிக்குப்பம் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் விவசாயி சுப்பிரமணியன். இவர், தனது குடும்பத்தினருடன் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாகக் காய்கறிச் சாகுபடியில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். இவருக்கு உறுதுணையாக, இவருடைய மனைவி மலர்க்கொடி, மகன் அழகுதுரை ஆகியோரும் விவசாயப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

தத்தனூரிலிருந்து சுத்தமல்லி செல்லும் சாலையில் உள்ள அவரது தோட்டத்தில் தற்போது சுரைக்காய், புடலை, வெண்டை, கடலை ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்துள்ள அவர்கள், நாள் முழுவதும் தோட்டத்திலேயே வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வெண்டை, புடலை, சுரைக்காய் ஆகியவை அறுவடை நேரத்தில், இவற்றைப் பறிக்க ஆட்கள் வருவார்களா எனக் கேட்டால், “இல்லை அனைத்தையும் நாங்களே பறித்து விடுவோம்” எனக் கூறுகிறார் சுப்பிரமணியனின் மனைவி மலர்க்கொடி.

அதிகாலையில், காய்கறிகளைக் கடைகளுக்கு அனுப்பிவிட்டு ஒன்பது மணிக்கு மேல் வயலுக்கு வந்தால், மாலை வரை காய்கறிகள் அறுவடை செய்வது, மாலையில் அவற்றைக் கடைகளுக்கு அனுப்பும் வகையில் தரம் பிரித்து மூட்டைகளாகத் தயார்படுத்தி வைப்பதுதான் தற்போதைய அவர்களது வேலை.

குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடிய பயிர்களாகக் காய்கறிகள் உள்ளன. குறைவான தண்ணீரும் இதற்குப் போதுமானது. இந்தப் பயிர்கள், முப்பது நாட்களில் காய்ப்புக்கு வந்துவிடுகின்றன. தொடர்ந்து 2 மாதம் வரை காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

கடந்த 7 ஆண்டுகளாக, காய்கறிச் சாகுபடியில் ஈடுபட்டுவருகிறது சுப்பிரமணியனின் குடும்பம். இங்கு அறுவடையாகும் காய்கறிகளை, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். (நன்றி: இந்து தமிழ் திசை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2019, 15:37