தேடுதல்

தன்னார்வலர்களால் புத்துயிர் பெற்ற  ஆண்டிபாளையம் குளம் தன்னார்வலர்களால் புத்துயிர் பெற்ற ஆண்டிபாளையம் குளம் 

பூமியில் புதுமை:தன்னார்வலர்களால் புத்துயிர் பெற்ற குளம்

திருப்பூர், ஆண்டிபாளையம் குளம், தன்னார்வலர்கள் மற்றும், பொதுமக்களின் ஒன்றிணைந்த சேவையால், கடந்த பல ஆண்டுகளாக, வற்றாத நீர்நிலையாக மாறியிருக்கிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

தமிழகத்தின், திருப்பூர் நகரின் குளத்துப்புதுாரில், அறுபது ஏக்கர் நிலபரப்பிலுள்ள ஆண்டிபாளையம் குளம், தன்னார்வலர்கள் மற்றும், பொதுமக்களின் ஒன்றிணைந்த சேவையால், கடந்த பல ஆண்டுகளாக, வற்றாத நீர்நிலையாக மாறியிருக்கிறது. 1984ம் ஆண்டு நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தடுப்பணையில் இருந்து செல்லும் வாய்க்கால் சேதமடைந்ததால், இந்தக் குளத்துக்கு நீர் செல்லும் பாதையில், தடை ஏற்பட்டு குளம் வற்றியது. இருபது ஆண்டுகள் குளத்துக்கு நீர் சரிவர வரவில்லை. இதனால் குளத்தை மீட்க, 2005ம் ஆண்டில் 'வெற்றி' என்ற அமைப்பு களமிறங்கியது. இந்த அமைப்பும், ஊர் மக்களும் தீவிரமாக பணியில் இறங்கினர். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, தண்ணீர் வர இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதன் பயனாக, 2006ம் ஆண்டு குளம் நிரம்பியது. கடந்த, 2013ம் ஆண்டு, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி, தினமலர் இதழ், வெற்றி அமைப்பு உள்ளிட்ட தன்னார்வலர் அமைப்புகள், மற்றும் பொதுமக்கள் இணைந்து குளத்தை துார்வாரும் பணியை மேற்கொண்டனர். குளத்தை சுற்றிலும், 2 ஆயிரத்து 450 மீட்டர் நீளத்துக்கு கரை மற்றும் சாலை அமைக்கப்பட்டன. பல்லுயிர் பெருக்கத்துக்காக, நீர் தேங்கும் பரப்பில், இரண்டு திட்டுகள் அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. கரைகளைப் பலப்படுத்தும் வகையில், கருங்கற்கள் பதிக்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்து குளம் நிரம்பியது. கடந்த 2014ம் ஆண்டு முதல், தற்போது வரை குளத்தில் நீர் இருந்து வருகிறது. ஆண்டுதோறும், பருவமழையில் குளம் நிரம்பி வருகிறது. பருவமழை ஆரம்பிக்கும் முன்னதாக, நீர் வரும் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் அகற்றப்பட்டு வருகின்றன. குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், சுற்று வட்டார கிராமங்களில் விவசாயக் கிணறுகளில் மட்டம் குறையாமல் உள்ளது. வீடுகளில் உள்ள போர்வெல்களில் நீர்மட்டம் அதிகரித்து, தண்ணீர் பிரச்சனை குறைந்துள்ளது. தன்னார்வலர்கள் முயற்சித்தால், அரசின் உதவியை எதிர்பார்க்காமல், நீர்நிலைகளை நிரப்பலாம் என்பதற்கு, ஆண்டிபாளையம் குளம் ஓர் எடுத்துக்காட்டு (நன்றி-தினமலர்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2019, 14:24